August 16, 2013

சந்தைக்கு வந்த சரித்திரம்

அலப்பறை தாங்காமல் அதிகாலையிலேயே வீட்டை விட்டு விரட்டப்பட்ட
விசுவாசி மணிகண்டன், போக்கிடம் வேறின்றி காய்கறிச் சந்தைக்குள்
திரிந்து கொண்டிருந்தான். எதேச்சையாக சந்தையின் வாசலைப்
பார்த்தவன் முகம் மலர்ந்தது. புது மல்லு வேட்டியும் மந்திரி வெள்ளை
(Minister White) சட்டையுமாக தனது மகிழூந்திலிருந்து இறங்கிக்
கொண்டிருந்தார் அவனது தலைவர் நடமாடும் தெய்வம் நா.சாத்தப்பனார்.
தலைவரை நோக்கி தலைதெறிக்க ஓடினான் விசுவாசி.

தூரத்திலேயே இவனைப் பார்த்துவிட்ட தலைவர், ‘ஐயோ! காய்கறி வாங்க
வந்தாலும் கருமம் விடாது போலிருக்கே. நம்ம பேரையும் 
ஃபோட்டோவையும் போட்டு தினமும் இவன் வைக்கிற பேனர்ங்களைப் 
பார்த்து கடுப்பானவங்க மொத்தம் எத்தனை பேரு இருக்காங்கன்னே 
தெரியலையே. நாள்பொழுதும் நாலு பேராவது எங்க இருந்தாவது வந்து 
நம்மை நாக்கவுட் பண்றாங்களே. இவன் ஃபோட்டோ ஷாப்புலே பண்ற
வேலைக்கெல்லாம், நாம மெடிக்கல் ஷாப்புக்கில்லே 
அலையவேண்டியிருக்கு. ஆத்தா! ஒனக்கு கோழியடிச்சு குழம்பு
வைக்கறேன். இன்னைக்காவது போட்டிருக்கிற வேட்டி சட்டைக்குக் கூட
வில்லங்கம் வர்றாம நல்லபடியா வீடு போய்ச் சேரணும்...’ என்று
வாய்விடாமல் புலம்பியபடி வந்தார். விசுவாசி அருகே வந்ததைப்
பார்த்ததும், ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’
என்று வாய்விட்டுப் பாடினார். தரணியே தன்னை வெறுத்தாலும்,
என்றுமே தன்னை வெறுக்காத தலைவரை நினைத்து மகிழ்ந்தான் விசுவாசி.

‘வணக்கம் தலைவா! நீங்க வந்ததாலே இந்த சந்தைக்கே சரித்திரப் புகழ்
வந்துடுச்சு. நல்லா இருக்கீங்களா?

‘வணக்கம் மணி. காலைலே இருந்து போன நிமிஷம் வரைக்கும் எந்தப்
பிரச்சனையுமில்ல. நல்லா இருக்கேன்.’

‘உங்க மனசுக்கு நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க, தலைவா! ஆமா, குடை
கொண்டு வரலையா? நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சிருந்தா நானாவது
கொண்டாந்திருப்பனே.’

தலைதூக்கி வானம் பார்த்தார் தலைவர்.

‘மழையுமில்லே. வெய்யிலுமில்லே. குடை எதுக்குப்பா?’

‘வானத்தைப் பாக்காதீங்க தலைவா! மண்ணைப் பாருங்க. எந்த
நேரத்திலயும் தொண்டன் ஒருத்தன் குடைபிடிக்க கனகம்பீரமா நடந்து
வர்றதுதானே தலைவருக்கு அழகு?

சந்தையில் தென்பட்ட ஓரளவு கூட்டத்தைப் பார்த்ததும் விசுவாசிக்குத்
தலைகால் புரியவில்லை. வாயாலும் கையாலும் தலைவரின் பாதைக்கு
வழிவிடச் சொல்லி மக்களை விரட்டித் தள்ளிக் கொண்டிருந்தான்.

‘ம். நகரு... நகரு... நம்ம தலைவர் வர்றாரு... நகருப்பா... நகரு... நகரு...’

‘ஏன் இப்படிப் பண்றே மணி? அவங்க அந்தப் பக்கமா போனா, நாம இந்தப்
பக்கமா போவோமேப்பா.’

‘அப்படியெல்லாம் மனசை விட்டுறாதீங்க தலைவா! இப்படில்லாம்
ஜபர்தஸ்து பண்ணாத்தான் இந்த சனங்க உங்களை மதிப்பாங்க.’

‘மதிப்பு, மரியாதை எல்லாம் தானா வரணும்ப்பா. நாமளா கேட்டுவாங்கக்
கூடாது.’

‘மரியாதையைத் தனக்குன்னு கேட்டு வாங்கினாத்தான் தப்பு.
தலைவனுக்காகக் கேட்டு வாங்கறதுலே தப்பேயில்லே, தலைவா!’

‘ம். என்னால உனக்கு வர்ற ‘டயலாக்’ எல்லாம் நல்லாத்தான் இருக்கு.
ஆனா, உன்னால எனக்கு விழுற ‘பஞ்ச்’தான் தாங்கமுடியலே.’

தலைவர் சொன்னதைக் காதில் வாங்காமல், மீண்டும் மக்கள் பக்கம்
திரும்பி வழிவிட்டுப் போகச் சொல்லி மிரட்டத் தொடங்கினான் விசுவாசி.
‘ம்கூம். இனிமேலும் இங்க இருக்குறது நமக்கு நல்லதில்லே’ என்று
முடிவெடுத்த தலைவர் சாத்தப்பனார், மக்களுக்கிடையே கிடைத்த
மிதிவண்டி இடைவெளியில் (Cycle Gap) நுழைந்து மறைந்து போனார்.

சற்று நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்த விசுவாசி, தலைவரைக் காணாமல்
தவித்துப் போனான்; தேடித் தேடித் துவண்டு போனான். சற்று நேரத்தில்,
தன்னைத் தேற்றிக் கொண்டு, “ ‘சந்தைக்குள் வந்து சடுதியில் மறைந்த
சரித்திரத் தலைவர் சாதனை நாயகர் சாத்தப்பனார் வாழ்க! வாழ்க!’ என்று
ஒரு பேனர் எழுதி இந்த சந்தை வாசல்லேயே வைச்சிட்டு அதுக்குக்
கீழேயே நாமும் உக்காந்துடுவோம். இனிமே, சந்தைக்கு வர்ற
சனங்களாவது தலைவரது பெருமை அறிந்து, அவருக்கு மரியாதை
செய்யட்டும்’ என்று எண்ணியபடி நடக்கத் தொடங்கினான் அவன்.


- யுவபாரதி 

No comments: