புதிதாக வீடு
ஒன்று கட்டியிருந்தார்
நடமாடும் தெய்வம்
நா. சாத்தப்பனார்.
புதுமனை புகுவிழாவிற்கு
ஊரிலிருக்கும் சர்வகட்சிப்
பிரமுகர்களுக்கும் அழைப்பு
விடுத்திருந்தார். தனது
‘தீ’விர
விசுவாசி மணிகண்டனை
மட்டும் அழைக்கவில்லை.
‘நல்ல காரியம்
பண்றோம். பெரிய
பெரிய கட்சிக்காரங்களையெல்லாம் கூப்பிட்டிருக்கோம். இவன்
வந்தா வந்திருக்கறது
யார், இன்னார்னு
பார்க்கமாட்டான். நம்ம
பேர்ல இருக்குற
விசுவாசத்துல எக்குத்
தப்பா கோஷம்
போடுவான்; ஏடாகூடமா
பேனர் வைப்பான்.’
என்று யோசித்து
மிகக் கவனமாகத்
தவிர்த்துவிட்டார்.
நாளிதழ் பார்த்து
விஷயம் அறிந்த
விசுவாசி, ‘தலைவர்
வெத்தலை பாக்கு
வெச்சு அழைக்க
நாம என்ன
வெளிமனுஷனா? நாமா
போயி நாம
செய்ய வேண்டிய
முறையைச் செஞ்சுட வேண்டியதுதான்’ என
முடிவுசெய்தான். பேனருக்கு
ஆகும் பெருஞ்செலவை
நலம்விரும்பி நாராயண
சங்கர் ஏற்றுக்கொள்ள,
விடிய விடிய
தன் மூளையைக்
கசக்கிப் பிழிந்து
வாசகத்தை வெளியிலெடுத்து,
பேனரும் எழுதிமுடித்தான்
விசுவாசி.
கொஞ்சம் தாமதமாகவே
தலைவரின் வீட்டை
அடைந்தான். புது
வீடு களைகட்டியிருந்தது.
சில கட்சிகளின்
பிரமுகர்கள் ஏற்கனவே
வந்துவிட்டிருந்தனர். தலைவர்
வீட்டு வாசலை
விடவும் இவன்
பேனர் பெரியதாக
இருந்ததால், வீட்டிற்குள்
நுழைந்து தலைவரிடம்
அதைக் காட்டமுடியாமல்
போனது. ‘சரி!
விழா முடிந்து
தலைவர் வந்து
இதைப் பார்க்கட்டும்’
என்று நினைத்து,
உள்ளே வரும்
எல்லோரும் பார்க்கம்
வண்ணம் வாசலின்
வலது பக்கமாக
அதை வைத்துவிட்டு
வீட்டிற்குள் நுழைந்தான்
விசுவாசி. பலரையும்
தள்ளிவிட்டுத் தலைவரிடம்
போய், தான்
கொண்டுவந்திருந்த எலுமிச்சம்பழத்தை
பணிவோடு நீட்டினான்.
அதுவரை பலரோடு
சிரித்துப் பேசிக்கொண்டிருந்த
சாத்தப்பனார் இவனைக்
கண்டதும் கொஞ்சம்
கலவரமானார். அவன்
சமர்ப்பித்த எலுமிச்சம்பழத்தை
ஏற்றுக்கொண்டவர், அவன்
காதருகில் சொன்னார்
:
“பல கட்சிங்களைச் சேர்ந்த
பெரிய மனுஷங்க
எல்லாம் வர்றாங்க.
எத்தனையோ முக்கியமான
விஷயமெல்லாம் பேசுவோம்.
நீ யார்கிட்டேயும்
ஒரு வார்த்தையும்
பேசக்கூடாது மணி.
உணர்ச்சிவசப்பட்டு கோஷமும்
போடக்கூடாது. வாசல்ல
போய் இருக்கணும்.
வந்திருக்கறவங்க காரை
எல்லாம் பத்திரமா
பார்த்துக்கணும். எல்லாரும்
கிளம்புனப்புறம் நானா
வந்து கூப்பிடுவேன்.
அதுவரைக்கும் உள்ளே
வரக்கூடாது. சொல்றது
புரியுதா?”
“அப்படியே செய்றேன் தலைவா!
வந்து பேனர்…”
“அதெல்லாம் அப்புறம்
பார்த்துக்கலாம்” என்றபடியே
வேறொரு பிரமுகரிடம்
பேசப் போய்விட்டார்
தலைவர். தலைவர்
சொற்படி வாசலுக்குப்
போன விசுவாசி,
தான் வைத்த
பேனரை பெருமையுடனும்,
தலைவர் பார்க்கவில்லையே
என்ற ஆதங்கத்துடனும்
ஒரு முறை
பார்த்துவிட்டு, வரும்
கார்களை ஒழுங்குபடுத்தும்
வேலைகளில் ஈடுபட்டான்.
பின்னர் வந்த
பல கட்சிக்காரர்களும்
ஒரு நிமிடம்
நின்று பேனரைப்
பார்த்துவிட்டு வேகவேகமாக
உள்ளே சென்றனர்.
வேறு ஏதோ
வேலையாக அந்தத்
தெருவைக் கடந்து
சென்ற பல
கட்சிக்காரர்களின் வாகனங்களும்
கூட, பேனரைப்
பார்த்ததும் தலைவர்
வீட்டுக்கு வந்தன.
வந்தவர்களும் இறங்கி
வேகவேகமாக உள்ளே
சென்றனர். உள்ளே
சென்ற புதியவர்கள்
எல்லாரும், ஏற்கனவே
உள்ளே இருக்கும்
தத்தம் கட்சிக்காரர்களின்
காதுகளில் இரகசியமாக
ஏதோ சொல்ல,
பழையவர்களும் வெளியே
வந்து பேனர்
பார்த்துவிட்டுப் போனார்கள்.
விசுவாசிக்குப் பெருமை
பிடிபடவில்லை.
சிறிது நேரத்தில்
வாசற்கதவு உள்ளிருந்து
மூடப்பட்டது. ‘ம்.
தலைவர்தான் சொன்னாரே.
எல்லாரும் பெரிய
மனுஷங்க. தலைவர்கிட்ட
ஏதாவது முக்கியமான
விஷயம் ரகசியமா
பேச வேண்டியிருக்கும்’
என்று வாசலிலேயே
நின்றான் விசுவாசி.
உள்ளே பலரும்
பலமாகக் கைதட்டுவது
போல் ஓசை
கேட்டது. ‘தலைவர்
பிரமாதமா பேசினார்
போல. நமக்குத்தான்
அதைக் கேட்க
கொடுத்து வைக்கலே’
என்று நொந்துகொண்டான்.
கொஞ்ச நேரத்தில்
எல்லா கட்சிக்காரர்களும்
வெளியே வந்து
தத்தம் வாகனங்களை
எடுத்துக்கொண்டுவேகவேகமாகப் புறப்பட்டனர்.
வெகுநேரமாகியும் தலைவர்
மட்டும் வெளியே
வரவில்லை. ஒரு
சத்தமும் இல்லை.
‘தலைவர் சொன்னமாதிரி அவரா
கூப்பிடாம உள்ளே
போறது ஒரு
விசுவாசிக்கு அழகில்லே.
அவரும் வரலை.
ம். தலைவருக்கும்
காலைலே இருந்து
ரொம்ப வேலை.
இத்தனை கட்சிக்காரங்களை
ஒத்தை ஆளா
நின்னு பேசி
சமாளிக்கறதுன்னா சாமானியமா?
இல்லே, சாமானியன்களாலேதான்
முடியுமா? அதனாலே,
கொஞ்சம் அசந்திருப்பார்.
நாமளும் போயிட்டு
சாய்ங்காலமா வந்து
தலைவரைப் பார்த்துக்கலாம்’
என்றெண்ணிபடி நடையைக்
கட்டினான் விசுவாசி.
தெருமுனையிலிருந்து தான்
வைத்த பேனரை
மீண்டும் ஒரு
முறை பார்த்தான்.
அதில் இருந்த
“பொன்மனச் செம்மல்
- புரட்சிக் கலைஞர்
- முத்தமிழ் வித்தகர்
– செந்தமிழன் – சாத்தப்பானார்
– கட்டி முடித்தார்
வீட்டை – எட்டிப்
பிடிப்பார் கோட்டை”
என்ற வாசகத்தோடு,
கோட்டை வாசலில்
கையசைத்து நிற்கும்
தலைவரின் உருவத்தைக்
கண்டவாறே மறைந்தான்.
தெருவின் மறுமுனையில்
தலைவரது குடும்ப
மருத்துவரின் கார்
வெகுவேகமாக நுழைந்தது
அவனுக்குத் தெரியாது.
- யுவபாரதி
No comments:
Post a Comment