Showing posts with label நூல் நயம். Show all posts
Showing posts with label நூல் நயம். Show all posts

May 29, 2017

மீரான் மைதீனின் ‘கவர்னர் பெத்தா’ : மனம் நெரிக்கும் நினைவுகள்

பொறுப்புகளும் அவற்றின் பக்கக் கிளைகளென நீளும் மன அழுத்தங்களும்தான் நம்மை இருக்கவும் விடுவதில்லை பறக்கவும் விடுவதில்லை என்றால் யார்தான் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவற்றில் மூழ்கியோ மூழ்கியதிலிருந்து எழுந்த நினைவுகளிலிருந்தோ விடுபட முனைந்து வெற்றியோ தோல்வியோ தழுவுவது அவரவர்பாடாயிருக்கிறது.

கவர்னர் பெத்தா தொகுப்பை ஓரிரு மாதங்களுக்கு முன்பு வாங்கியிருப்பேன். அவ்வப்போது புத்தகத் தலைப்பு கண்ணில் படும்போதெல்லாம் பெரியம்மா ஒருத்தர் பெரும் பொறுப்பிலிருந்தோ அல்லது அதிகாரத் தோரணையினாலோ கவர்னர் என்று அழைக்கப்படுகிற கதையாயிருக்கும் என்றுபட்டிருக்கிறது. நேற்றைய போது தொகுப்பை வாசித்தபோதுதான் தெரிந்தது. பத்தே பத்து கதைகள் கொண்ட அழகிய தொகுப்பு என்பதும், பீர்மா பெத்தாவுக்குக் கவர்னர் பெத்தாவென்று பேர் வந்ததற்குக் காரணம் நாம் நினைத்ததில்லை என்பதும். இவையெல்லாம் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எழுதிய கதைகள் என்கிறார் மீரான் மைதீன்.

அசன் கண்ணாப்பா கதையில் வருகிற கண்ணாப்பாவும் ஓட்டு கதையில் வருகிற ஷாபியின் உம்மம்மாவும் எண்பதுகளில் கிராமப்புறங்களில் குழந்தைகளாயிருந்தவர்களின் தாத்தா பாட்டிகள். கண்ணாப்பா மாதிரியான தாத்தா எனக்கு இல்லை என்பதும் உம்மம்மா மாதிரி கோமதிப்பாட்டி இருந்ததும் ஞாபகம் வந்தது. வெறும் கையும் காலுமே முடுக்கி ஓட்டும் வாகனமாய்க் கொண்டு வாயால் ஒலியெழுப்பி ஓடிய காலத்துக்குள் தள்ளிவிடுகின்றன இக்கதைகள்.

தெருவிலுள்ள சின்னப் பிள்ளைகள் ரசிக்க ரசிக்கக் கதை சொல்வதே தனது முதுமைக்கும் தனிமைக்குமான துணையும் சக்தியுமென இருந்த அசன் கண்ணாப்பாவை விட்டு, சின்னப் பிள்ளைகள் விலகிச் செல்ல அவர் எப்போதும் பெருமை பேசிவரும் பேரனே காரணமாகிவிடுகிறான். அவன் அரேபியாவிலிருந்து வாங்கிவந்த டிவி பெட்டி பிள்ளைகள் பெரியவர்களென எல்லாரையும் விழுங்கிவிடுகிறது. சீந்துவாரற்றுப் போய்விடுகிற கண்ணாப்பாவின் ஆற்றாமையும் புலம்பலும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. கால நகர்வினாலும் அறிவியல் வளர்ச்சியினாலுமான சில எந்திரங்களின் ஈர்ப்பின் முன் கண்ணாப்பாவோ அவர் பேரனோ சின்னப்பிள்ளைகளோ யார்தான் என்ன செய்யமுடிகிறது.

ஷாபிக்கும் அவனது உம்மம்மாவுக்குமான பிரியத்தைச் சொல்லித் தொடங்கும் கதை ஓட்டு’. ஆனால் அப்படியே போய்விடவில்லை. பள்ளியில் சேர்ந்த பிறகான அவனது கவனப்பாடு மாறும் திசையில்தான் கதை நகர்கிறது. பெரியவர்களது கட்சி அரசியல் மற்றும் தேர்தல் நடத்தைகள் என்பவை பிள்ளைகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பகடி செய்கிறது. பிள்ளைகளின் தேர்தல் களமும் தேர்தல் முறையும் பார்ப்பது நமக்கு கலகலப்பாக இருந்தாலும் கூடவே ஒரு பெருமூச்சும் வருவதை உணராமல் இருக்கமுடியாது.

மனம் பேதலித்துவிட்ட பால்ய கால நண்பனைப் பார்க்கக் கதைசொல்லி செல்கிற கணங்களும் அவன் குறித்த இளம் நினைவுகளுமாக பிணைந்து முயங்குகிற கதை யூசுப்’. கதையோட்டம் எனக்கு இரு நினைவுகளைக் கிளர்த்திற்று. குணசீலம் கோவிலை ஒட்டிய சுற்றிலும் வேலி கட்டிய மண்டபத்தில் சங்கிலியில் கட்டப்பட்ட காலோடு கிடந்த இளைஞன் ஒருவனுக்கு, ஒரு இளம் தம்பதி வாழைப்பழத்தை வீசி எறிந்து வேடிக்கை பார்த்ததும், அவன் அதை அப்படியே எடுத்து தோலோடு கடித்துத் தின்றதும் ஒன்று. ஏர்வாடி தர்காவினுள்ளே நுழைவாயிலை அடுத்து இடதுபுறமுள்ள ஒரு மண்டபத்தில் புர்க்கா அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி அரபி மந்திரம் எழுதப்பட்டிருந்த உள்ளறைச் சுவரின் மீது ஓடிச் சென்று மோதுவதும், பின் கையைப் பின்னால் கட்டிக்கொண்டு அப்படியே வெளியே ஓடி வந்து கர்ணமடித்து மணலில் விழுவதுமாகத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது மற்றொன்று. மௌனே... எம் புள்ளையைப் பாத்தியா?’ எனக் கேவும் யூசுப்பின் உம்மா குரல் எங்கெங்கோ ஒலித்துக் கொண்டிருக்கும். அப்படி கேவக்கூட ஒரு ஜீவனும் இல்லாதவர்களும் இருப்பார்கள்.

மூன்று பெண்களைப் பெற்று வளர்த்து கட்டிக்கொடுத்து, வரிசையாய் மாற்றி மாற்றிப் பிரசவம் என்று கவனித்துத் தேய்ந்து போகும் அஸ்மா – மொய்து சாகிபின் ஆற்றாமைகளையும் நில்லா ஓட்டங்களையும் சொல்கிற கதை சம்மந்தக்குடி. மூத்த மாப்பிள்ளையின் உம்மா என்கிற  ஜபர்தஸ்தால் சம்பந்திகளைக் கிறங்கடிக்கவேண்டும், பெண்டு பிள்ளைகளை விட்டு அரேபியாவிலேயே மகன் இருந்து மாதச் சம்பளத்தைத் தன் பெயருக்கு அனுப்பினால் போதும் என்றிருக்கிற சலீமின் உம்மாவும், மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஓரிரு மாதம் வரவும், தன் குழந்தைகள் ஒவ்வொருவரையும் சற்றே வளரந்த பின்னே முதல்முதலாய்ப் பார்க்கவுமாக வாய்க்கிற சலீமும், கருவுற்ற காலத்து மனைவியின் எளிய ஏக்கங்களைக் கூட மென்று முழுங்கியே கண்ணால் மட்டும் காட்ட முடிகிற ஜெரினாவும் பொருளீட்ட வேண்டி அரேபியா செல்கிற பலர் வீட்டு மாந்தர்கள்.

ஊர்விட்டு ஊர்வந்து பள்ளிவாசல் ஒன்றில் மோதியாராக இருக்கிறார் காதர் சாகிபு. ஒவ்வொரு வேளை உணவும் ஒவ்வொரு வீடு என்றும் பள்ளிவாசல் வராந்தாவே வசிப்பிடம் என்றும் ஆகிவிட்ட அவர் மீது  அவ்வூர்க்காரர்கள் காட்டும் இளக்காரமும் சீண்டலும் இலேசுப்பட்டதல்ல. அவர் படுக்கவென வாய்த்த பெஞ்சுகள்தான் அவ்வூரில் யாரொருவர் மௌத்தாகிப் போனாலும் கிடத்தப் பயன்படுபவை. ஆகவே அவருக்குப் படுக்கையும் நிச்சயமில்லை, உறக்கமும நித்தியமில்லை. ஏதோ நாலு காசு சேர்த்து ஊரிலிருக்கும் தன் பெண்ணை கொஞ்சம் நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்தால் போதும் என்று அனைத்தையும் தாங்கிக்கொண்ட காதர் சாகிபு, ஒரு கட்டத்தில் இங்கிருந்து போனால் போதும் என்று நினைத்தாலும் போகமுடியாமல் போகிறது. பொருளாதார வலுவற்ற ஒரு மனிதரின் கதை பெஞ்சு’.

பீர்மா பெத்தாவுக்கு அவரது வயதொத்த சினேகிதிகளுடனான பேச்சும் கிண்டலும் அத்தனை பிடித்தமானது. அவர்கள் ஊர் தர்காவுக்குக் கவர்னர் பாத்திமா பீவி வருகிறார் என்ற சேதி வந்ததும் ஊரே சுறுசுறுப்பாகிறது. அதிகாரிகள் பறக்கிறார்கள். சாலை மின்கம்பங்கள் சரியாகின்றன. பீர்மாவோ கவர்னரைப் பார்க்கவென்றே மகனிடம் புதுத்துணி கேட்டு மகன்-மருமகளிடம் கிண்டலுக்கு ஆளாகிறார். ஆனால் யாரும் நினைக்காத நேரத்தில் பீர்மாவின் கைபிடித்துக் குலுக்கிவிட்டுச் செல்கிறார் கவர்னர். அதனால் ஊர்க்காரர்களிடம் கவர்னர் பெத்தாவாகிவிட்ட பெருமையை மீறி தனது உம்மா – வாப்பாவின் மீது கோபம் வருகிறது. பொட்டப்புள்ள படிச்சு பெரிய கவர்னராட்டா ஆகப்போறான்னு நம்மளப் படிக்கவைக்காம உட்டுட்டுதுவோஎன வைகிறார். இக்கதையின் தலைப்பாக மட்டுமின்றி இத்தொகுப்பின் தலைப்பாகவுமாகிவிட்ட கவர்னர் பெத்தா இதன்மூலம் இன்னொரு அர்த்தம் தருகிறது.

எளிய சொற்களில் உரிய காட்சிப்படுத்தலோடு மிகைப்பாடு ஏதுமின்றி இயல்பாய்ப் போகின்றன மீரான் மைதீனின் இக்கதைகள். கதை மாந்தருக்கும் வாசகருக்குமான அணுக்கமும் அதனால் எழும் பிணக்கமும் நேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஆத்துனாச்சி பெத்தாவையோ ஹமீது சாகிபையோ எங்கேனும் பார்த்தால் நாலு வார்த்தை கேட்காமல் போகமாட்டேன். இக்கதைகளில் மண்ணையும் மொழியையும் மக்களையும் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை. மொழி அவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. நினைவோட்டங்களும் நம் மனதுக்குள் சொல்லிக் கொள்வது போலவே இருக்கின்றன. வெகு நாட்களுக்குப் பின் மனதுக்கு நெருக்கமாக உணரச் செய்த தொகுப்பு இது. மீரான் மைதீன் வாழ்த்துக்குரியவர்.

-          -  யுவபாரதி மணிகண்டன்            29/05/2017


(கவர்னர் பெத்தா – மீரான் மைதீன் – காலச்சுவடு பதிப்பகம் – ரூ.100/-)

May 08, 2017

கலை இலக்கியாவின் ‘பெண்மைத் தினவு’ : சொன்னாலும் தீராத சொல்

கலை இலக்கியாவின் பெண்மைத் தினவு’ : சொன்னாலும் தீராத சொல்

வீடோ நகரவிட மறுப்பது. வெளியோ சட்டகத்திற்கு உட்பட்டது. பொறுக்க முடியாமல் புலம்பும் அங்கலாய்ப்பும், பிறகு வேறு வழியின்றி கொண்டுவிடும் ஆசுவாசமுமாய் நகர்கிறது வாழ்வு.  இவ்வுலகையும் வாழ்வையும் பெண் தன்னிலை எவ்வாறு உணர்கிறது, என்ன எதிர்பார்க்கிறது, எப்படி ஆற்றாமையும் கோபமும் குற்றவுணர்வும் கொள்கிறது, அவற்றில் எதை எதை மொழிவழி வெளிப்படுத்த விழைகிறது என்பதற்கான  ஒரு சான்றாக இருக்கிறது பெண்மைத் தினவு எனும் கலை இலக்கியாவின் கவிதைத் தொகுப்பு.

1

ஆண்களின் பகல்வாழ்வு என்பது கடிகாரத்தின் மணிமுள்ளோடு மட்டும் சம்பந்தப்பட்டது என்றால், பெரும்பாலான பெண்களின் பகல்வாழ்வு என்பது  அதே கடிகாரத்தின் நொடிமுள்ளோடு சம்பந்தப்பட்டது. ஒரு நொடி கூட எங்கும் நிற்கவும் விடாமல் எதையும் நினைக்கவும் விடாமல், கையோடும் காலோடும் கட்டப்பட்ட வீட்டுக் கடமைகளோடு சம்பந்தப்பட்டது.

இரவுப் புனிதம் என்றொரு கவிதை.
நள்ளிரவின் உள்ளிருந்து
கடிகாரச் சப்தம் என்னை
விழுங்க வருகிறது

அதற்குள்
பால்வேண்டும் குழந்தை
பசியடங்கி உறங்கட்டும்

ஊளையிடும் நாய்கள்
பேசி முடிக்கட்டும்
அனாதை நிலவு ஆதரவு கொள்ளட்டும்

என்ன வேண்டுமானாலும்
இரவோடு பேசி முடியுங்கள்
சலசலக்கும் மரங்களே

விடிந்து விடுமானால்
எனது கடிகாரச் சப்தமும்
எனது கவிதை மனமும்
காலாவதியாகிவிடும்.

வீட்டை ஒட்டிய மரங்களின்  காற்றோசையை மட்டுமல்ல, தன்னை ஓயாமல் சுழலச் செய்யும் கடிகாரத்தின் சப்தத்தைக் கேட்பதும் கூட, பிள்ளையின் உறக்கத்திற்காகக் காத்திருந்து, தெருநாய்களின் ஊளையும் அடங்கிய பிறகும் எஞ்சிநிற்கும் விடியாத இரவில்தான் வாய்க்கிறது என்பதைச் சொல்கிறது இக்கவிதை.

2

ஊர்பார்த்தும் உலகம்பார்த்தும் நெளிவு சுழிவோடு நடக்க நிர்ப்பந்திக்கப்படும் இறுக்கம் ஏதும் பிள்ளைப் பருவத்தில் இருப்பதில்லை.  சமகால வாழ்வின் அழுத்தங்கள் அதிகரிக்கும் போது தம் இருப்பைச் சமன்படுத்திக் கொள்ள விழையும் மனத்தின் எதிர்வினையாகவே விளையாட என்றே விளையாடி வாழ்ந்த பிள்ளைப் பருவ நினைவுகள் மேலெழுகின்றன. அப்படி எழுந்து உலவுவது பிள்ளைப் பருவ நினைவுகளா கனவுகளா என ஐயுறும் பொழுதிலேயே, தாயாக இருக்கும் நடப்புக் கணத்தின் ஓர்மை ஏற்படுத்தும் தாக்கத்தைக் காட்டுகிறது பருவ மயக்கம் எனும் கலை இலக்கியாவின் கவிதை.

ஒட்டுப்புல்லில் தும்பைப்பூச்சூடி
தலைமுடி அலங்கரிக்கிறேன்

யானையின் லத்திகளைத்
தேடித்தேடி மிதித்திருந்தும்
கால் முள்ளெடுக்க
எருக்கம்பால் தொட்டுநிற்கிறேன்

மேற்கு மலைத்தொடரைப்
பட்டப்பேர் சொல்லிக்
கதைபேசி கண் தழுவுகிறேன்

புழுதியில் கமகமக்கும்
டயர்வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது
என் வாழ்வீதியெங்கும்.

பிள்ளை வந்துவிட்டான்
“சாப்பிட்டு வீட்டுப்பாடம் எழுதுப்பா
குழந்தை எழுதத் துவங்குகிறான்

என் மேற்கு மலைத்தொடர்
கம்பளிப் புழுவெனச் சுருள்கிறது

உணரவும் முடியாமல்
உதறவும் முடியாமல்
உள்ளங்கையில் துடிதுடிக்கும்
குழந்தை இருதயங்கள்.

3

கருவுற்ற காலத்திலும் கவிதையின் மீது காதலே தன்னடையாளம் எனும் உயிர்மூச்சைத் தக்கவைத்திருக்கிறது என்றுணரும் பெண்ணுக்குத் தன் குழந்தையைப் பார்க்கும் போது எழும் குற்றவுணர்வைக் காட்டுகிறது சாபம் படிந்த கவிதைகள்  எனும் ஒரு கவிதை.

கட்டிலுக்கு அடியிலான
விடிவிளக்கின் வெளிச்சத்தில்
கர்ப்ப வயிறு அழுந்த அழுந்த
நான் எழுதிய கவிதைகள்
என் உயிர்மூச்சைத் திருடி
பாதுகாத்து வைத்தன

அதன் மேல்
ஒட்டிய உடலோடிருக்கும்
எனது பிள்ளையின்
சாபங்கள் படிந்து கிடக்கின்றன.

4

மக்களின் பேச்சு மொழியிலேயே அமைந்து பெண்களின் உணர்வுகளைப் பேசும் பல கவிதைகள் கலை இலக்கியாவின் இத்தொகுப்பில் உள்ளன. சமஞ்சா அடங்காதாபக்தி, உரையாடல், மூக்குத்தி ஆகிய கவிதைகள் இவற்றில் குறிப்பிடத் தக்கவை எனலாம்.
கணவனாலும் பிழைப்பாலும் தினசரி வாழ்வே போராட்டமும் புலம்பலுமாக நகரும் ஒரு தாய், உயிர் மாய்த்துக் கொள்ள மாட்டாமல் தொடர்ந்து வாழத் தான் கொண்டுள்ள ஒரே நம்பிக்கையான தன் மகளைச் சுட்டி, கணவனையும் சாதிசனத்தையும் பற்றி அங்கலாய்க்கும் கவிதை சமஞ்சா அடங்காதா?
இந்தக் காட்டுமாட்டுப் பயகிட்ட
கருமாயப்படுறதுக்கு – நாந்
தீயப் பொருத்திக்கிட்டா செத்த சொகமாயிருக்கும்

என்னப் பெத்த சனம் பீதின்னிப்பய சனம்
இந்தத் துரியோதனங் கையில விட்டுத்
தலமுழுகுன கெட்ட சனம்

ஒரு மொழக் கயித்துக்கும் வழியில்ல
உசிரு வாழவும் ஒணச்சியில்ல

கங்கணம் கட்டிக்கிட்டு – எங்
கொலையக் கொதிக்கவிட்டு
மூதேவி முண்ட என்ன
உசிரோட அடிக்கையில

நாம் பெத்த ராசாத்தி
இந்த ஒத்தப் பொட்ட சமஞ்சா
என் நெத்தம் கடவாயில ஒழுக

பயமுறுத்தும் இந்த சனம்
பதமா மாறாதா – மனுசத்
திமிறுதேன் அடங்காதா?

5

இரு வேறு கொடுமைகளை ஒரு சேரச் சொல்கிற கவிதை உரையாடல். நேற்று முன்தினம் குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரி என்றாலும் இன்று வழக்கமான பிழைப்பான களையெடுக்க வந்து விடுகிறார் விவசாயக் கூலியான ஒரு பெண். பெற்ற குழந்தையும் பெண் குழந்தை. அதுக்குள்ளே பிழைப்புக்கு வந்துட்டியேஎன்பவர்கள் பற்றி அப்பெண் இயல்பாகச் சொல்வது போல் பேசுகிற கவிதை இது.
பொழப்பே எழவெடுத்த பய
பொழப்பாப் போச்சு
பொறந்த வீட்டுலதேஞ் சீரழிவுன்னா
போன எடத்துலயும் வாதனதேன்

பெத்தவனும் கட்டுனவனும்
பந்தாட்டம் ஆடுனா
பொட்டச்சிப் பொழப்பு காத்துப்புழுதிதேன

என்னத்தச் சொல்ல?
என்னிக்குத்தெ எம்பாடு தீருமோ
இல்ல – மண்டையோடதேம் போகுமோ?

“ஏக்கா மயிலக்கா
இத்தினின்டு ஊறுகா குடு
ஏண்டி முந்தாநாளு பெத்தியே
இன்னிக்கு எங்கடிங்குறாளுக
இவளுக யோக்கியம் மாதிரி

பொட்டயக் கொண்டுபுட்டுதே
களையெடுக்க வந்தேன்”

“ம்... போதும் போதும்
ஊறுகால்லாம்
தொட்டுச் சாப்புடக் கூடாது
பாத்துக்கிட்டே தின்னுறனும்
அம்புட்டு வசதியிலயா நாம இருக்கோம்.”

6

ஆற்றாமையும் ஆதங்கமும் துயரமும் சீற்றமும் பெருகிய வாழ்விலேதான் நெகிழ்வான கணங்களும் இருக்கின்றன. கவிதையின் மீது கொண்ட நம்பிக்கையாலேயே அக்கணங்களை மொழிப்படுத்தவும் சாத்தியமாகிறது. அதில் ஒரு கணமாக நதிவேர் எனும் கலை இலக்கியாவின் கவிதை காட்டும் காட்சி அபாரமானது.
ஒரு மழைத்துளியைக்
கையில் ஏந்தியபடி ஒரு
மல்லிகைப் பூவின் பின்னே
நான் ஒளிந்து கொண்டிருக்கிறேன்

பனித்துளிக்கு உள்ளெ ஒதுங்கிய
சூரியச் சுடராய்ச் சுடர்கிறது மல்லிகை
தூரத்து மலையருவியில்
வெயில் உருகி வழிகிறது

ஆற்றுமீனை அடித்துக் கோர்த்து
சுட்டுத்தின்ற வடுவுடைய கம்பியால்
ஆற்றைப் பிளக்கிறேன் ஒரு
நதியை நட்டுவைக்க

ஒரு மல்லிகைப் பூவின் உள்ளே
நதி வேர் விட்டு விழுது பரப்புகிறது
அந்தரத்தில் பாயும் நதியாக.

இன்னும் பல நல்ல கவிதைகளைக் கலை இலக்கியா தருவார் என்று நம்பிக்கை தருகிறது பெண்மைத் தினவு’.


(07/05/2017 அன்று தேனியில் முற்போக்கு கலை இலக்கிய மேடை ஏற்பாடு  செய்திருந்த கூட்டத்தில் கலை இலக்கியாவின் பெண்மைத் தினவு எனும் கவிதைத் தொகுப்பைப் பற்றிப் பேசியது.)

April 08, 2017

நினைவுகளைக் கிளரும் அலைகள்...

உசிலம்பட்டியில் வசித்தாலும் தேனி மாவட்டம் சின்னமனூரில் பிறந்தவர் என்பதால் நெருக்கமாகிவிட்டார் மிகவும். தோழர் விசாகனால் யுவபாரதி மணிகண்டனைக் காணும் மற்றும் அவரின் பேச்சினைக் கேட்கும் வாய்ப்பு. நன்றிகள் தோழர்.
எந்த இலக்கிய நிகழ்வு சென்றாலும் அன்றைய நிகழ்வு குறித்த நூல்களைப் பெற்றுத் திரும்புதல் வழக்கம். அவ்வாறே தோழர் யுவபாரதி மணிகண்டன் எழுதிய "மண்ணூறப் பெய்த மழை''யும். எங்கள் தெருவுக்குத் தொலைக்காட்சி வந்தது என்று இவர் எழுதுகிறார் என்றால் நமது தெருவிற்கு எப்போது தொலைக்காட்சி வந்தது என நம்முள் ஆயிரம் விரல்கள் தேடத்தொடங்கும் அளவுக்கு ஈர்க்கும் உரைநடை உத்தி.
சினிமாவுக்குப்போகும் யாத்திரை படித்தால் ஒரேநாளில் என் தந்தை குடும்பத்தோடு மைதிலி என்னைக்காதலி திரைப்படத்தை மதியம் பார்க்கசெய்து அன்று மாலையே பில்லா திரைப்படத்திற்கும்அழைத்துச் சென்று வந்ததை நினைவுகூறும் வண்ணம் நூலின் வரிகள் ஞாபகங்களை தோண்டியெடுக்கிறது.
சிறு வயதில் ஓடி விழும்போதோ சைக்கிள் ஓட்டி விழும்போதோ தூக்கி விடும் தாயின் கரங்கள் முதலில் அடித்துவிட்டே தூக்கும். சற்றுநேரத்தில் அணைத்துக்கொள்ளும் என்றாலும் விழுந்த வலியை விட தாய் அடித்த அடிக்கான அழுகை நிற்கவே நேரம் பிடிக்கும். அவ்வாறான ஒரு நிகழ்வே சிறு பிள்ளையாயிருக்கும்போது ஏழுமலையிடம் ஏற்பட்ட சண்டையால் ஆங்கில வழிக்கல்வி கற்கவியலா சூழல் தோழர் யுவாவிற்கு ஏற்பட்டுவிட்டதை அழகாக பதிவிட்டுள்ளார். நன்றி ஏழுமலை (நமக்கு தமிழே தகிடுதத்தோம்).
"தவறினை உணர்ந்து அதனை பதிவிடுவதில்லை. அதற்காக மன்னிப்பும் கேட்பதில்லை. நான் இழந்த காலங்களை மீட்டுக்கொடுப்பார்களா என்னைப் பின் வரிசையில் அமரச் செய்த ஆசிரியர்கள்" என்ற கவிஞர்சுகிர்தராணிக்கு யுவா தோழர் போல சில விதி விலக்குகளும் உண்டு. இந்தக்காலத்துல யாரு சாதி பாக்குறா? என்று பேசிவிட்டு எந்தக்காலத்திலும் சாதி பார்த்தால் தப்புதானே என உணர்ந்தேன் என்ற வகையில் யுவா தோழரின் முற்போக்கு நடை கம்பீரமாக நிற்கிறது.
பிள்ளையார் சதுர்த்திக்கு செட்டு கட்டி காதைச் செவிடாக்குவதில் துருத்திக்கொண்டிருக்கும் அலறவிடும் பக்தி, பரதேசி வாழ்க்கை, கண்முன்னால் தொலைந்துபோன ஓர் உயிர், இலக்கியப்பணி, அம்பேத்கரும் ஒரு கிராம குடியரசும், மண்ணூற பெய்யும் மழை.... என ஒவ்வொன்றும் நினைவை நனைக்கும் பதிவுகள்.
கவிதைகள் படிக்கும்போது மனதிற்குள் உணர்ச்சிகளைத் தூண்டித்தூண்டி அதிர்ச்சி, மகிழ்ச்சி, இயற்கை என நம்மை அள்ளிக்கொள்ளும் அக்கணங்களில்... இந்த கட்டுரைத் தொகுப்பில் தலைப்புகள் மட்டும் கவித்துவமாக. மற்றபடி உள்ளே செல்லச்செல்ல நம்மை நாம் வாழ்ந்த காலங்களைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் ஓர் அற்புத பதிவு.
மனமாய் இருப்பவள் மானஷா கட்டுரை மட்டும் எனக்கு இக்கட்டுரைத்தொகுப்பில் அன்னியப்பட்டுத் தெரிகிறது. மற்றபடி "மண்ணூறப் பெய்யும் மழை" நினைவுகளைக் கிளரும் அலை என்பதை யாவரும் அறியலாம் வாசிப்பிற்கு மனதினை உட்படுத்தும்போது...
வாழ்த்துகள் தோழர்.
-பெ.விஜயராஜ் காந்தி,
தாமரைக்குளம்
90 95 40 45 03

காலத்தின் அசலை மனவயமாக்கும் கோணம்

யுவபாரதி மணிகண்டன் எனக்கு அறிமுகமாகி பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. மதுரை பாரதி புத்தகாலயத்தில் மற்றும் சிற்சில இடங்களில் ஹவியோடு அவரை நேசமித்த நாட்கள் நினைவில். 'நீர்வாசம்' கவிதைத் தொகுப்பும் யுவாவின் உடல் மொழியும் ஏதோ ஒருவகையில் பிணைந்திருப்பதாக ஹவியுடன் பகிர்ந்து கொண்ட ஞாபகம். அவருடைய துடிப்பு அவரின் சிறுபிராயத்தோடு இளமையோடு அலைவினோடு சம்பந்தப்பட்டிருப்பது இந்த 'மண்ணூறப் பெய்த மழை' வாசிப்பில் உறுதியானது. இரண்டு தொகுப்பின் குறியீடும் நீர் தான். பள்ளம் பார்த்தோடும் நீர் முனையின் துள்ளலை கற்பனை செய்து பாருங்கள்...யுவா அப்படித்தான் அறிமுகமானார். யுவாவின் மொழி எளிமையும் வலுவும் வாய்ந்தது. இருண்மையில் எளிமை பிரிப்பது எவ்வளவு கடினமோ சாலப்பொருத்தம் எளிமையில் வலு சேர்ப்பது. இவை இரண்டும் ஓர்மையின் பகுதியே. இவையிரண்டுமே அல்லாது ஒரு இயல்பூக்கத்தின் வழி தன் விவரணையை ஒரு இலக்கியப் பிரதியாக கதையாக நாவலாக அல்லாமல் துணுக்கு நடைச்சித்திரமாக்கியிருப்பது யுவாவின் சிறப்பு.
காலத்தைச் சித்திரமாக்குவதற்கு அசலில் நிகழ்ந்திருக்கும் சுழிவுத்தன்மைகள் தேரும் யுவா பொருளானதைப் பொருளற்றதாகவோ பொருளற்றதைப் பொருளானதாகவோ ஒரு மனித உயிரியைக் காலத்தோடு உராய்த்துவிடும் வாழ்வியல் இயக்கத்தைத் தன்னிலிருந்து அலசியுள்ளார். மனித மதகு உடையாமல் தன் நெறியை நாகரிகத்தை உருச்செய்து அவ்வுயிர் மேல் எழும்புவதற்கு பிரயத்தனம் கொள்வது உரைக்கதை.

இறந்த காலத்தின் நினைவோட்டங்களின் வழி உயிர்பிக்கும் வியர்வையும் சீழ்க்கையும் உறவும் குதூகலமும் வலியுமாக அப்பிசுபிசுப்போடு சொல்லப்படுவதால் இம்மொழி நடை வாசிப்பவரை அவரவர்களின் பால்யத்திற்குத் திரும்பிச் செல்ல அருள்கூர்ந்து பணித்து கதவைச் சாத்துகிறது. அவ்வளவு அழகாய் முட்டித்தள்ளுவது இந்நூலின் வேதிவினை. அசைபோடுதலில் சிக்கிய பின்னங்களைத் தடவித் தருவதன் மூலம் வாசிப்பாளனை பங்கேற்பாளனாகப் பிரதியாக்குவதில் வேதிவினை நிகழ்கிறது. எனது கடந்த காலங்களை யுவா மீட்டிச் சிரிக்கும் எல்லைவரை அது கடவியது. ஒவ்வொருவருடைய கடந்த காலங்களும் நிகழ் மற்றும் எதிர்காலத்தை சில பளீரிப்புகள் செய்வதை மாயாஜாலமாகக் கருதாமல் இதனை காலத்தின் தன் அலகாகக் கண்டடைவதற்குக் கொடுப்பினை பெற்றவர்கள் மிகக்குறைவு என்பதனையும் இவ்வெழுத்துச் சொல்லிச் செல்கிறது.

தன்னைத் தெளிந்து கொள்ள விழையும் தேடலே இவ்வெழுத்து. 'எங்கள் தெருவுக்குத் தொலைக்காட்சி வந்தது' என்பதில் துவங்கும் உற்சாகம், 'தனிக்கோள் துயரம்' என்பதில் வாழ்வைத் துண்டிக்கப்பட்ட பல்லி வாலாக்கிவிடுகிறது. இதற்கிடையேதான் 'இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டும்'. வாழ்வின் புதிரை அறிவும் அனுபவமும் கண்டடைகிறதா என்றால் அதற்கான ஆட்டமே நிகழ் என்பதாக மிஞ்சுகிறது. அம்மிஞ்சலின் குழைவோ இறப்புகளை முன்வைத்து ஒடுங்கியும் விடுகிறது. அதாவது,

1. இந்நூல் தன்னை மூன்றாகப் பகுத்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கிறது. மழலை, குடும்பம், எழுத்து. மூன்றும் தனித்தும் சமூகவயப்பட்டும் பின்னமாகிறது. அதன் லயங்கள் காலத்தை உறைய வைப்பதாக உற்சாகமாகத் திரியைத் தீண்டி சூழலில் வனப்புறுவதாக மெழுகாகிக் கரைவதாக நழுவுவதாக தளும்பாகிச் சாட்சியாவதாக அடவு பிடிக்கின்றன. நியாயமற்ற இறப்புகள் பின்னத்தை மேலும் சிக்கலாக்குகின்றன.காலத்தின் மீது வெளிச்சம் பற்றுக்கோட்டினைத் துளிர்ப்பதாக ..........அதாவது,

2.
"சூரியன் உதிக்கிறது மறைகிறது உதிக்கிறது
இலை துளிர்க்கிறது வாடுகிறது துளிர்க்கிறது
மாம்பழம் கூட ஒரு சில சீசன்களில் நன்றாகப் பழுத்திருக்கிறது 
சுழன்று சுழன்று சுற்றிவிட்டாலும் 
பம்பரம் மட்டும் ஏன் சீராக 
நிலை நின்று சுழவில்லை
திரும்பவும் சுற்றுவோம்
சூரியன் உதிக்கிறது மறைகிறது உதிக்கிறது"
(சில இடங்களில் உரைநடைக்குள் ஒளிந்திருக்கிறது கவிதை என்பதற்குமாம் மேற்கண்ட எடுத்துக்காட்டு....இந்த வடிவமும் கடைசி வரி அழுத்தமும் என்பார்வையில்....ப.25)

பாரதி நிவேதன்
தன் வரலாற்றுத்தன்மை இலக்கியப் பிரதியாக உருவெடுக்க எது அவசியமாகிறது. யாதார்த்தத்தை புனைவல்லாமல் புனைவின் ருசி எதனால் வந்தடைகிறது. வாசிப்பின் அளவில் அது இன்னொருவரின் நிகழ்வுகள் என்பதாலா. நிகழ்வுகள் அந்தளவு ஈர்ப்பா. தன் வரலாற்றின் பார்வையில் மற்றமைகள் ஒதுக்கப்பட்டுக் குறிப்பிட்ட கோணம் தேர்வு செய்யப்படுவதின் அணுகல் ருசி? இருக்கலாம். கோணம் அதன் அணுகல் தன்மை பாத்திரத்தின் தீவிரமாகிறது. யுவாவின் சுயவரலாறுத் துணுக்குகளில் தன்னுடைய பாதிப்புகளை அது நிறம் மாற்றமடையும் புள்ளியாக முன் வைக்கிறது. அது சூரியன் மற்றும் காலத்தின் முன்னுள்ள பனித்துளி. மிளிர்கிறது. ஆவியாகிறது. நீராவியின் மாற்றம் வேறு என்னவாகியிருக்கக்கூடும். மொழியாகியிருக்கிறது. மொழியின் அகம் ஒரு மிளிரலைச் செய்கிறது. மானுட வலியைத் தானும் மேய்வதாகச் சொல்கிறது.....இன்னும் சொல்லுங்கள் யுவா வாழ்த்துகள்.
வெளியீடு: பன்முகம்....விலை ;40.....2017
- பாரதி நிவேதன்
  22.03.2017

'மண்ணூறப் பெய்த மழை' குறித்து விஜயபானு

சற்று முன்னர்தான் மணி அண்ணாவின் (யுவபாரதி மணிகண்டன்) 'மண்ணூறப் பெய்த மழை' புத்தகம் வந்து சேர்ந்தது. மழைக்கும் எல்லாருக்கும் ஏதோ சில பிணைப்புகள் இருப்பது போல, இந்தப் புத்தகத்தை வாசிக்கையில் என் வாழ்வோடு ஒன்றிய பல நினைவுகளை மெல்ல நினைவுப்படங்களாய் மனதிலிருந்து எழுப்பிக்கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் யாரோ எழுதியிருந்தார்கள், தன்னையும் தன் வாழ்க்கையை பற்றியும் எழுதினால் அத்தனை சுவாரசியம் இருக்காதென்பதாக புதிதாக எழுத வருபவர்களுக்கு அட்வைசியிருந்தார்கள். ஆனால் மண்ணூறப் பெய்த மழை எல்லார் மனதிலும் பால்ய நினைவுகளை அத்தனை சுவாரசியமாக மழை வாசம்போல் கிளர்த்தெழுத்தி விடும்.

கருப்பு வெள்ளை தொலைக்காட்சி நம் வீட்டிற்கு வந்த கதை நம் எல்லார் வாழ்விலும் நடந்திருக்கும். மணி அண்ணாவிற்கு முதலியார் வீடென்றால் எங்களுக்கு மலேயாகாரர்கள் வீடு, 50 பைசா கொடுத்து ஒளியும் ஒலியும் பார்த்து, சில சமயம் அந்த பிள்ளைகள் டி.வி பார்க்க விடாமல் செய்ய அப்பாவும் அம்மாவும் உடனே ஒரு டெலிராமா டி.வி வாங்கி வந்து, பொறியாளரான அப்பா டம்ளர்களால் இணைக்கப்பட்ட ஆன்டெனா ஒன்றை வைத்து ஊரேப்பார்க்க அதைத்திருப்பி வைத்ததெல்லாம் நினைவூட்ட உதட்டோர சிரிப்போடவே படித்தேன்.

கருங்காலிக்குப்பம் நினைவுகளும் அண்ணாவின் பக்கத்தில் இருந்து பார்த்தது போல பால்யத்தில் எங்களுக்கு கிடைக்காத கிராம வாழ்க்கையை ஓட்டிப்பார்த்துக்கொண்டேன்.

எம்.எஸ்.உதயமுர்த்தி புத்தகங்கள் மணி அண்ணாவின் மூலமாகவே எனக்கும் அறிமுகமானது. ஊரைச்சுற்றி யார்யாரோ அவருக்கு அறிமுகப்படுத்திய நூல்கள், கவிதைகள் எனக்கும் சில நாட்கள் கடிதங்கள் வாயிலாக அறிமுகமாகும். 90 களின் இறுதியில் ஹைக்கூ பற்றி மிக நீண்டதொரு கடிதம் வந்தது நினைவுக்கு வருகிறது.

கருப்புப்பிள்ளையாருக்கு 
வெள்ளைக்கிரீடம் 
காக்கையின் எச்சம்

என்பது போல நியாபகம் வருகிறது. தவறாக இருந்தால் மன்னிக்கவும் அண்ணா. அதைப்பார்த்து கவிதையே அறிமுகமாயிராத அக்காவின் தோழி பரமேஸ்வரி அக்காவுக்கு நான் எழுதிய மிக நீண்ட கடிதம் அவர் பொறுமையை சோதித்திருக்கும்.

பெண்களாக பிறந்திருந்த எங்கள் வீட்டில், என் அண்ணனாகவே மாறி நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர். இலக்கிய வட்டம் நா.முத்துக்குமார், காமராசன், ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் காஞ்சிபுரத்தில் அறிமுகமாயிருந்தபோது திருவண்ணாமலையில் எங்கள் வீட்டில் அமர்ந்து பேசி அருணை இலக்கிய வட்டம் ஆரம்பித்து விக்டோரியா பள்ளியில் முதல் கூட்டம் நடத்தி என் முதல் சாதனையான (மற்றவர்களுக்கு சோதனையான ) கவிதையை அரங்கேற்றம் செய்தோம். 'யாதுமாகி' கையெழுத்துப்பிரதி ஆரம்பித்து அதை நூலகங்களிலும் வைத்து அலைந்துத் திரிந்து கூட்டங்கள் ஏற்பாடு செய்து பின் அதை உருவாக்கிய அனைவரும் வெளியேறியதும் இதைப்படித்த போது நினைவில் வந்தது.மறக்காமல் என்னையும் , அக்காவையும் அதில் குறிப்பிட்டதற்கு நன்றி அண்ணா.

உசிலம்பட்டி நினைவுகளை தவிர்த்து நிறைய நினைவுகளில் என் நினைவுகளும் ஒற்றுப்போயே உள்ளன.

ராதாகிருஷ்ணன் மறைவும், நா.முத்துக்குமாரின் மறைவும் நிறைய நாட்கள் மனதைப்பிசைந்துக் கொண்டே இருந்தது இன்று மீண்டும் நினைவுக்கு வந்து விட்டது.

நிறைய என்னிடம் சொல்லாமல் விட்ட இடைப்பட்ட கஷ்டங்களை இதில் படித்துதான் தெரிந்து கொண்டேன் அண்ணா. அதையும் சுவாரசிய நினைவாகவே மாற்றிக்கொண்ட உங்கள் எழுத்தைப்படிக்கையில் வலிந்து வரவழைத்த சிரிப்பு மட்டுமே எனக்கு மிச்சமிருக்கிறது.

திருவண்ணாமலை வட்டார வழக்கான மல்லாட்டையை (நிலக்கடலை) இங்கே சொல்லி புரியாமல் நிறையப்பேர் பார்த்து அந்த வார்த்தையை அப்பாவிடம் பேசும்போது கூட சொல்ல மறந்துவிடுகிறேன். அதையும் இந்த புத்தகத்தில் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.

இருவர் குடும்பமும் தெற்கிலிருந்து இடம் பெயர்ந்து வடக்கு சென்று மீண்டும் தெற்கு நோக்கி வந்ததாலேயே நிறைய நினைவுகளில் என்னையும் பொருத்திக்கொள்ள முடிகிறது. இதற்கு மேல் எழுதினால் சுய புராணம் ஆகிவிடும்.

கடைசியாக, எப்போது நான் நீண்ட இடைவெளி எழுதுவதற்கு விடும்போதும், கவிதையோ இலக்கியமோ வேண்டவே வேண்டாம் என்று விலகி ஓடும்போதும், மீண்டும் எழுத எப்படியோ நீங்களே காரணமாகிவிடுவீர்கள். தொலைப்பேச மறந்தாலும்,மறைத்தாலும் என்னை மீட்டெடுத்து பேச வைப்பதுபோல இந்த முறையும் நிறைய எழுத வைத்ததற்கு உங்கள் புத்தகமே காரணம்.

என்றாவது ஒரு நாள் நான் நினைவுகளை எழுதும்போதும் இதை ஒட்டியே நிறைய நினைவுகளிருக்கும். நம்மிருவருக்கும் இடையேயான இன்னும் நிறைய நினைவுகளும் அதில் இடம்பெறும்.

மனதூரப் பெய்த மழையாயிற்று இந்த புத்தகம். படிக்கும் அனைவருக்கும் மழை மண்ணூறும்...

- விஜயபானு 
  13.03.2017

December 28, 2016

ஒரு ஓவியனின் கவிதைப் புத்தகம்

                                

மனிதர்கள் சிறிது சிறிதாக
வெளியேறிவரும் தேசத்திற்குள்
கடவுள் நுழைகிறார்

என்றே தொடங்குகிறது திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ‘ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம்’  என்ற தொகுப்பின் முதல் கவிதை. கடவுளோடு அரசனும் வணிகனும் நுழைகிறார்கள். படையலில் மணத்தில் மயங்கிய கடவுள் கண்ணாடிச் சட்டகத்திற்குள் சிறைப்படுகிறார். வணிகனிடம் அடகுபோகிறான் அரசன். அரசனது கழுத்தெலும்புகள் உருவப்பட்டு வணிகனின் இச்சைக்கேற்றத் தலையாட்டும் வகையில் ஸ்பிரிங்குகள் பொருத்தப்படுகின்றன. அறம் மயங்கிச் சரிவதும், இலாபநோக்கம் அதிகாரக் கயிற்றைத் தன் விருப்பப்படி ஆட்டுவதும், வெகுமக்கள்  விலகிச் செல்லவதுமான சமகாலத்தை ஆற்றாமையோடு குறியீடு செய்கிறது ‘இரசவாதி என்கிற வணிகன்’ எனும் இக்கவிதை.

ஏரியை குளத்தைத் தூர்வாராமல் புதர்மண்டவும் குப்பை சேரவும் கைவிடுபவர்கள், நதியை மட்டும் அப்படியே விட்டுவிடுவதில்லை. ஒவ்வொரு நதித்தடத்திலும் குளத்தாழம் மணல்வெட்டித் துடைத்து; வாருகிறார்கள். குதித்தெழ, குடிநீர் அள்ளிச்செல்ல, கால்நடை குளிப்பாட்ட, கழனிக்குப் பாய்ச்ச என்று உயிரோடு பழகிய நதிகளைக் காவு கொடுத்து அடுக்குமாடிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. நாகரிகத்தின் தொட்டில் என்று நமக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு நதிக்கரையை ஒட்டிய ஒவ்வொரு கிராமத்தின் வழியாகவும் ஒவ்வொரு நாளும் செல்லும் லாரிகள் மணலை மட்டுமா அள்ளிச் செல்கின்றன?

‘இராட்சத இயந்திரம் லாரியின் மீது குவித்த
கல்லறையின் வடிவொத்த
மணல் குவியலிலிருந்து வழிகள் தோறும்
சிந்தின மீன்களின் பச்சை இரத்தம்

நாகரீகத்தின் தொட்டில் கயிற்றை
தரத்தரவென இழுத்துச் செல்லும்
மணல் லாரியின் பின் கதறியபடி
ஓடுகிறாள் மார்பு குதறப்பட்ட ஆதித்தாய்

மணல் மலைகளை இலாபமாக்க
சூத்திரம் புனையும் வியாபாரிகளின்
செவிகளுக்கு எட்டவேயில்லை
பின்தொடரும் நதியின் அலறல்’

என்று நீள்கிறது ‘கொலையுண்ட நதியின் பாடல்’ எனும் கவிதை.

நடப்புக் காலத்தின் உலகப் பொருளாதாரச் சூழல் தாராளமயமானது. அதாவது அதிகாரத்திலும் பொருளிலும் வலுத்த தனிநபர், குழு அல்லது தேசம் அதனினும் இளைத்ததைச் சட்டப்பூர்வமாகவும் இல்லாமலும் தாராளமாகச் சுரண்டலாம். உலகின் எந்தவொரு மூலையிலும் இருந்துகொண்டு, உலகின் எந்தவொரு மூலையிலுள்ள மண்ணின் மூலமரத்தையும் ஆணிவேரோடு பிடுங்கிப் பையிலிடலாம். ஒரு மண்ணின்  ஆதார நீரையெல்லாம் உறிஞ்சி எடுத்துக்கொண்டு, நாவறண்டு நிற்கும் அதே மண்ணின் மக்களிடம் விற்கலாம். நதியைப் பலிகொடுப்பதைப் போலவே மரத்தையும் மணலையும் பலியிடுவதும் நமக்குப் பழகிவிட்டது. இவ்விரண்டையும் இணைத்து ‘ஒரு நீர்க்குப்பி + ஒரு ஆக்சிஜன் குப்பி = ஒரு சயனைடு குப்பி’ என்ற கவிதையில் பின்வருமாறு சொல்கிறார் தமிழ்ப்பித்தன்.

‘தலை, கை, கால் நறுக்கப்பட்டு
பிண்டமெனக் கிடக்கும்
நெடுமரத்தின் இலைகளிலிருந்து
வழிந்தோடிய பறவைகளின் பாடல்களை
வயிறு ஒட்டிய நாய்கள் கவ்வி ஓடின

பாதசாரிகள்
துளிநீருக்காய் வானம் பார்க்கையில்
அவர்களின் நிழல்களை
மாயக்கரமொன்று வெட்டிக்கொண்டிருந்தது

அறுபட்ட நிழல்களின் வேர்கள் ஊரும்
ஒவ்வொரு பாதத்தின் கீழும்
முளைக்கிறது மணல் தேசம்
ஊசிமுக கழுகு நாட்டினன்
தாதுவையும் மணலையும்
பிரித்துப் பருகும் பறவையை
மணல்தேசத்தில் கண்டெடுத்த போது
தன் உள்ளங்கையில்
ஒளித்துவைத்திருந்த மழையை
ஆசனவாயொப்ப மடக்கி
மணல்தேசத்தின் வாயில்
சொட்டுச் சொட்டாய் ஊற்றினான்’

முற்றிலும் குறியீடுகளாலான கவிதை இது.

பெண்வெளி பற்றிப் பேசும் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள், பெண் குறித்த ஆணின் குரலாக அல்லாமல் பெண்ணின் குரலிலேயே பேசுகின்றன. செவ்வாயில் தொங்கும் தூண்டில்கள், எங்கள் தந்தையர் நாடென்ற போதினிலே, மியாவ் என்ற அப்பா ஆகிய கவிதைகளை இப்படிக் குறிப்பிடலாம்.

‘அச்சமூட்டுகின்றன
கவியும் பார்வைகள் அனைத்தும்
அம்மணத்தை மூழ்கடித்து
பனிவெள்ளத்தில் விறைக்கும் உடல்
காலை தொடங்கி
இரவு வரை சுமக்கமுடியவில்லை

ஒரு கையில் வேலை
ஒரு கையில் துப்பட்டா
சுதந்திரமற்ற குனியல் நிமிரல்
அறுத்து எறிந்திடலாம் போல் இருக்கிறது’

என்று ஒவ்வொரு கணமும் உடலையே கொத்திக் கொண்டிருக்கும் ஆணின் கழுகுப் பார்வைகளால் பெண்ணுக்கு மூளும் கோபத்தை செவ்வாயில் தொங்கும் தூண்டில்கள்’ கவிதைப் பதிவு செய்கிறது.

ஒவ்வொரு நாளும் இந்நாட்டில் பெண்ணுக்கெதிராய் நேரும் வன்முறைகளும் வன்கொலைகளும், தனக்கு இவ்வெளியின் பாதுகாப்பு எக்கணமும் கேள்விக்குறியாகலாம் என்ற அச்சத்தை ஊட்டவே செய்கின்றன. சாதி, சமய, வட்டார, மொழி வேறுபாடுகளைக் கடந்த பொது அச்சம் இது. ‘எங்கள் தந்தையர் நாடெனும் போதினிலே?’ என்ற கவிதையின் தலைப்பே இந்நாட்டின் ஆண்மையம் குறித்தும் இக்கவிதையின் பேசுபொருள் குறித்தும் சொல்லிவிடுகிறது.

‘எங்கள் தந்தையர் நாட்டில்
தலை தொடங்கி
பாதம் வரை
வற்றாது ஓடும்
ஆண்மை நதியில்
அனுதினம் மிதக்கின்றன
கூட்டாய் குதறப்பட்ட பெண் உடல்கள்

பிச்சைப் பாத்திரமெனத் தொங்கும்
கருப்பையில் விளைந்த
குழந்தை உறுப்பில் ஆண்சாயல் தேடி
களிப்புறும் அந்த தருணம்
உணர்த்துகிறது
என் இயந்திரப் பெண்மையை

உடலெங்கும் உறுத்தும்
பொருத்தப்பட்ட முகமூடிகளை
பிய்த்தெறிந்ததும் வடிகிறது
பன்னெடுங்கால சீழ்’

என நீள்கிறது இக்கவிதை.

ஒடுக்கப்பட்டோர் எதிர்கொள்ளும் சவால்களும், அவற்றை எதிர்கொண்டு கடக்கும் திறமும் இத்தொகுப்பில் பல கவிதைகளில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எம் மண், மனிதன் பிறந்த கதை, பீ, இரவுபகல், ஒருத்தி அறுத்தா, ஒழுகும் வானத்தை நேற்றுதான் மாற்றினோம் ஆகிய கவிதைகளைச் சான்றாகக் குறிப்பிடலாம்.
அரசியல் சட்டத்தில் இருந்தாலும் நடப்பில் ஊர் என்பது எல்லாருக்கும் பொதுவாக இல்லை. ஊர் கும்பிடும் சாமியும் அதை அனுசரித்தே உருள்கிறது. தலித்துகள் வடம் பிடிப்பதென்றால் தேர் நகராமல் திருவிழாவே நின்று போகும் ஊர்களில் கண்டதேவி, சங்கராபுரம் என்பனவெல்லாம் வெளியுலகிற்குத் தெரியவந்த பெயர்கள் மட்டுமே. ஏன் ஏன் என்ற கேள்விகளை எழுப்பும் ‘எம் மண்’ என்ற கவிதை இப்படி முடிகிறது.

‘உங்களைச் சுமப்பதற்கும்
உங்களின் தேரை இழுப்பதற்கும்
வித்தியாசமில்லை
ஒன்றே ஒன்றுதான்

உங்கள் கோவிலும் தேரும்
நிற்பது எம் மண்ணில்
அதை அகற்றத் தேவைப்படுகிறது
கோவில் நுழைவும்
தேரிழுப்பும்’

எல்லாரும் சமம் என்பது எப்படி சட்டத்தில் மட்டும் இருக்கிறதோ அதே போலவே சட்டத்தில் மட்டும் இருப்பது மனிதக் கழிவை மனிதர் அகற்றுவது தடைசெய்யப்பட்டது என்பதும். இரு கவிதைகள் இந்த அவலத்தை அழுத்தமாகப் பதிவு செய்கின்றன.

வீட்டின் நிலையையும் உழைப்பின் வலியையும் ஒரே வரியில் சொல்கிறது இரவுபகல் எனும் கவிதை.

‘பகலில் பல சூரியன்கள்
இரவில் பல விண்மீன்கள்
பெருச்சாளிகளைப் போல்
வந்துபோகும்
எங்கள் கிரகத்தின்
இரவுபகலைத் தீர்மானிப்பது
பீக்கூடையின் உள்ளிருப்பும்
வெளிநகர்வும்’

இந்த அவலத்தைக் கோபத்தோடு பதிவு செய்யும் மற்றொரு கவிதை ‘பீ’.

‘கண்கள் இறுகமூடி
மூக்கடைத்து செல்பவர்களுக்கு
தெரிய வாய்ப்பில்லை
சிலரின் தலைச்சுமையாய்
அனைவரின் வயிற்றிலும்
பீ

நாய்கள் திரும்பிப் பார்ப்பதில்லை
நான் பேண்டதை
மனிதனென்றால்
ஒருமுறையாவது திரும்பிப்பார்
நெடி நுகர்
புழுக்கள் எண்ணு
வெறுங்காலிலாவது மிதி
உன் குழந்தைகளுக்காவது கழுவிவிடு
இல்லை
நீ பேண்டதை அள்ளாத
உன் கைகளை வெட்டி எறி.

ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் தலித் பெண்கள், ஆதிக்கசாதி ஆண்களிடம் எதிர்கொள்ளும் துயரத்தைப் பேச்சு மொழியில் வெளிப்படுத்தும் கவிதை ‘ஒருத்தி அறுத்தா..?’ அது இப்படி முடிகிறது.

‘வயசுக்கு வந்துட்டா
கற்பழிப்பாங்களாம்
கல்யாணம் முடிச்சுப்புட்டா
மொத ராத்திரியே
அவிங்க வந்து கழிப்பாங்களாம்

மார்ப தடவிப் பாக்குறதும்
குளத்தங்கரப் பக்கம்
குளிக்கிறவள தூக்கிக்கிட்டு
சோலக்குள்ள ஓடுறதும்
வழக்கமாய் போச்சு
எனக்கும் வயசு வரட்டும்

ஒருத்தி அறுத்தா
இனி ஒரு பயலுக்கும்
எந்திக்காது!’

திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ‘ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம்' தொகுப்பிலுள்ள கவிதைகளில் இயற்கையின் மீதான, பெண்களின் மீதான, தலித்துகளின் மீதான சுரண்டல்களைப் பேசும் கவிதைகளைப் பற்றி மட்டுமே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். அடிப்படையில் தமிழ்ப்பித்தன் ஒரு ஓவியர் என்ற வகையில் கவிதையின் காட்சிப்படுத்தல்கள் பலவும் சித்திரமாகவே வெளிப்பட்டுள்ளன. தமிழ்ப்பித்தன் இன்னும் பல நல்ல கவிதைகளைத் தருவார் என்ற நம்பிக்கையையும் தருகின்றன.

(04/12/2016 அன்று தேனியில் முற்போக்கு கலை இலக்கிய மேடை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ‘ஒழுகிய வானத்தை நேற்றுதான் மாற்றினோம்’ என்ற கவிதைத் தொகுப்பைப் பற்றிப் பேசியது.)