Showing posts with label உசிலம்பட்டி. Show all posts
Showing posts with label உசிலம்பட்டி. Show all posts

August 15, 2013

என் பாட்டனை நினைவூட்டுகிற சுதந்திர தினம்

நம்மில் சிலருக்குப் பூர்வீகம் ஒன்றாகவும் சொந்த ஊர் என்று சொல்வது வேறாகவும் இருக்கும். எனக்கும் அப்படித்தான். என் தந்தை வழிப் பாட்டனுக்குப் - அப்பாவுக்கு அப்பா - பூர்வீகம் என்றால், அதுசேரர் கொங்கு வைகாவூர்என்று அருணகிரிநாதர் குறிப்பிடும் பழநிக்கு அருகிலுள்ள கணக்கன்பட்டி. ‘வெண்ணிலா கபடிக்குழுதிரைப்படம் பார்த்தவர்களுக்கு இந்த ஊரின் பேர் தெரிந்திருக்கும். என் தாத்தாவின் முழுப்பேர் கணக்கன்பட்டி இரா. இராஜாமணி. சுருக்கமாக கே.ஆர்.ராஜாமணி என்று எழுதுவார். அங்கிருந்த வீட்டை விற்று அதை வைத்து மடத்துக்குளத்தில் உணவகம் நடத்திவந்திருக்கிறார்

நாட்டில் சுதந்திரப் போராட்டம் நடந்துவந்த காலம். காங்கிரசில் சேர்ந்து உண்ணாவிரதம், மறியல், சிறு சிறு சிறைவாசம் என்று இருந்திருக்கிறார் தாத்தா. ஒழிந்த நேரங்களில் நண்பர்களோடு. இவர் இப்படி இருந்த காலங்களில் உணவகம் அவரது ஒன்று விட்ட சகோதரர்கள் மேற்பார்வையில் இருந்திருக்கிறது. தாத்தாவிற்கு உடன் பிறந்தது ஒரு சகோதரி மட்டும்தான். அவருக்கும் பச்சநாயக்கன்பட்டியில் மணம் முடித்துவிட்ட நிலையில் தாத்தாவிற்கு காலைக் கட்டிப்போடும் வேறு கடமைகள் இருக்கவில்லை. தாத்தா எங்கிருந்தாலும் உணவகத்திலிருந்து வீட்டிற்குத் தவறாமல் உணவு வந்துவிடும். கைக்குழந்தைகளைக் கையில் வைத்திருந்த பாட்டிக்கும் வேறு தேவையிருக்கவில்லை. நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில், இவரது கடையிலிருந்தும் இவருக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டிருக்கிறது.

வாழ்ந்து கெட்ட ஊரில் வாழப் பிடிக்கவில்லை. எட்டாம் வகுப்பு படித்தவர் என்பார்கள். என்றாலும், உணவுத் தொழிலைத் தவிர வேறொன்றும் தெரியாது. ‘என் உறவினர் ஒருவர் மதுரை பக்கம் உசிலம்பட்டியில் உணவகம் நடத்திவருகிறார், அங்கே செல்லுங்கள்என்று காங்கிரஸ் நண்பர் ஒருவர் சொல்ல, அதன்படி பாட்டி, குழந்தைகளைக் கொடுமுடியிலிருந்த பாட்டியின் சகோதரர் வீட்டில் இருத்திவிட்டு, தாத்தா மட்டும் உசிலம்பட்டி வந்தார். நண்பரின் உறவினர நடத்திவந்த உணவகத்தில் சரக்கு மாஸ்டரானார். சில காலம் கழித்து குடும்பத்தையும் உசிலம்பட்டிக்கே அழைத்துக்கொண்டார். இறக்கும் வரை அங்கேயே வாழ்ந்தார். இப்படித்தான் எனக்கு உசிலம்பட்டி சொந்த ஊர் ஆனது.

தாத்தா நல்ல உயரம். சற்றே சிவந்த நிறம். என் தாத்தா என்றாலே என் நினைவில் இருப்பது அழுக்குத் தோய்ந்த ஆரஞ்சு நிறப் பெரிய பை; அதில் உள்ளடங்கியிருக்கும் அன்னக்குத்தி; வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் ஜல்லிக்கரண்டி; பெரிய குடை. வயதான காலத்தில் அவருக்கு வாக்கிங் ஸ்டிக்கும் அந்தக் குடைதான். அப்பாவுக்கு வேலை கிடைத்து நாங்கள் வெளியூர் வந்துவிட்ட காலங்களில் கோடை விடுமுறையில்தான் உசிலம்பட்டி தாத்தா வீடு. சொல்லியும் கேட்கவில்லை. உடல் இயன்ற வரை உழைத்தார். ஒச்சாத் தேவர் மறைந்த சில வருடங்களில் உணவகம் போய், அவ்விடத்தில் ஈரடுக்குக் கட்டடம் கட்டப்பட்டு, இப்போது அங்கு பல கடைகள் இருக்கின்றன.

தாத்தா யாரிடமும் அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. ஞாயிற்றுக் கிழமை மதியம் கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருக்கையில், அவரது நண்பர் ஒருவர் கையில் பல நாள் நாளிதழ்களோடு வருவார். ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து வாசித்துக் கொண்டிருப்பார்கள். நடுவில் காபி சொல்லிச் சாப்பிடுவார்கள். நடுவில் செய்திகள் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசுவார்கள். அதற்கு மேல் வேறு பேச்சு இருக்காது. மூன்று மணி நேரம் அமர்ந்திருந்தாலும் அதற்குள் பத்து நிமிடம் பேசினார்கள் என்றால் அதிகம். அவர் வர முடியாத ஞாயிறுகளில் இவர் போவார். அங்கும் இதுதான் நடக்கும் போல.

தாத்தா கடன் வாங்கமாட்டார். குடும்பத்தின் உணவுத் தேவை, கொஞ்சம் உடைகளின் தேவை தவிர்த்து வேறெது குறித்தும் கவனம் கொண்டதில்லை என்பார்கள். சொத்து சுகம் சேர்க்கவில்லை. கடைசி வரை வாடகை வீடுதான். காந்தியும் நேருவும் அருகருகே அமர்ந்தபடி பேசுகிற, ஓரமெல்லாம் வெள்ளைப்பூச்சி அரித்த, ஒரு கருப்பு வெள்ளை புகைப்படம் வீட்டின் நடுவில் இருந்தது. பக்கத்தில் பச்சைச் சேலை அணிந்த இந்திராகாந்தியின் படம் ஒன்றும் இருந்தது. தாத்தாவிடம் அடிக்கடி அவரது வயதொத்த பெரியவர்கள் கூறிவந்த போதும், உடல் நன்றாக இருந்த வரையில், தியாகி பென்ஷனுக்கு விண்ணப்பிக்கவில்லைஅவர் உடல் தளர்ந்த காலத்தில்நலம்விரும்பிகள் சிலர் அவரை வற்புறுத்தி, அவருக்காக முயற்சித்தனர். ஈடேறவில்லை. அதில் அவருக்கும் வருத்தமில்லை. எங்களுக்கும் வருத்தமில்லை. ஆவணங்களைத் தாத்தா காத்து வைக்கவும் இல்லை. சாட்சி ஒப்பமிடச் சக தியாகிகள் யாரும் உயிருடனும் இல்லை.

வருடமெல்லாம் அழுக்கு வேட்டியும் இருண்ட சமையலறையிலுமாய் இருக்கும் என் தாத்தா, அப்போதெல்லாம் சுதந்திர தினத்தன்று மட்டும் பளிச்சென்று இருப்பார். பக்கத்திலுள்ள நாடார் சரஸ்வதி பள்ளியிலிருந்து முதல்நாளே வந்து அழைத்துவிட்டுப் போவார்கள். இவரைப் போன்ற நான்கைந்து தியாகிகளை வரவேற்று, மரியாதை செய்து, ஒவ்வொரு வருடமும் இவர்களில் ஒருவரை வைத்துக் கொடியேற்றுவார்கள். இளம் வயதில் இருமுறை பார்த்த ஞாபகம் இருக்கிறது. இப்போது இந்தப் பழக்கம் இருக்கிறதா தெரியவில்லை.

என் தாத்தா இறந்து பத்து வருடங்களாகின்றன. அன்று, அவர் மறைந்த தகவல் எட்டி, வேறொரு ஊரில் இருந்த நான் வந்துவிட்டேன். இன்னொரு ஊருக்குச் சென்றிருந்த என் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்க இயலவில்லை. இப்போது போல் கைபேசிகளும் இல்லை. என் தாத்தாவிற்கு ஒரு மகன் - என் அப்பா; நான்கு மகள்கள். அப்பா உரிய நேரத்தில் வர இயலாத நிலையில், மூத்த பேரனான நானே என் தாத்தாவிற்குரிய இறுதிக் கடன்களைச் செய்ய நேர்ந்தது.

என் பாட்டன் குறித்த நினைவுகளைப் பகிரவைத்த இந்த சுதந்திர தினத்திற்கு நன்றி

- யுவபாரதி