சற்று முன்னர்தான் மணி அண்ணாவின் (யுவபாரதி மணிகண்டன்) 'மண்ணூறப் பெய்த மழை' புத்தகம் வந்து சேர்ந்தது. மழைக்கும் எல்லாருக்கும் ஏதோ சில பிணைப்புகள் இருப்பது போல, இந்தப் புத்தகத்தை வாசிக்கையில் என் வாழ்வோடு ஒன்றிய பல நினைவுகளை மெல்ல நினைவுப்படங்களாய் மனதிலிருந்து எழுப்பிக்கொண்டே இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் யாரோ எழுதியிருந்தார்கள், தன்னையும் தன் வாழ்க்கையை பற்றியும் எழுதினால் அத்தனை சுவாரசியம் இருக்காதென்பதாக புதிதாக எழுத வருபவர்களுக்கு அட்வைசியிருந்தார்கள். ஆனால் மண்ணூறப் பெய்த மழை எல்லார் மனதிலும் பால்ய நினைவுகளை அத்தனை சுவாரசியமாக மழை வாசம்போல் கிளர்த்தெழுத்தி விடும்.
கருப்பு வெள்ளை தொலைக்காட்சி நம் வீட்டிற்கு வந்த கதை நம் எல்லார் வாழ்விலும் நடந்திருக்கும். மணி அண்ணாவிற்கு முதலியார் வீடென்றால் எங்களுக்கு மலேயாகாரர்கள் வீடு, 50 பைசா கொடுத்து ஒளியும் ஒலியும் பார்த்து, சில சமயம் அந்த பிள்ளைகள் டி.வி பார்க்க விடாமல் செய்ய அப்பாவும் அம்மாவும் உடனே ஒரு டெலிராமா டி.வி வாங்கி வந்து, பொறியாளரான அப்பா டம்ளர்களால் இணைக்கப்பட்ட ஆன்டெனா ஒன்றை வைத்து ஊரேப்பார்க்க அதைத்திருப்பி வைத்ததெல்லாம் நினைவூட்ட உதட்டோர சிரிப்போடவே படித்தேன்.
கருங்காலிக்குப்பம் நினைவுகளும் அண்ணாவின் பக்கத்தில் இருந்து பார்த்தது போல பால்யத்தில் எங்களுக்கு கிடைக்காத கிராம வாழ்க்கையை ஓட்டிப்பார்த்துக்கொண்டேன்.
எம்.எஸ்.உதயமுர்த்தி புத்தகங்கள் மணி அண்ணாவின் மூலமாகவே எனக்கும் அறிமுகமானது. ஊரைச்சுற்றி யார்யாரோ அவருக்கு அறிமுகப்படுத்திய நூல்கள், கவிதைகள் எனக்கும் சில நாட்கள் கடிதங்கள் வாயிலாக அறிமுகமாகும். 90 களின் இறுதியில் ஹைக்கூ பற்றி மிக நீண்டதொரு கடிதம் வந்தது நினைவுக்கு வருகிறது.
கருப்புப்பிள்ளையாருக்கு
வெள்ளைக்கிரீடம்
காக்கையின் எச்சம்
என்பது போல நியாபகம் வருகிறது. தவறாக இருந்தால் மன்னிக்கவும் அண்ணா. அதைப்பார்த்து கவிதையே அறிமுகமாயிராத அக்காவின் தோழி பரமேஸ்வரி அக்காவுக்கு நான் எழுதிய மிக நீண்ட கடிதம் அவர் பொறுமையை சோதித்திருக்கும்.
பெண்களாக பிறந்திருந்த எங்கள் வீட்டில், என் அண்ணனாகவே மாறி நிறைய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவர். இலக்கிய வட்டம் நா.முத்துக்குமார், காமராசன், ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் காஞ்சிபுரத்தில் அறிமுகமாயிருந்தபோது திருவண்ணாமலையில் எங்கள் வீட்டில் அமர்ந்து பேசி அருணை இலக்கிய வட்டம் ஆரம்பித்து விக்டோரியா பள்ளியில் முதல் கூட்டம் நடத்தி என் முதல் சாதனையான (மற்றவர்களுக்கு சோதனையான ) கவிதையை அரங்கேற்றம் செய்தோம். 'யாதுமாகி' கையெழுத்துப்பிரதி ஆரம்பித்து அதை நூலகங்களிலும் வைத்து அலைந்துத் திரிந்து கூட்டங்கள் ஏற்பாடு செய்து பின் அதை உருவாக்கிய அனைவரும் வெளியேறியதும் இதைப்படித்த போது நினைவில் வந்தது.மறக்காமல் என்னையும் , அக்காவையும் அதில் குறிப்பிட்டதற்கு நன்றி அண்ணா.
உசிலம்பட்டி நினைவுகளை தவிர்த்து நிறைய நினைவுகளில் என் நினைவுகளும் ஒற்றுப்போயே உள்ளன.
ராதாகிருஷ்ணன் மறைவும், நா.முத்துக்குமாரின் மறைவும் நிறைய நாட்கள் மனதைப்பிசைந்துக் கொண்டே இருந்தது இன்று மீண்டும் நினைவுக்கு வந்து விட்டது.
நிறைய என்னிடம் சொல்லாமல் விட்ட இடைப்பட்ட கஷ்டங்களை இதில் படித்துதான் தெரிந்து கொண்டேன் அண்ணா. அதையும் சுவாரசிய நினைவாகவே மாற்றிக்கொண்ட உங்கள் எழுத்தைப்படிக்கையில் வலிந்து வரவழைத்த சிரிப்பு மட்டுமே எனக்கு மிச்சமிருக்கிறது.
திருவண்ணாமலை வட்டார வழக்கான மல்லாட்டையை (நிலக்கடலை) இங்கே சொல்லி புரியாமல் நிறையப்பேர் பார்த்து அந்த வார்த்தையை அப்பாவிடம் பேசும்போது கூட சொல்ல மறந்துவிடுகிறேன். அதையும் இந்த புத்தகத்தில் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.
இருவர் குடும்பமும் தெற்கிலிருந்து இடம் பெயர்ந்து வடக்கு சென்று மீண்டும் தெற்கு நோக்கி வந்ததாலேயே நிறைய நினைவுகளில் என்னையும் பொருத்திக்கொள்ள முடிகிறது. இதற்கு மேல் எழுதினால் சுய புராணம் ஆகிவிடும்.
கடைசியாக, எப்போது நான் நீண்ட இடைவெளி எழுதுவதற்கு விடும்போதும், கவிதையோ இலக்கியமோ வேண்டவே வேண்டாம் என்று விலகி ஓடும்போதும், மீண்டும் எழுத எப்படியோ நீங்களே காரணமாகிவிடுவீர்கள். தொலைப்பேச மறந்தாலும்,மறைத்தாலும் என்னை மீட்டெடுத்து பேச வைப்பதுபோல இந்த முறையும் நிறைய எழுத வைத்ததற்கு உங்கள் புத்தகமே காரணம்.
என்றாவது ஒரு நாள் நான் நினைவுகளை எழுதும்போதும் இதை ஒட்டியே நிறைய நினைவுகளிருக்கும். நம்மிருவருக்கும் இடையேயான இன்னும் நிறைய நினைவுகளும் அதில் இடம்பெறும்.
மனதூரப் பெய்த மழையாயிற்று இந்த புத்தகம். படிக்கும் அனைவருக்கும் மழை மண்ணூறும்...
- விஜயபானு
13.03.2017
No comments:
Post a Comment