April 08, 2017

"மண்ணூறப் பெய்த மழை" குறித்த முகநூல் குறிப்புகள்

மீரான் மைதீன்
நண்பர் யுவபாரதி மணிகண்டன் கிட்டே அமர்ந்து கதை சொல்வது போல ரசனையோடு பேசும் நூல்.முகப்பூச்சியில்லாத அழகு. பவுடர் கூட போடாத பேரழகு.கட்டுரை நூல் என்கிறார் எனக்கென்னமோ கதையாகவே வாசிப்புக்குட்படுகிறது .அவரின் நிலம் ஓரளவு எனக்கு பரிட்சயமானதாக இருப்பதால் அவரின் கைபிடித்து கூடவே கேட்டுக் கேட்டு நடப்பதில் சுகமுண்டு.வாசகனின் ஞாபகப் பரப்பை அவனுக்குள் உழுது பயிரிடும் தன்மை கொண்டிருக்கிறது. எல்லோருக்குமான நூல். நண்பருக்கு வாழ்த்தும் அன்பும்.
பன்முகம் வெளியீடு 
விலை 40 ருபாய்


- மீரான் மைதீன்
  04.04.2017



அ.மார்க்ஸ்
நண்பர் யுவபாரதி மணிகண்டன் அவரது சமீபத்திய குறு நூலை அனுப்பியிருந்தார். 20 கட்டுரைகள். பெரிய அளவிலான ஆய்வுக் கட்டுரைகள் அல்ல. சிறிய வடிவில் அவரது அன்றாட அனுபவங்கள், நினைவுகள் ..இப்படி.

ஒரே மூச்சில் படித்துவிட்டு நான் அவருக்கு அனுப்பிய குறுஞ் செய்தி:

"உங்கள் நூலை அன்றே படித்துவிட்டேன். உடன் பதில் எழுதாமைக்கு மன்னியுங்கள். எல்லோருக்கும் சிறு வயது அநுபவங்கள் என்பன மறக்க இயலாதவை. உங்களின் ஒவ்வொரு அனுபவத்தையும் படிக்கும்போது இணையாக என் அனுபவங்கள் நினைவில் ஓடிக் கொண்டே இருந்தன. பாப்பாநாடு எனும் கிராமத்தில் நான் என் அப்பா, அம்மா,தங்கைகளுடன் நடந்து சென்று டூரிங் தியேட்டரில் சினிமா பார்த்து வந்த நினைவுகளில் இன்னொரு முறை வாழும் அனுபவம் கிட்டியது. நல்ல எழுத்துக்கள் நம்மை அப்படிச் சீண்ட வேண்டும், வருட வேண்டும், நினைவுகளைக் கிளற வேண்டும். நல்லுணர்வுகளைக் கிளர்த்த வேண்டும். உங்கள் எழுத்தில் வெளிப்படும் மிகையின்மையும் உண்மையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. எங்காவது இதைக் குறிப்பிடுவேன். நன்றிகள்.."

எனினும் நூல் வெறும் சிறு வயது அநுபவங்களை மட்டும் பேசுவதல்ல.

'மண்ணூறப் பெய்த மழை' - யுவபாரதி மணிகண்டன். 'பன்முகம்' வெளியீடு (9444409824) பக். 64, ரூ 40/-

- அ.மார்க்ஸ்
   07.03.2017

No comments: