Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

May 29, 2017

மீரான் மைதீனின் ‘கவர்னர் பெத்தா’ : மனம் நெரிக்கும் நினைவுகள்

பொறுப்புகளும் அவற்றின் பக்கக் கிளைகளென நீளும் மன அழுத்தங்களும்தான் நம்மை இருக்கவும் விடுவதில்லை பறக்கவும் விடுவதில்லை என்றால் யார்தான் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவற்றில் மூழ்கியோ மூழ்கியதிலிருந்து எழுந்த நினைவுகளிலிருந்தோ விடுபட முனைந்து வெற்றியோ தோல்வியோ தழுவுவது அவரவர்பாடாயிருக்கிறது.

கவர்னர் பெத்தா தொகுப்பை ஓரிரு மாதங்களுக்கு முன்பு வாங்கியிருப்பேன். அவ்வப்போது புத்தகத் தலைப்பு கண்ணில் படும்போதெல்லாம் பெரியம்மா ஒருத்தர் பெரும் பொறுப்பிலிருந்தோ அல்லது அதிகாரத் தோரணையினாலோ கவர்னர் என்று அழைக்கப்படுகிற கதையாயிருக்கும் என்றுபட்டிருக்கிறது. நேற்றைய போது தொகுப்பை வாசித்தபோதுதான் தெரிந்தது. பத்தே பத்து கதைகள் கொண்ட அழகிய தொகுப்பு என்பதும், பீர்மா பெத்தாவுக்குக் கவர்னர் பெத்தாவென்று பேர் வந்ததற்குக் காரணம் நாம் நினைத்ததில்லை என்பதும். இவையெல்லாம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எழுதிய கதைகள் என்கிறார் மீரான் மைதீன்.

அசன் கண்ணாப்பா கதையில் வருகிற கண்ணாப்பாவும் ஓட்டு கதையில் வருகிற ஷாபியின் உம்மம்மாவும் எண்பதுகளில் கிராமப்புறங்களில் குழந்தைகளாயிருந்தவர்களின் தாத்தா பாட்டிகள். கண்ணாப்பா மாதிரியான தாத்தா எனக்கு இல்லை என்பதும் உம்மம்மா மாதிரி கோமதிப்பாட்டி இருந்ததும் ஞாபகம் வந்தது. வெறும் கையும் காலுமே முடுக்கி ஓட்டும் வாகனமாய்க் கொண்டு வாயால் ஒலியெழுப்பி ஓடிய காலத்துக்குள் தள்ளிவிடுகின்றன இக்கதைகள்.

தெருவிலுள்ள சின்னப் பிள்ளைகள் ரசிக்க ரசிக்கக் கதை சொல்வதே தனது முதுமைக்கும் தனிமைக்குமான துணையும் சக்தியுமென இருந்த அசன் கண்ணாப்பாவை விட்டு, சின்னப் பிள்ளைகள் விலகிச் செல்ல அவர் எப்போதும் பெருமை பேசிவரும் பேரனே காரணமாகிவிடுகிறான். அவன் அரேபியாவிலிருந்து வாங்கிவந்த டிவி பெட்டி பிள்ளைகள் பெரியவர்களென எல்லாரையும் விழுங்கிவிடுகிறது. சீந்துவாரற்றுப் போய்விடுகிற கண்ணாப்பாவின் ஆற்றாமையும் புலம்பலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கால நகர்வினாலும் அறிவியல் வளர்ச்சியினாலுமான சில எந்திரங்களின் ஈர்ப்பின் முன் கண்ணாப்பாவோ அவர் பேரனோ சின்னப்பிள்ளைகளோ யார்தான் என்ன செய்யமுடிகிறது.

ஷாபிக்கும் அவனது உம்மம்மாவுக்குமான பிரியத்தைச் சொல்லித் தொடங்கும் கதை ஓட்டு’. ஆனால் அப்படியே போய்விடவில்லை. பள்ளியில் சேர்ந்த பிறகான அவனது கவனப்பாடு மாறும் திசையில்தான் கதை நகர்கிறது. பெரியவர்களது கட்சி அரசியல் மற்றும் தேர்தல் நடத்தைகள் என்பவை பிள்ளைகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பகடி செய்கிறது. பிள்ளைகளின் தேர்தல் களமும் தேர்தல் முறையும் பார்ப்பது நமக்கு கலகலப்பாக இருந்தாலும் கூடவே ஒரு பெருமூச்சும் வருவதை உணராமல் இருக்கமுடியாது.

மனம் பேதலித்துவிட்ட பால்ய கால நண்பனைப் பார்க்கக் கதைசொல்லி செல்கிற கணங்களும் அவன் குறித்த இளம் நினைவுகளுமாக பிணைந்து முயங்குகிற கதை யூசுப்’. கதையோட்டம் எனக்கு இரு நினைவுகளைக் கிளர்த்திற்று. குணசீலம் கோவிலை ஒட்டிய சுற்றிலும் வேலி கட்டிய மண்டபத்தில் சங்கிலியில் கட்டப்பட்ட காலோடு கிடந்த இளைஞன் ஒருவனுக்கு, ஒரு இளம் தம்பதி வாழைப்பழத்தை வீசி எறிந்து வேடிக்கை பார்த்ததும், அவன் அதை அப்படியே எடுத்து தோலோடு கடித்துத் தின்றதும் ஒன்று. ஏர்வாடி தர்காவினுள்ளே நுழைவாயிலை அடுத்து இடதுபுறமுள்ள ஒரு மண்டபத்தில் புர்க்கா அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி அரபி மந்திரம் எழுதப்பட்டிருந்த உள்ளறைச் சுவரின் மீது ஓடிச் சென்று மோதுவதும், பின் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்படியே வெளியே ஓடி வந்து கர்ணமடித்து மணலில் விழுவதுமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது மற்றொன்று. மௌனே... எம் புள்ளையைப் பாத்தியா?’ எனக் கேவும் யூசுப்பின் உம்மா குரல் எங்கெங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி கேவக்கூட ஒரு ஜீவனும் இல்லாதவர்களும் இருப்பார்கள்.

மூன்று பெண்களைப் பெற்று வளர்த்து கட்டிக்கொடுத்து, வரிசையாய் மாற்றி மாற்றிப் பிரசவம் என்று கவனித்துத் தேய்ந்து போகும் அஸ்மா – மொய்து சாகிபின் ஆற்றாமைகளையும் நில்லா ஓட்டங்களையும் சொல்கிற கதை சம்மந்தக்குடி. மூத்த மாப்பிள்ளையின் உம்மா என்கிற  ஜபர்தஸ்தால் சம்பந்திகளைக் கிறங்கடிக்கவேண்டும், பெண்டு பிள்ளைகளை விட்டு அரேபியாவிலேயே மகன் இருந்து மாதச் சம்பளத்தைத் தன் பெயருக்கு அனுப்பினால் போதும் என்றிருக்கிற சலீமின் உம்மாவும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஓரிரு மாதம் வரவும், தன் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சற்றே வளரந்த பின்னே முதல்முதலாய்ப் பார்க்கவுமாக வாய்க்கிற சலீமும், கருவுற்ற காலத்து மனைவியின் எளிய ஏக்கங்களைக் கூட மென்று முழுங்கியே கண்ணால் மட்டும் காட்ட முடிகிற ஜெரினாவும் பொருளீட்ட வேண்டி அரேபியா செல்கிற பலர் வீட்டு மாந்தர்கள்.

ஊர்விட்டு ஊர்வந்து பள்ளிவாசல் ஒன்றில் மோதியாராக இருக்கிறார் காதர் சாகிபு. ஒவ்வொரு வேளை உணவும் ஒவ்வொரு வீடு என்றும் பள்ளிவாசல் வராந்தாவே வசிப்பிடம் என்றும் ஆகிவிட்ட அவர் மீது  அவ்வூர்க்காரர்கள் காட்டும் இளக்காரமும் சீண்டலும் இலேசுப்பட்டதல்ல. அவர் படுக்கவென வாய்த்த பெஞ்சுகள்தான் அவ்வூரில் யாரொருவர் மௌத்தாகிப் போனாலும் கிடத்தப் பயன்படுபவை. ஆகவே அவருக்குப் படுக்கையும் நிச்சயமில்லை, உறக்கமும நித்தியமில்லை. ஏதோ நாலு காசு சேர்த்து ஊரிலிருக்கும் தன் பெண்ணை கொஞ்சம் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தால் போதும் என்று அனைத்தையும் தாங்கிக்கொண்ட காதர் சாகிபு, ஒரு கட்டத்தில் இங்கிருந்து போனால் போதும் என்று நினைத்தாலும் போகமுடியாமல் போகிறது. பொருளாதார வலுவற்ற ஒரு மனிதரின் கதை பெஞ்சு’.

பீர்மா பெத்தாவுக்கு அவரது வயதொத்த சினேகிதிகளுடனான பேச்சும் கிண்டலும் அத்தனை பிடித்தமானது. அவர்கள் ஊர் தர்காவுக்குக் கவர்னர் பாத்திமா பீவி வருகிறார் என்ற சேதி வந்ததும் ஊரே சுறுசுறுப்பாகிறது. அதிகாரிகள் பறக்கிறார்கள். சாலை மின்கம்பங்கள் சரியாகின்றன. பீர்மாவோ கவர்னரைப் பார்க்கவென்றே மகனிடம் புதுத்துணி கேட்டு மகன்-மருமகளிடம் கிண்டலுக்கு ஆளாகிறார். ஆனால் யாரும் நினைக்காத நேரத்தில் பீர்மாவின் கைபிடித்துக் குலுக்கிவிட்டுச் செல்கிறார் கவர்னர். அதனால் ஊர்க்காரர்களிடம் கவர்னர் பெத்தாவாகிவிட்ட பெருமையை மீறி தனது உம்மா – வாப்பாவின் மீது கோபம் வருகிறது. பொட்டப்புள்ள படிச்சு பெரிய கவர்னராட்டா ஆகப்போறான்னு நம்மளப் படிக்கவைக்காம உட்டுட்டுதுவோஎன வைகிறார். இக்கதையின் தலைப்பாக மட்டுமின்றி இத்தொகுப்பின் தலைப்பாகவுமாகிவிட்ட கவர்னர் பெத்தா இதன்மூலம் இன்னொரு அர்த்தம் தருகிறது.

எளிய சொற்களில் உரிய காட்சிப்படுத்தலோடு மிகைப்பாடு ஏதுமின்றி இயல்பாய்ப் போகின்றன மீரான் மைதீனின் இக்கதைகள். கதை மாந்தருக்கும் வாசகருக்குமான அணுக்கமும் அதனால் எழும் பிணக்கமும் நேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆத்துனாச்சி பெத்தாவையோ ஹமீது சாகிபையோ எங்கேனும் பார்த்தால் நாலு வார்த்தை கேட்காமல் போகமாட்டேன். இக்கதைகளில் மண்ணையும் மொழியையும் மக்களையும் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. மொழி அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. நினைவோட்டங்களும் நம் மனதுக்குள் சொல்லிக் கொள்வது போலவே இருக்கின்றன. வெகு நாட்களுக்குப் பின் மனதுக்கு நெருக்கமாக உணரச் செய்த தொகுப்பு இது. மீரான் மைதீன் வாழ்த்துக்குரியவர்.

-          -  யுவபாரதி மணிகண்டன்            29/05/2017


(கவர்னர் பெத்தா – மீரான் மைதீன் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ.100/-)

August 17, 2013

தலைவரின் புதுமனை புகுவிழா

புதிதாக வீடு ஒன்று கட்டியிருந்தார் நடமாடும் தெய்வம் நா. சாத்தப்பனார். புதுமனை புகுவிழாவிற்கு ஊரிலிருக்கும் சர்வகட்சிப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். தனதுதீவிர விசுவாசி மணிகண்டனை மட்டும் அழைக்கவில்லை. ‘நல்ல காரியம் பண்றோம். பெரிய பெரிய கட்சிக்காரங்களையெல்லாம் கூப்பிட்டிருக்கோம். இவன் வந்தா வந்திருக்கறது யார், இன்னார்னு பார்க்கமாட்டான். நம்ம பேர்ல இருக்குற விசுவாசத்துல எக்குத் தப்பா கோஷம் போடுவான்; ஏடாகூடமா பேனர் வைப்பான்.’ என்று யோசித்து மிகக் கவனமாகத் தவிர்த்துவிட்டார்.

நாளிதழ் பார்த்து விஷயம் அறிந்த விசுவாசி, ‘தலைவர் வெத்தலை பாக்கு வெச்சு அழைக்க நாம என்ன வெளிமனுஷனா? நாமா போயி நாம செய்ய வேண்டிய முறையைச் செஞ்சுட வேண்டியதுதான்என முடிவுசெய்தான். பேனருக்கு ஆகும் பெருஞ்செலவை நலம்விரும்பி நாராயண சங்கர் ஏற்றுக்கொள்ள, விடிய விடிய தன் மூளையைக் கசக்கிப் பிழிந்து வாசகத்தை வெளியிலெடுத்து, பேனரும் எழுதிமுடித்தான் விசுவாசி.

கொஞ்சம் தாமதமாகவே தலைவரின் வீட்டை அடைந்தான். புது வீடு களைகட்டியிருந்தது. சில கட்சிகளின் பிரமுகர்கள் ஏற்கனவே வந்துவிட்டிருந்தனர். தலைவர் வீட்டு வாசலை விடவும் இவன் பேனர் பெரியதாக இருந்ததால், வீட்டிற்குள் நுழைந்து தலைவரிடம் அதைக் காட்டமுடியாமல் போனது. ‘சரி! விழா முடிந்து தலைவர் வந்து இதைப் பார்க்கட்டும்என்று நினைத்து, உள்ளே வரும் எல்லோரும் பார்க்கம் வண்ணம் வாசலின் வலது பக்கமாக அதை வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் விசுவாசி. பலரையும் தள்ளிவிட்டுத் தலைவரிடம் போய், தான் கொண்டுவந்திருந்த எலுமிச்சம்பழத்தை பணிவோடு நீட்டினான்.

அதுவரை பலரோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சாத்தப்பனார் இவனைக் கண்டதும் கொஞ்சம் கலவரமானார். அவன் சமர்ப்பித்த எலுமிச்சம்பழத்தை ஏற்றுக்கொண்டவர், அவன் காதருகில் சொன்னார் :

பல கட்சிங்களைச் சேர்ந்த பெரிய மனுஷங்க எல்லாம் வர்றாங்க. எத்தனையோ முக்கியமான விஷயமெல்லாம் பேசுவோம். நீ யார்கிட்டேயும் ஒரு வார்த்தையும் பேசக்கூடாது மணி. உணர்ச்சிவசப்பட்டு கோஷமும் போடக்கூடாது. வாசல்ல போய் இருக்கணும். வந்திருக்கறவங்க காரை எல்லாம் பத்திரமா பார்த்துக்கணும். எல்லாரும் கிளம்புனப்புறம் நானா வந்து கூப்பிடுவேன். அதுவரைக்கும் உள்ளே வரக்கூடாது. சொல்றது புரியுதா?”

அப்படியே செய்றேன் தலைவா! வந்து பேனர்…”

அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்என்றபடியே வேறொரு பிரமுகரிடம் பேசப் போய்விட்டார் தலைவர். தலைவர் சொற்படி வாசலுக்குப் போன விசுவாசி, தான் வைத்த பேனரை பெருமையுடனும், தலைவர் பார்க்கவில்லையே என்ற ஆதங்கத்துடனும் ஒரு முறை பார்த்துவிட்டு, வரும் கார்களை ஒழுங்குபடுத்தும் வேலைகளில் ஈடுபட்டான்.

பின்னர் வந்த பல கட்சிக்காரர்களும் ஒரு நிமிடம் நின்று பேனரைப் பார்த்துவிட்டு வேகவேகமாக உள்ளே சென்றனர். வேறு ஏதோ வேலையாக அந்தத் தெருவைக் கடந்து சென்ற பல கட்சிக்காரர்களின் வாகனங்களும் கூட, பேனரைப் பார்த்ததும் தலைவர் வீட்டுக்கு வந்தன. வந்தவர்களும் இறங்கி வேகவேகமாக உள்ளே சென்றனர். உள்ளே சென்ற புதியவர்கள் எல்லாரும், ஏற்கனவே உள்ளே இருக்கும் தத்தம் கட்சிக்காரர்களின் காதுகளில் இரகசியமாக ஏதோ சொல்ல, பழையவர்களும் வெளியே வந்து பேனர் பார்த்துவிட்டுப் போனார்கள். விசுவாசிக்குப் பெருமை பிடிபடவில்லை.

சிறிது நேரத்தில் வாசற்கதவு உள்ளிருந்து மூடப்பட்டது. ‘ம். தலைவர்தான் சொன்னாரே. எல்லாரும் பெரிய மனுஷங்க. தலைவர்கிட்ட ஏதாவது முக்கியமான விஷயம் ரகசியமா பேச வேண்டியிருக்கும்என்று வாசலிலேயே நின்றான் விசுவாசி. உள்ளே பலரும் பலமாகக் கைதட்டுவது போல் ஓசை கேட்டது. ‘தலைவர் பிரமாதமா பேசினார் போல. நமக்குத்தான் அதைக் கேட்க கொடுத்து வைக்கலேஎன்று நொந்துகொண்டான். கொஞ்ச நேரத்தில் எல்லா கட்சிக்காரர்களும் வெளியே வந்து தத்தம் வாகனங்களை எடுத்துக்கொண்டுவேகவேகமாகப் புறப்பட்டனர். வெகுநேரமாகியும் தலைவர் மட்டும் வெளியே வரவில்லை. ஒரு சத்தமும் இல்லை.

தலைவர் சொன்னமாதிரி அவரா கூப்பிடாம உள்ளே போறது ஒரு விசுவாசிக்கு அழகில்லே. அவரும் வரலை. ம். தலைவருக்கும் காலைலே இருந்து ரொம்ப வேலை. இத்தனை கட்சிக்காரங்களை ஒத்தை ஆளா நின்னு பேசி சமாளிக்கறதுன்னா சாமானியமா? இல்லே, சாமானியன்களாலேதான் முடியுமா? அதனாலே, கொஞ்சம் அசந்திருப்பார். நாமளும் போயிட்டு சாய்ங்காலமா வந்து தலைவரைப் பார்த்துக்கலாம்என்றெண்ணிபடி நடையைக் கட்டினான் விசுவாசி.

தெருமுனையிலிருந்து தான் வைத்த பேனரை மீண்டும் ஒரு முறை பார்த்தான். அதில் இருந்தபொன்மனச் செம்மல் - புரட்சிக் கலைஞர் - முத்தமிழ் வித்தகர்செந்தமிழன்சாத்தப்பானார்கட்டி முடித்தார் வீட்டைஎட்டிப் பிடிப்பார் கோட்டைஎன்ற வாசகத்தோடு, கோட்டை வாசலில் கையசைத்து நிற்கும் தலைவரின் உருவத்தைக் கண்டவாறே மறைந்தான். தெருவின் மறுமுனையில் தலைவரது குடும்ப மருத்துவரின் கார் வெகுவேகமாக நுழைந்தது அவனுக்குத் தெரியாது.

யுவபாரதி

August 16, 2013

சந்தைக்கு வந்த சரித்திரம்

அலப்பறை தாங்காமல் அதிகாலையிலேயே வீட்டை விட்டு விரட்டப்பட்ட
விசுவாசி மணிகண்டன், போக்கிடம் வேறின்றி காய்கறிச் சந்தைக்குள்
திரிந்து கொண்டிருந்தான். எதேச்சையாக சந்தையின் வாசலைப்
பார்த்தவன் முகம் மலர்ந்தது. புது மல்லு வேட்டியும் மந்திரி வெள்ளை
(Minister White) சட்டையுமாக தனது மகிழூந்திலிருந்து இறங்கிக்
கொண்டிருந்தார் அவனது தலைவர் நடமாடும் தெய்வம் நா.சாத்தப்பனார்.
தலைவரை நோக்கி தலைதெறிக்க ஓடினான் விசுவாசி.

தூரத்திலேயே இவனைப் பார்த்துவிட்ட தலைவர், ‘ஐயோ! காய்கறி வாங்க
வந்தாலும் கருமம் விடாது போலிருக்கே. நம்ம பேரையும் 
ஃபோட்டோவையும் போட்டு தினமும் இவன் வைக்கிற பேனர்ங்களைப் 
பார்த்து கடுப்பானவங்க மொத்தம் எத்தனை பேரு இருக்காங்கன்னே 
தெரியலையே. நாள்பொழுதும் நாலு பேராவது எங்க இருந்தாவது வந்து 
நம்மை நாக்கவுட் பண்றாங்களே. இவன் ஃபோட்டோ ஷாப்புலே பண்ற
வேலைக்கெல்லாம், நாம மெடிக்கல் ஷாப்புக்கில்லே 
அலையவேண்டியிருக்கு. ஆத்தா! ஒனக்கு கோழியடிச்சு குழம்பு
வைக்கறேன். இன்னைக்காவது போட்டிருக்கிற வேட்டி சட்டைக்குக் கூட
வில்லங்கம் வர்றாம நல்லபடியா வீடு போய்ச் சேரணும்...’ என்று
வாய்விடாமல் புலம்பியபடி வந்தார். விசுவாசி அருகே வந்ததைப்
பார்த்ததும், ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’
என்று வாய்விட்டுப் பாடினார். தரணியே தன்னை வெறுத்தாலும்,
என்றுமே தன்னை வெறுக்காத தலைவரை நினைத்து மகிழ்ந்தான் விசுவாசி.

‘வணக்கம் தலைவா! நீங்க வந்ததாலே இந்த சந்தைக்கே சரித்திரப் புகழ்
வந்துடுச்சு. நல்லா இருக்கீங்களா?

‘வணக்கம் மணி. காலைலே இருந்து போன நிமிஷம் வரைக்கும் எந்தப்
பிரச்சனையுமில்ல. நல்லா இருக்கேன்.’

‘உங்க மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க, தலைவா! ஆமா, குடை
கொண்டு வரலையா? நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சிருந்தா நானாவது
கொண்டாந்திருப்பனே.’

தலைதூக்கி வானம் பார்த்தார் தலைவர்.

‘மழையுமில்லே. வெய்யிலுமில்லே. குடை எதுக்குப்பா?’

‘வானத்தைப் பாக்காதீங்க தலைவா! மண்ணைப் பாருங்க. எந்த
நேரத்திலயும் தொண்டன் ஒருத்தன் குடைபிடிக்க கனகம்பீரமா நடந்து
வர்றதுதானே தலைவருக்கு அழகு?

சந்தையில் தென்பட்ட ஓரளவு கூட்டத்தைப் பார்த்ததும் விசுவாசிக்குத்
தலைகால் புரியவில்லை. வாயாலும் கையாலும் தலைவரின் பாதைக்கு
வழிவிடச் சொல்லி மக்களை விரட்டித் தள்ளிக் கொண்டிருந்தான்.

‘ம். நகரு... நகரு... நம்ம தலைவர் வர்றாரு... நகருப்பா... நகரு... நகரு...’

‘ஏன் இப்படிப் பண்றே மணி? அவங்க அந்தப் பக்கமா போனா, நாம இந்தப்
பக்கமா போவோமேப்பா.’

‘அப்படியெல்லாம் மனசை விட்டுறாதீங்க தலைவா! இப்படில்லாம்
ஜபர்தஸ்து பண்ணாத்தான் இந்த சனங்க உங்களை மதிப்பாங்க.’

‘மதிப்பு, மரியாதை எல்லாம் தானா வரணும்ப்பா. நாமளா கேட்டுவாங்கக்
கூடாது.’

‘மரியாதையைத் தனக்குன்னு கேட்டு வாங்கினாத்தான் தப்பு.
தலைவனுக்காகக் கேட்டு வாங்கறதுலே தப்பேயில்லே, தலைவா!’

‘ம். என்னால உனக்கு வர்ற ‘டயலாக்’ எல்லாம் நல்லாத்தான் இருக்கு.
ஆனா, உன்னால எனக்கு விழுற ‘பஞ்ச்’தான் தாங்கமுடியலே.’

தலைவர் சொன்னதைக் காதில் வாங்காமல், மீண்டும் மக்கள் பக்கம்
திரும்பி வழிவிட்டுப் போகச் சொல்லி மிரட்டத் தொடங்கினான் விசுவாசி.
‘ம்கூம். இனிமேலும் இங்க இருக்குறது நமக்கு நல்லதில்லே’ என்று
முடிவெடுத்த தலைவர் சாத்தப்பனார், மக்களுக்கிடையே கிடைத்த
மிதிவண்டி இடைவெளியில் (Cycle Gap) நுழைந்து மறைந்து போனார்.

சற்று நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்த விசுவாசி, தலைவரைக் காணாமல்
தவித்துப் போனான்; தேடித் தேடித் துவண்டு போனான். சற்று நேரத்தில்,
தன்னைத் தேற்றிக் கொண்டு, “ ‘சந்தைக்குள் வந்து சடுதியில் மறைந்த
சரித்திரத் தலைவர் சாதனை நாயகர் சாத்தப்பனார் வாழ்க! வாழ்க!’ என்று
ஒரு பேனர் எழுதி இந்த சந்தை வாசல்லேயே வைச்சிட்டு அதுக்குக்
கீழேயே நாமும் உக்காந்துடுவோம். இனிமே, சந்தைக்கு வர்ற
சனங்களாவது தலைவரது பெருமை அறிந்து, அவருக்கு மரியாதை
செய்யட்டும்’ என்று எண்ணியபடி நடக்கத் தொடங்கினான் அவன்.


- யுவபாரதி