Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

December 08, 2014

அம்பேத்கரும் ஒரு கிராமக் குடியரசும்

வைகை அணையின் இருப்பிடம் குறித்து யாருக்கும் சொல்லவேண்டியதில்லை. தேனி மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய சுற்றுலாத்தலம் அது. ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணைக்குச் செல்லும் வழியில் கிளை பிரிந்து செல்லும் ஒரு சிற்றூர் சீரங்கபுரம். விஜயநகரப் பேரரசின் இறுதிக்கட்ட அரசர்களில் ஶ்ரீரங்கராயர் என்ற பெயரில் மூவர் உண்டு. அவர்களில் ஒருவர் பெயரால் நிறுவப்பட்ட ஊராக இருக்கலாம்.
நண்பர் ஒருவருடன் பேசுகையில் அவ்வூர் பற்றிச் சொன்னார். அதைக் கேட்டபோது மனதில் வேதனை கவிந்த அதே கணம், நம் நாட்டில் இன்றும் பல கிராமங்களின் நடைமுறைதானே இது என்ற எண்ணமும் எழுந்தது. எந்தவொரு விஷயத்திலும் நடைமுறையை இயல்பானது என்று நம் மனம் பழக்கப்பட்டு, அது குறித்து வருந்துவதையும் விட்டுவிடுகிறது. அப்படியே சாதிய ஏற்றத்தாழ்வையும், அதன்வழியான ஒடுக்குமுறையையும்  கவனிக்கத் தவறிவிடுகிறது. கவனத்திற்கு வந்தாலும் பெரிதாய்க் கவலைப்படுவதில்லை.

‘இந்துக்களும் பொது மனசாட்சி இல்லாமையும்’ என்ற கட்டுரையில் மேல்நாட்டு அடிமை முறையையும், நம்நாட்டுச் சாதி முறையையும் ஒப்பிட்டு அம்பேத்கர் சொல்வார் – “சட்டப்படி ஓர் அடிமை சுதந்திரமானவனல்ல; ஆனால் சமூகரீதியாக அவன் தனது ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்ளமுடியும். சட்டப்படி ஒரு தீண்டப்படாதவன் சுதந்திர மனிதன், ஆனால் சமூகரீதியாக அவன் தன்னுடைய ஆளுமைத் தன்மையை வளர்த்துக் கொள்ள உரிமையற்றவன்.”

அரசியல் மற்றும் பொருளியல் கருத்தியலால் தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் ஒடுக்குமுறைக்கும், அரசியல்-பொருளியல் இலாபங்களை உள்ளடக்கிய கலாச்சாரக் கருத்தியலால் செயல்படுத்தப்படும் ஒடுக்குமுறைக்குமான வேறுபாட்டையே வேறு சொற்களில் எளிதாகச் சொல்கிறார் அம்பேத்கர். பின்சொன்னதின் செயல்களம் மனம் என்பதால் முன்சொன்னதை விட ஆழமானது. மனதில் செயல்பட்டு இயல்பென ஏற்றுக்கொள்ள வைக்கையில் உடல்–உடைமை–உரிமை என்ற கேள்வி எழாமல் ஒடுக்குமுறை எளிதாகிறது. தன்னுணர்வாலும் கல்வியாலும் ஒடுக்கப்படுவோரிடம் சமத்துவத்துக்கான எத்தனம் எழுகையில், உடல்-உடைமை மீதான வன்முறையாகி இறுதியாக மனதை முடக்கி ஆசுவாசம் கொள்கிறது ஆதிக்கசக்தி.

சீரங்கபுரம் என்பது நாயக்கர்கள் பெரும்பான்மையாகவும், அவர்களது எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கையில் அருந்ததியர்களும் வாழும் கிராமம். விஸ்வகர்மா மற்றும் பிற சாதியினர் சொற்ப எண்ணிக்கையில் வாழ்கின்றனர். கிராமத்திற்கேயுரிய பண்புப்படி ஊரும் சேரியும் வேறுவேறுதான். நிலவுடைமை நாயக்கர்களுக்கே உரியதாயிருப்பதால் அவர்களை அருந்ததியர்கள் நம்பியே வாழும் நிலை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

அரசு நிதியால் நிறுவப்பட்டுள்ள சமுதாயக் கூடமும் கலையரங்கமும் சாதிஇந்துக்களின் பயன்பாட்டிற்கே உரியவை. நடுநிலைப்பள்ளியிலும் அங்கன்வாடியிலும் சாதிஇந்து மற்றும் தலித் சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் தனித்தனியாகவே அமரவைக்கப்படுவர். அரசால் போடப்பட்டுள்ள பிரதான சாலையில் மட்டும் தலித்துகள் செருப்பணிந்து நடக்கலாம். சாதிஇந்துக்கள் வாழும் வீதிகளுக்கோ, அழைப்பின் பேரில் வீடுகளுக்கோ செல்கையில் தலித்துகள் செருப்பணிய அனுமதியில்லை. பலசரக்குக் கடைக்குக் கூட தலித்துகள் மட்டும் செருப்பை வாசலிலேயே கழற்றிவைத்துவிட்டுத்தான் செல்லவேண்டும்.

ஊருக்குள் தலித்துகள் வேட்டியை மடித்துக் கட்டக்கூடாது. துண்டைக் கக்கத்தில் வைத்துக் கொண்டுதான் சாதிஇந்துக்களின் முன் பேசவேண்டும்; சாதிஇந்துக்களை ‘சாமி’ என்றே அழைக்கவேண்டும். தேனீர்க் கடைகளில் முன்போலிருந்த இரட்டைக்குவளை முறை மாறிவிட்டது. இப்போது சாதிஇந்துக்களுக்கு எவர்சில்வர் குவளைகள்; தலித்துகளுக்குப் பயன்படுத்தியதும் உடன் எறியும் காகிதக் குவளைகள்.

இவ்வளவும் சொன்ன நண்பர், “பணியக்கூடாதுன்னு தெரியுது சார். ஆனா வீட்டுக்குச் சாமான் வாங்கப் போகையிலே, ஏன்வம்புன்னு கடைவாசல்லே செருப்பைக் கழற்றிப் போட்டுட்டுதான் போறேன். என்ன பண்றது?” என்று கேட்டார்.

“இந்தியக் கிராமங்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அற்றவை. எனவே, ஜனநாயகமும் அற்றவை. குடியரசு என்பதற்கு நேர்மாறானது இந்தியக் கிராமம். எனவே, இந்தியக் கிராமத்தை ஒரு குடியரசு என்றால், அது தீண்டப்படுவோர்க்காக தீண்டப்படுவோரால் நடத்தப்படும் தீண்டப்படுவோரின் குடியரசாகும்; தீண்டப்படாதோரின் மீதான இந்துக்களின் ஏகாதிபத்தியமுமாகும்” – டாக்டர் அம்பேத்கர்.

May 09, 2013

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் புறக்கணிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் செய்தி

டாக்டர் ஜமனாதாஸ்                          நன்றி www.ambedkar.org 

[[www.ambedkar.org என்ற தளத்தில் வெளியான டாக்டர்  ஜமனாதாஸின்  “A Neglected Message From Dr. Ambedkar TO OBCs” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்]]

                                                                                                                                            தமிழாக்கம் : யுவபாரதி

பம்பாயிலிருந்து இயங்கிவருவதும், ‘மராட்டா மந்திர்’ என்று அழைக்கப்படுவதுமான மராட்டா வகுப்பினருக்கான அமைப்பின் நிறுவனத் தலைவர் பாபாசாகேப் கவாந்தே என்பவர். இவர் டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும் கூட. 1947ல், அம்பேத்கர் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது, ‘மராட்டா மந்திர்’ அமைப்பின் நினைவு மலரில் வெளியிடுவதற்காக, அம்பேத்கரிடம் ஒரு செய்திமடல் வழங்குமாறு கேட்டார். மராட்டாக்களின் அமைப்பிற்கும் தமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லி செய்திமடல் வழங்க மறுத்தார் அம்பேத்கர். எனினும், கவாந்தேவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக, அம்மலருக்குச் செய்திமடல் வழங்கினார் அம்பேத்கர். அச்செய்தி அம்மலரில் 23/03/1947 அன்று வெளியானது. அந்த முக்கியமான இதழ் மராட்டா மந்திர் அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லை. எனினும், ஸ்ரீ விஜய் சுர்வாதே என்பவரிடம் அவ்விதழ் பாதுகாப்பாக இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. ஆனாலும், இதுவரை அதுபற்றி எங்கும் பதிவு செய்யப்படவில்லை.

அம்மடலில் அம்பேத்கர் கூறுவதாவது :

“இவ்விதி மராட்டாக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும். மற்றவர்களின் விரலசைவுக்குக் கட்டுப்பட்டு அடங்கியிருக்க விரும்பாதவர்கள் இரு விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். ஒன்று அரசியல். மற்றொன்று கல்வி.”

“ஒன்றை நான் சொல்லவேண்டும். ஒரு சமூகம் கட்டுப்பாடு மிக்கதாகவும், ஆட்சியாளர்கள் மீது மறைமுக அழுத்தம் தரத்தக்கதாகவும் இருந்தால் மட்டுமே அமைதியாக வாழமுடியும். எண்ணிக்கையில் பலவீனமாக இருந்தாலும் கூட, அதனால் ஆட்சியாளர்கள் மீது உரிய அழுத்தம் தந்து அதிகாரம் செலுத்த முடியுமானால் போதும். உதாரணம் : இந்தியாவில் இன்றைய பிராமண சமூகம். இது போன்ற அழுத்தங்களைச் சரிவரப் பராமரிப்பது என்பது அரசுக்கு மிக முக்கியமானது. இல்லாவிடில், வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டிருக்கும் ஓர் அரசின் இலக்கும் திட்டங்களும் சரியான திசைவழியில் செல்லாது.”

“அதே சமயம் முக்கியமான இன்னொன்றை மறக்கக்கூடாது. அது கல்வி. ஆரம்பக் கல்வியையல்ல. உயர்கல்வியைக் குறிப்பிடுகிறேன். பற்பல சமூகங்களுக்கு இடையிலான போட்டியில் அவரவர்க்குரிய வளர்ச்சியை எட்டவும் தக்கவைக்கவும் உயர்கல்வியே மிக முக்கியமானது.”

“என்னைப் பொருத்தவரை, உயர்கல்வியே கல்வி. அதனால் மட்டுமே அரசு நிர்வாகத்தில் வலுவான முக்கியப் பதவிகளை உங்களால் வென்றெடுக்கமுடியும். பிராமணர்கள் எத்தனையோ எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தும், அவற்றைக் கடந்து முன்னேறி வருகின்றனர் (என்பதைக் காண்க).”

“சமத்துவமின்மையாலும், கல்வியில் மலைக்கும் மடுவுக்குமாகவுள்ள வேறுபாட்டினாலுமே சாதியமைப்பு இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது என்பதைப் பலரும் உணர்வதில்லை. இன்னும் சில நூற்றாண்டுகளேனும் இது தொடரும் என்பதையும் பலர் 'நினைப்பதில்லை. ஆனால், நான் மறக்கவில்லை. கல்வியில் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்குமான இப்பெரும் வேறுபாடு என்பது வெறும் ஆரம்ப மற்றும் பள்ளியிறுதிக் கல்வியோடு மட்டும் முடிந்துபோவதில்லை.சமூக அந்தஸ்தோடு தொடர்புடைய இவ்வேறுபாட்டை உயர்கல்வியால் மட்டுமே குறைக்கமுடியும். நீண்டகாலம் பிராமணர்களின் தனியாதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் (அரசுத் துறையின்) வலுவான முக்கியப் பதவிகளை பிராமணரல்லாதாரில் சிலரேனும் கட்டாயம் அடையவேண்டும். இது அரசின் கடமை என்றே நான் நினைக்கிறேன்.அரசாங்கத்தால் இதைச் செய்யமுடியவில்லையெனில் மராட்டா மந்திர் போன்ற அமைப்புகள் இதைச் செய்யவேண்டும்.”

“முக்கியமான இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இடைநிலை வகுப்பினர் உயர்கல்வி மற்றும அந்தஸ்தும் பெற்ற உயர்வகுப்பினரோடு தம்மை ஒப்பிட்டுக்கொள்ள முயல்கின்றனர். அதே தவறை அடித்தட்டு மக்களும் செய்கின்றனர். ஆனால், இடைநிலை வகுப்பினர் உயர்வகுப்பினர் போன்று சமூக சுதந்திரம் பெற்றவர்களல்ல, அதே சமயம் அடித்தட்டு மக்களின் கருத்துப்போக்கு கொண்டவர்களும் அல்ல. இவ்வேற்றுமை இடைநிலை வகுப்பினரை பிற இரு வகுப்பினருக்கும் பகையாக்கிவிடுகிறது. மகாராஷ்டிரத்தின் மராட்டாக்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. இவர்கள் முன் இரு வழிகளே உள்ளன. ஒன்று – உயர்வகுப்பினரோடு சேர்ந்துகொண்டு அடித்தட்டு மக்கள் மேலே வளரவிடாமல் தடுப்பது. மற்றொன்று – அடித்தட்டு மக்களோடு சேர்ந்துகொண்டு இருவகுப்பாரின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ள உயர்வகுப்பினரின் ஆதிக்கத்தை ஒழிப்பது. இடைநிலை வகுப்பினர் தம்மை அடித்தட்டு மக்களோடு அடையாளம் கண்டுகொண்ட ஒரு காலம் இருந்தது. ஆனால், இன்று அவர்கள் தம்மை உயர்வகுப்பாருடனே அடையாளம் காண்கின்றனர். அவர்கள் தொடர்ந்து செல்லவுள்ள வழி எது என்பதையே இது காட்டுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்காலம் என்று அல்ல, தம் சொந்த வகுப்பு மக்களின் எதிர்காலமே கூட மராட்டா சமூகத் தலைவர்களின் தீர்மானத்தில் தங்கியிருக்கிறது. உண்மையில் இவையாவும் மராட்டா தலைவர்களின் அறிவுக்கும் திறனுக்கும் உட்பட்டது. ஆனால், அதுபோன்ற அறிவார்ந்த தலைமை மராட்டாக்களிடையே போதுமான அளவில் இல்லை என்றே கருதுகிறேன்.”

டாக்டர் அம்பேத்கர் மராட்டக்களைப் பற்றி என்ன சொன்னாரோ, அது அனைத்து (இதர) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அப்படியே பொருந்துகிறது. (இதர) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அறிவூட்ட டாக்டர் அம்பேத்கர் நிறையவே எழுதியுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மேன்மேலும் எழுச்சி பெற்றுவரும் இன்று மட்டுமல்ல, இந்நாட்டின் எதிர்காலமே கூட அவர்களையே சார்ந்துள்ளது என்பதை நிச்சயம் மறக்கக்கூடாது. 

(லோக்ஸத்தா  நாளிதழ் சார்ந்த ஓர் உள்ளூர் மராட்டி இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது. மராட்டியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. -  டாக்டர் ஜமனாதாஸ்)