Showing posts with label அறிக்கை. Show all posts
Showing posts with label அறிக்கை. Show all posts

November 17, 2012

நவம்பர் 7, 2012 அன்று தருமபுரியின் 3 தலித் கிராமங்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்த உண்மை அறியும் குழுவின் அறிக்கை


தருமபுரி மாவட்டம் தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்து - கிருஷ்ணாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட நத்தம் காலனி, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்கள் நவம்பர் 7ஆம் தேதி மாலை தொடங்கி முன்னிரவு வரையிலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட அப்பகுதி வன்னிய கிராமத்தினரால் கொள்ளையிடப்பட்டு கொளுத்தப்பட்டன. இத்தாக்குதல் தொடர்பாக உண்மை அறியும் களஆய்வு மேற்கொள்ள நவம்பர் 10-ஆம் தேதி கல்வியாளர்கள் - எழுத்தாளர்கள் - பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு நேரில் சென்றது. மூன்று கிராமங்களில் தாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டையும் கண்ணுற்றதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்களையும், அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளையும், சில அரசு ஆவணங்களையும் கண்டு இக்குழு தயாரித்த அறிக்கை இது.

களஆய்வில் பங்கேற்றோர் :-

1. முனைவர் சி. இலட்சுமணன் (Co-ordinator, Dalit Intellectual Collective)
2. எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்
(Intellectual Circle for Dalit Actions)
3. எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
(ஆசிரியர், புதுவிசை)
4. பேரா. கி. பார்த்திபராஜா
5. கவிஞர் சுகிர்தராணி
6. எழுத்தாளர் யுவபாரதி மணிகண்டன்
(தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு)
7. பத்திரிகையாளர் ஜெய்கணேஷ்
8. மருத்துவர் திராவிடன் அம்பேத்கர்
மற்றும் பெங்களுரு சுதந்திர மென்பொருள் இயக்கம் சார்ந்த சமூகச் செயற்பாட்டாளர்கள்
9. செந்தில்
10. ரகுராம்
11. சரத்
12. ரமீஷ்


காரணமும் தாக்குதலும் :

நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசன் (23) என்ற தலித் இளைஞனும் செல்லங்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த திவ்யா (21) என்ற வன்னியர் சாதிப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக உருவான பிரச்சினை, மூன்று தலித் கிராமங்களுக்கு எதிரான பெருந்தாக்குதலாக வடிவெடுத்திருக்கிறது. ‘தங்கள் சாதிப் பெண்ணைப் பறையன் காதலிக்கக் கூடாது’ என்று கடந்த ஜனவரி மாதத்திலேயே இளவரசன் வீட்டின் மீது வன்னியர்கள் தாக்குதல் தொடுத்தனர். தொடர் அச்சுறுத்தலையும் தாக்குதலையும் மீறி 14-10-2012ஆம் தேதி இளவரசனும் திவ்யாவும் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பிறகு தங்கள் உயிருக்குப் பாதுகாப்பில்லை என்று கூறி சேலம் கோட்ட டி.ஐ.ஜி.யிடமும் தருமபுரி மாவட்ட காவல் துறையிலும் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், திவ்யா குடும்பத்தினர் இத்திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியாத நிலையிலிருந்தனர். ஆனால் இப்பிரச்சினையில் திவ்யாவின் உறவினர்களும் அவர்களைச் சேர்ந்த வன்னியர்களும் தொடர்ந்து நெருக்கடி ஏற்படுத்திவந்தனர். அக்டோபர் 25-ஆம் தேதி முதலே இப்பகுதியில் இது தொடர்பாக பதற்றம் நிலவி வந்தது. இதன் தொடர்ச்சியாக 04-11-2012-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன் தலைமையில் வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் பிற பா.ம.க. நிர்வாகிகளும், மாவட்ட வன்னியர் சங்கத்தினரும் நாயக்கன்கொட்டாயைச் சுற்றியிருந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வன்னியர்களும் கலந்துகொண்டனர். அக்கூட்டத்தில் ‘சாதி மீறித் திருமணம் செய்யும் போக்கை வளரவிடக்கூடாது, இதற்குத் தக்க பாடம் கற்பிக்கவேண்டும்’ என்று உணர்ச்சிவசமான பேச்சுகள் பேசப்பட்டன. பஞ்சாயத்து முடிவின்படி, ‘7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து தங்களிடம் ஒப்படைக்கவேண்டும். இல்லையெனில் காலனியில் ஒரு வீடு கூட இருக்காது என்று நத்தம் காலனியைச் சேர்ந்த சேட்டு என்பவரிடம் கூறி அனுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு 7-ஆம் தேதி திவ்யாவின் குடும்பம் சார்பாக ஐந்து பேர் சென்று திவ்யாவைத் தங்களோடு வரும்படி கேட்டபோது, அவர் “நான் என் கணவரை விட்டு வரமாட்டேன். வந்தால் என்னைக் கொன்றுவிடுவீர்கள் என்று கூறி வர மறுத்துவிட்டார். இதற்குப் பிறகே, முழுபோதையிலிருக்க வைக்கப்பட்டிருந்த திவ்யாவின் தந்தை நாகராஜ் அன்று மாலை இறந்துள்ளார்.

மாலை 4 மணியளவில் நாகராஜின் பிணத்தைச் செல்லங்கொட்டாயிலிருந்து தருமபுரி - திருப்பத்தூர் நெடுஞ்சாலைக்குக் கொணர்ந்த வன்னியர்கள், தருமபுரி மாவட்ட பா.ம.க. இளைஞரணித் தலைவர் மதியழகன், வெள்ளாளப்பட்டி ராஜா, கொட்டாவூர் மாது ஆகியோர் தலைமையில், அப்பிணத்தோடு சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு பிரதான சாலையின் வடக்கே சீராம்பட்டியில் பெரிய புளியமரம் ஒன்று அறுத்து சாலையின் குறுக்கே போடப்பட்டது. அதே போல பிரதான சாலையின் தெற்கே எஸ்.கொட்டாவூரிலும் மரம் வெட்டி சாலை மறிக்கப்பட்டது. சாலைக்கு அருகே செங்கல் சூளைக்காக வெட்டிப் போடப்பட்டிருந்த பனைமரங்களையும் சாலையின் குறுக்கே போட்டு சாலையை முழுமையாக மறித்தனர். போலீசார் அம்மரங்களைத் தாண்டி வராமல் அங்கேயே நின்று கொண்டனர்.

இந்நிலையில்தான், திட்டமிட்டபடி ஆங்காங்கிருந்து வரத்தொடங்கியிருந்த வன்னியர்களும், மறியலில் ஈடுபட்டிருந்த வன்னியர்களும் சேர்ந்து நத்தம் காலனியில் புகுந்து எல்லா வீடுகளையும் தாக்கத் தொடங்கினர். காலனியின் பெரும்பாலான ஆண்கள் வேலை காரணமாக வெளியூர்களில் இருந்தனர். ஊரிலிருந்த பெண்கள் உள்ளுரில் வேலைக்குச் சென்றிருந்தனர். குழந்தைகள் பள்ளிகளை விட்டு வீட்டுக்குத் திரும்பும் நேரம். நத்தம் காலனியைத் தாக்கி முடித்த பின்பு, அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள அண்ணா நகர், அங்கிருந்து உள்ளடங்கியுள்ள கிராமமான கொண்டம்பட்டி ஆகிய தலித் கிராமங்களுக்கும் வாகனங்களில் தேடிச் சென்று தாக்குதல் நடத்தினர். மாலை 4.30 மணிக்கு மேல் தொடங்கிய தாக்குதல் ஒவ்வொரு ஊராக, இரவு 9.30 மணி வரை நீடித்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் எல்லா வீடுகளும் தவறாமல் தாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டையும் மறுபடி செப்பனிட முடியாத அளவிற்குத் தீயிட்டு அழித்துள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம், நகைகள் மற்றும் சில உணவுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பிறகு பீரோ முழுமையாக உடைக்கப்பட்டிருக்கிறது அல்லது எரிக்கப்பட்டிருக்கிறது. கணிசமான வீடுகளிலிருந்த மோட்டார் சைக்கிள்கள், வாஷிங் மெஷின்கள் போன்றவையும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. எல்லா வீடுகளிலுமிருந்தும் கொள்ளையடிக்கப்பட்ட கியாஸ் சிலிண்டர், ஆடுகள் போன்றவற்றை வன்னியர்கள் தாம் கொண்டுவந்திருந்த வாகனங்களில் ஏற்றிச் சென்றுள்ளனர். 4 கார்கள் மற்றும் 72 பைக்குகள் எரிக்கப்பட்டுள்ளன. கடப்பாரை, தடி, வெயிட் லிஃப்டிங் இரும்புத் தண்டு, பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள், திறந்து விடப்பட்ட சில சிலிண்டர்கள் போன்றவை மூலம் தாக்குதலும் தீவைப்பும் நடந்துள்ளன. வன்னியர்கள் இத்தகைய தாக்குதலைச் சிறு எதிர்ப்பின்றி நடத்தியள்ளனர்.


தலித்துகளின் சமூக-பொருளாதார நிலையும் அதன் மீதான தாக்குதலும் :

தாக்குதல் நடந்த மூன்று ஊர்களிலுமுள்ள 98 சதவீதம் தலித்துகளுக்கு நிலம் இல்லை. இரண்டொருவர் தவிர வேறு எவருக்கும் அரசு வேலையோ நிரந்தர உத்தியோகமோ கிடையாது. கூலிகளாகவும் முறைசாரா தொழிலாளர்களாகவும் உள்ளனர். ஆண்கள் பெரும்பான்மையும் பெங்களுரில் கட்டிட வேலையிலும், சுமை தூக்கும் தொழிலாளர்களாகவும் கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற நகரங்களில் பிறவேலைகளும் செய்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த பணத்தில்தான் வீடு, ஓரளவு வீட்டுபயோகச் சாமான்களை ஈட்டியுள்ளனர். சாதி இந்துக்களின் சார்பின்றி தன்னிறைவுடன் சுயமாகப் பொருளாதார ரீதியாகச் சிறிதளவு முன்னேறியுள்ளனர். இந்நிலையில்தான் இக்கிராமங்களில் முழுக்க முழுக்க இந்த வீடுகளும் வீட்டுச் சாமான்களும் குறிவைத்து அழிக்கப்பட்டுள்ளன. ஊரில் வெகு சில குடிசைகளைத் தவிர மற்றவை காங்கிரீட், மாடி மற்றும் ஓட்டு வீடுகள். இவற்றில் பெரும்பாலானவை அரசு உதவியோடு தம் பணத்தையும் கொண்டு கட்டிய வீடுகள். இத்தாக்குதலில் வன்னியர் தரப்பில் 2000 பேர் ஈடுபட்டதாக அம்மக்கள் தெரிவித்தனர். ஏராளமான பைக்குகளும் வேன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏறக்குறைய இத்தாக்குதலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட வன்னியர் கிராமங்களின் பெயர்கள் நம் குழுவினரிடம் தரப்பட்டன. 

அவை:

1.செல்லங்கொட்டாய் 
2.வாணியன்கொட்டாய்
3.கதிர்நாயக்கனஹள்ளி 
4.புளியம்பட்டி
5.மொளகானூர்
6.நாயக்கன்கொட்டாய்
7.வெள்ளாளப்பட்டி 
8.கொண்டம்பட்டி
9.சீராம்பட்டி
10.கிருஷ்ணாபுரம்
11.வன்னியக்குளம்
12.திம்பம்பட்டி
13.கம்மையநல்லூர்
14.சவுக்குத்தோப்பு
15.கொல்லம்பட்டி
16.குப்பூர்
17.செங்கல்மேடு
18.மாரவாடி பழையூர்
19.செம்மாந்தகுப்பம்
20.குறும்பட்டி
21.கொட்டாவூர்
22.செட்டியூர்
23.சோலைக்கொட்டாய் 

மொத்தத்தில் 7-ஆம் தேதி இத்தாக்குதலை முதலில் தொடங்கிவைத்தவர்களில் ஒருவரான முருகன் என்பவர் ஏற்கனவே தலித் பெண் ஒருவரைப் பாலியல் வன்முறை செய்து கொன்ற வழக்கில் தொடர்புடையவர். மற்றொருவர் வாணியன்கொட்டாயைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி சீனிவாசன் ஆவார்.

ஏற்கனவே, தலித் மக்களோடு பழகுவதோடு, அவர்தம் வீடுகளுக்கு வந்து செல்லும் வன்னியர்களாலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்று தலித் மக்கள் கூறும்போது சாதியின் ஆகிருதி எந்த பூச்சுகளாலும் மறைந்துவிடுவதில்லை என்பதையே அறியமுடிந்தது. ‘ஒண்ணா மண்ணா பழகினால் சாதி ஒன்றாகிவிடுமா?’ என்று கேட்டு தாக்கியதாக அழுதார் ஒரு பெண். ‘சேர்த்து வைச்சிருந்ததெல்லாம் வெந்துபோச்சு. இனி எங்களைத்தான் வேகவைக்கணும் என்று அழுதார் இன்னொரு பெண். மகளிர் சுயஉதவிக்குழு மூலம் திருமணம் மற்றும தீபாவளிப் பண்டிகைக்காக முன்பணமாக எடுக்கப்பட்ட 20,000 ரூபாயும், சிறு வியாபாரமாக இயங்கிவந்த கடை, மருந்து விற்பனைப் பிரதிநிதி ஒருவரின் ஒரு வார வசூல்நிதி போன்றவையும் கொள்ளையில் பறிபோனதை அறியமுடிந்தது. மொத்தத்தில் தலித்துகளின் பொருளாதார மேம்பாடு இத்தாக்குதலில் குறிவைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இதே போன்று 31-08-1995இல் தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளத்தில் 300 தலித் குடியிருப்புகள் தாக்கப்பட்ட போதும், அம்மக்களின் பொருளாதாரத் தற்சார்பே குறிவைத்துத் தகர்க்கப்பட்டது. இத்தாக்குதலிலும் அதுவே நடந்துள்ளது. ஏறக்குறைய பத்து கொடியங்குளத்திற்கு இணையாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.


கண்டறிந்தவை :

1.    இப்பகுதியில் தலித்-வன்னியர் சாதிக் கலப்பு மணங்கள் மட்டுமின்றி, பிற சாதிக் கலப்பு மணங்களும் கடந்த காலங்களில் நடந்துள்ளன. அவற்றிற்கு ஆதிக்கச் சாதித் தரப்பின் ஏற்பின்மையோ, அவ்வப்போதான எதிர்ப்போ மட்டுமே இருந்து வந்துள்ளன. மாறாக, இதுபோன்ற பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டதில்லை. ஆனால், இந்த முறை இத்தகைய வன்முறை நடத்தப்பட்டதற்குப் பின்னணியாய் அரசியல் காரணம் இருந்திருக்கிறது. அதாவது, 2012 சித்திரா பௌர்ணமியன்று வன்னியர்களின் சாதி உணர்ச்சியை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ளும் வகையில் நடத்தப்படும் வன்னியர் இளைஞர் பெருவிழாவில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் முன்னிலையில் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு “வன்னியர் பெண்களைக் காதலித்து மணக்கும் பிற சாதியினரை (தலித்துகளை) அடக்கவேண்டும். அவ்வாறு அடக்குபவர்களுக்குக் கட்சி துணை நிற்கும் என்று பேசினார். இதுவரையிலும் சாதிக்கலப்பு மணத்திற்கு எதிராகப் புழுங்கிக் கொண்டிருந்த வன்னியர்களுக்கு குருவின் இப்பேச்சு, உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்திருக்கிறது. தருமபுரி தாக்குதலுக்கும் இப்பேச்சே முக்கியக் காரணமாய் இருந்திருக்கிறது.

2.    மேலும் நவம்பர் 4-ஆம் தேதி நாயக்கன்கொட்டாயில் திவ்யா-இளவரசன் திருமணத்திற்கு எதிராகக் கூடிய வன்னியர்களின் கூட்டத்திலும், 7-ஆம் தேதி 3 தலித் கிராமங்கள் மீதான தாக்குதலிலும் தாக்குதலுக்குப் பிறகு வன்னியர்களை வழக்குகளிலிருந்து காப்பாற்றவும், பா.ம.க. முன்னாள் எம்.பி., கட்சியின் முன்னணித் தலைவர்கள் உள்ளிட்ட பா.ம.க. நிர்வாகிகளே ஈடுபட்டு வருகின்றனர் என்பதிலிருந்து இந்தப் பின்னணியை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். வன்னியர்களின் இந்த வெறிச் செயல்களுக்கு குருவின் இப்பேச்சு நேரடியாகவும் மறைமுகமாகவும் உளவியல் பலத்தைத் தந்திருக்கிறது. இளவரசன்-திவ்யா திருமணத்திற்கு மட்டுமல்ல, நாயக்கன்கொட்டாய் பகுதியில் கடந்த காலங்களில் இதுபோன்ற சாதிக் கலப்பு மணங்கள் மீதான கோபத்தைத் தீர்த்துக் கொள்ளவும் இந்தத் தருணத்தையே வன்னியர்கள் பயன்படுத்தியுள்ளனர். 

3.    நத்தம் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு வெகு தொலைவிலிருந்த கொண்டம்பட்டியைத் தேடிச் சென்று தாக்கிய காரணம் எதுவென்றும் அறியமுடிந்தது. அதாவது, கடந்த ஆண்டு கொண்டம்பட்டியைச் சேர்ந்த நேதாஜி என்ற தலித் இளைஞர், வன்னியர்; சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டு வெளியூரில் குடியமர்ந்துவிட்டார். அப்போது நேதாஜி வீட்டை மட்டும் தாக்கிவிட்டுச் சென்ற வன்னியர் கூட்டம், இப்பொழுது இதுபோன்று திருமணம் நடந்த ஊர்களையெல்லாம் நினைவுபடுத்திச் சென்று தாக்கியிருக்கிறது. அந்த வகையில்தான் கொண்டம்பட்டி முழுஊரையும் துவம்சம் செய்திருக்கிறது. குறிப்பிட்ட ஒருவர் மீதான கோபத்திற்காக கூட்டு வன்முறையைத் தலித் சமூகம் எதிர்கொண்டிருக்கிறது. வயல்களில் தானியக் கதிர்களை எந்தப் பறவைகளும்; நெருங்கிவிடக்கூடாது என்று அச்சுறுத்துவதற்காக, ஒரு காகத்தைக் கொன்று வயலின் நடுவே கட்டித் தொங்கவிடுவார்கள் விவசாயிகள். அதுபோன்று தனித்தனியே அச்சுறுத்தி இதுபோன்ற காதல் மணங்களைத் தடுப்பதைவிட, ஒரு ஊரையே அழிப்பதன் மூலம், அதுபோன்ற எண்ணமே இனி தலித்துகளுக்கு எழக்கூடாது என்ற நோக்கத்தோடு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

4.    இத்தாக்குதல் திவ்யாவின் தந்தை நாகராஜ் இறந்ததை ஒட்டி நடந்த உணர்ச்சிவசப்பட்ட நிகழ்வு போன்று காட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாறாக, நாகராஜின் சாவை ஒரு சாக்காகக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அதற்கேற்ப நாகராஜ் மரணத்திற்குத் தூண்டப்பட்டிருக்கலாம் என்று எங்கள் குழு கருதுகிறது. நாகராஜின் பிணத்தோடு மறியல் செய்யப்பட்டது என்பதுதான் உண்மையே தவிர, அவரது மரணம் தற்கொலைதானா என்று ஆராய வேண்;டியுள்ளது. எனவே, நாகராஜின் பிரேதப் பரிசோதனை, அவர் இறப்பதற்கு முன்பு அவருக்குச் சொந்த சாதியினரால் தரப்பட்ட நெருக்கடிகள், அவமானங்கள் பற்றியெல்லாம் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் கூட்டப்பட்டு, நவம்பர் 7-ஆம் தேதிக்குள் திவ்யாவைக் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டுமென்று, தலித்துகளை நோக்கிக் கெடு விதிக்கப்பட்டது. நவம்பர் 7ஆம் தேதி திவ்யா வரமறுத்த நிலையிலும், நாகராஜின் மரணத்தினாலும் இத்தாக்குதல் திட்டமிடப்பட்டது. முதலில் நாகராஜின் மரணமே தற்கொலைதானா? என்று ஆராயவேண்டியிருக்கிறது. நவம்பர் 4-ஆம் தேதி வன்னியர்களின் கூட்டம் நடந்ததிலிருந்தே அவருக்கு மனரீதியான நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டன. அந்த நிலையில்தான் 7-ஆம் தேதி தன் மகள் திரும்பி வரமறுத்த நிலையில் அவர் இறந்திருக்கிறார். இந்த மரணம் ஊர்க்காரர்களின் நெருக்கடிகளுக்குப் பயந்து கூட நடந்திருக்கலாம். மேலும் அவர் கடைசி 4 நாட்களாகத் தொடர்ந்து குடிபோதையில் வைக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை, அவர் இறந்திருக்காவிட்டாலும் கூட அன்று மாலை தாக்குதலுக்கு வாய்ப்பிருந்தது என்றே அந்த ஊர்க்காரர்களில் சிலர் நம்மிடம் தெரிவித்தனர். ஆனால், நாகராஜின் சாவு அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்பாகிப் போனது. அதனால்தான் கடப்பரை உள்ளிட்ட ஆயுதங்கள், மூன்று கிராமங்களை எரிக்கக் கூடிய அளவிற்குப் பல லிட்டர் பெட்ரோல், தின்னர் முதலியவை சேகரிக்கப்பட்டு, அதற்கான ஜனத்திரட்சியும் அங்கே மையம் கொண்டது. நத்தம் காலனியில் மட்டும் 150 பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்தாலொழிய இவ்வளவு பெட்ரோல், பாட்டில்கள், திரிகள், ஆயுதங்கள் கொண்டு இத்தகைய பெருந்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கமுடியாது. இரண்டொருவர் தாக்கப்பட்டதைத் தவிர்த்து, யாதொரு உயிர்ச்சேதமும் ஏற்படாவண்ணம் தலித்துகளின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. 

5.    இத்தாக்குதலைத் தடுப்பதில் காவல்துறையும் அதன் உளவுப்பிரிவும் மாவட்ட நிர்வாகமும் பெரிய அளவில் தோல்வியடைந்திருக்கின்றன. நாகராஜின் பிணத்தை வைத்துக்கொண்டு வன்னியர்கள் மறியல் செய்யும்போது, சாலையில் வெட்டிப்போட்ட மரத்தைத் தாண்டி போலீஸ் வராமல் நின்றுகொண்டது. சாலையில் மரங்களைப் போட்டிருந்தபோதே அங்கே 300 போலீஸ் வந்துவிட்ட போதிலும், அவற்றைத் தாண்டிவந்து, சில மணிநேரங்கள் நீடித்த தாக்குதலைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
6.    தருமபுரி மாவட்டத்தில் 1987-இல் பிசிஆர் சட்டத்தின் கீழ் ஒரு புகார் மற்றும் 1989 முதல் 2012 வரையில் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 291 புகார்கள்; என பதிவானவை மொத்தம் 292 புகார்கள்.  இவற்றில் காவல்துறையால் தள்ளுபடி செய்யப்பட்டவை 166 மற்றும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டவை 81 என்ற நிலையில் வெறும் 10 புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். பதிவான புகார்களில் 3.3 சதவீதப் புகார்களில் மட்டுமே குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனர் என்ற புள்ளிவிவரம் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மீதான காவல்துறையின் அக்கறையின்மைக்குச் சான்றாக அமைகிறது. 
7.    இப்பகுதி முன்பு நக்சல்பாரிகள் இயக்கம் செயற்பட்ட பகுதி என்ற முறையில், கியூ பிரிவு போலீசாரின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதி என்ற முறையில் கடந்த ஒரு மாதமாகப் புகைந்து வந்துள்ள இப்பிரச்சியை அது அறியத் தவறியிருக்கிறது. மேலும், இப்பகுதியில் தொடர்ந்து 7 பேர் கொண்ட போலீஸ் காவல் இருந்துவந்தும் முன்கூட்டியே அறிந்து அத்தாக்குதலைத் தடுக்கத்தவறியிருக்கிறது காவல்துறை. ஏறக்குறைய 3 டிஎஸ்பி-க்களுடைய கவனத்தின்கீழ் இப்பகுதி இருந்தபோதிலும் இத்தாக்குதல் தடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8.    இரவு 9.30 மணிவரையிலும் தாக்குதல் நடத்தப்பட்ட பின்பு இரவு 11 மணியளவில் லாரி ஒன்றை எடுத்துவந்து அண்ணா நகர் தலித் குடியிருப்புகளிலிருந்த ஆடுகளை வன்னியர்கள் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, தாக்குதல் நடந்துமுடிந்த நெடுநேரம் வரையிலும் கூட காவல்துறை நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்பதையே அறியமுடிகிறது. மறுநாள் கைது செய்யப்பட்ட 92 பேரையும் கூட, வெளியூர் பணியிலிருந்து திரும்பிய மாவட்ட எஸ்.பி. அஸ்ராகர்க் வந்துதான் கைது செய்திருக்கிறார். அஸ்ரா கர்க்கின் பணியைப் பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியோடு நினைவு கூர்ந்ததைப் பார்க்கமுடிந்தது.

பரிந்துரைகள் :

1.    கற்பனைக்கெட்டாத தாக்குதல் என்ற வகையில் இக்கிராமங்களின் சேதங்களைப் பார்வையிடத் தமிழக முதலமைச்சர் அங்கு நேரடியாகச் செல்லவேண்டும். அவரது வருகையினால் அரசு எந்திரம் துரிதமாகச் செயல்படுவதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனரீதியான ஆறுதலும் கிடைக்கும்.

2.    தாக்குதலில் ஈடுபட்ட அனைவர் மீதும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் (1989) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு முழுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இச்சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படுவதோடு, தாக்குதல் நடத்தியோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.

3.    அரசு உடனடியாக அதிவிரைவு தனிநீதிமன்றத்தை இம்மூன்று கிராமங்களில் ஏதேனுமொன்றில் அமைத்து, நீதிவிசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கச் செய்யவேண்டும். (உ-ம்) ஆந்திர மாநிலம் சுண்டூர்ப் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட தனிநீதிமன்றம்.
4.    2012 சித்திரா பௌர்ணமியன்று மாமல்லபுரத்தில் நடந்த வன்னிய இளைஞர் மாநாட்டில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குரு கலப்புமணத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்திலான பேச்சே, இத்தகைய தாக்குதலுக்கு ஊக்கமளிக்கிறது. எனவே, காடுவெட்டி குரு மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
5.    கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையும் அண்மைக் காலமாக இதே போன்று கலப்புமணத்திற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. சடடத்திற்குப் புறம்பான இது போன்ற பேச்சுகளையும், அமைப்புகளையும் தடை செய்யவேண்டுமென்று கோருகிறோம்.

6.    கடும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ள இம்மூன்று கிராமங்களையும் பேரிடர் அழிவாக அறிவித்து, புதிய வீடுகளை முழுமையான அளவில் கட்டித்தரவேண்டும். மறுகுடியமர்வு நடத்தப்படும் வரை அம்மக்களுக்கான மாற்று வாழிடத்தை அரசே உறுதி செய்து தரவேண்டும். சேதங்களை உரிய முறையில் மதிப்பிடும் வகையில், தகுதிவாய்ந்த இழப்பு மதிப்பீட்டுக் குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

7.    தாக்குதலாலும் தீயினாலும் மாணவர்களின் சான்றிதழ்களும் மக்களின் குடும்ப அட்டை, சொத்துப்பத்திரம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களைத் தரும் வகையில் தனி அதிகாரிகளை அந்தந்த ஊர்களிலேயே அமர்த்தி வழங்க அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

8.    பொருளாதார ரீதியான தாக்குதல் என்ற முறையில் சேத மதிப்பு ரூ.15 கோடிக்கு மேல் இருக்குமென்று இக்குழு கருதுகிறது. அதனால் அரசு வழங்கியுள்ள ரூ.50,000/- போதுமானதல்ல. எனவே, வீட்டிற்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியும், நிலமும் வழங்கவேண்டும்.

9.    தருமபுரி மாவட்டத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை இனங்கண்டு அவற்றைத் தலித் மக்களுக்கு வழங்கவேண்டும்.

10.   இத்தாக்குதலைத் தடுக்க மாவட்ட காவல்துறையும் நிர்வாகமும் தவறின என்ற முறையில் அவர்கள் மீது தனிவிசாரணை மேற்கொள்ளவேண்டும். மேலும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட அடிப்படையில் கடமை செய்யத் தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

11. பாதிக்கப்பட்ட தலித் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இப்பாதிப்புகளிலிருந்து உளவியல் ரீதியாக அவர்களை மீட்டெடுக்கும் வகையில், உரிய ஆற்றுப்படுத்தலுடன் கூடிய ஆலோசனைகளை வழங்கத் (Guidance and Counselling) தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும்.

********

தொடர்புக்கு :

1.   Dr.C.Lakshmanan, Co-ordinator, Dalit Intellectual Collective, Chennai /
     lchinnaiyan@gmail.com / 9884527359

2.   Stalin Rajangam, Writer, Intellectual Circle for Dalit Actions, Madurai / stalinrajangam@gmail.com / 9994335339

(புகைப்படங்கள் : யுவபாரதி)


********

தொடர்புடைய சுட்டி : புகைப்படங்கள்

October 07, 2011

பரமக்குடி படுகொலைகள் : உண்மை அறியும் குழுவின் அறிக்கை



(பரமக்குடி படுகொலைகள் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்ட ஓவியர் சந்துருபேராசிரியர்கள் டி.தருமராஜன், சி.லட்சுமணன், அன்புச்செல்வம், ஸ்டாலின் ராஜாங்கம்எழுத்தாளர்கள் யாழன் ஆதி, ஆதவன் தீட்சண்யா, யுவபாரதி, கவின்மலர், சந்திரா, முத்துக்கிருஷ்ணன், ஜெகன்னாதன்வழக்குரைஞர்கள் பால்ராஜ், பகத்சிங், ராமகிருஷ்ணன்பத்திரிகையாளர்கள் பிரேமா ரேவதி, வையவன் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவினரின் அறிதல்களின் (Findings) அடிப்படையில்...)



2011 செப்டம்பர் 11ம் நாள் பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய கலவரத்தினை முழுமையாக ஆராய்வதற்காக கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் பரமக்குடியில் பாதிக்கப்பட்ட கிராமங்கள், பாதிக்கப்பட்ட மக்கள், அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துத் திரட்டிய செய்திகளின் அடிப்படையில் கீழ்கண்ட தரவுகளும், பரிந்துரைகளும் முன் வைக்கப்படுகின்றன.  21.09.11 காலை 11 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பிற்காக வெளியிடப்படும் சுருக்கமான அறிக்கை இது.  

• பரமக்குடியில் காவல்துறை நடத்திய வன்முறை குறித்து ஊடகங்களும், அரசாங்கமும் வெளியிட்ட தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை அல்லது மேலோட்டமானவை என்பதை எங்களின் ஆய்வின் மூலம் கண்டோம்.  

• திரு. ஜான்பாண்டியன் அவர்களைக் கைது செய்ததால் அவரது ஆதரவாளர்கள் 1000 பேர் சேர்ந்து மறியல் செய்து போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கலவரங்களில் ஈடுபட்டனர் என்று கூறுவது முழுக்க கட்டுக்கதை கற்பனை என்பதை நேரடியான சாட்சியங்கள் (மக்கள், உள்ளூர் தலித் அமைப்புகள், வீடியோ மற்றும் புகைப்பட சாட்சியங்கள்) மூலம் அறிந்தோம். ஜான் பாண்டியனை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் சுமார் 20லிருந்து 30 பேர் மட்டுமே. ஆர்ப்பாட்டம் நடக்கும் போது அஞ்சலி செலுத்தும் பல்வேறு அமைப்பினர் வாகனங்களில் சென்றும் வந்தும் கொண்டிருந்தனர். அதே போல் இம்மானுவேல் குரு பூஜைக்காக போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டு குறிப்பிட்ட அச்சாலை குருபூஜைக்கான பயன்பாட்டில்தான் இருந்து வந்தது. எனவே அன்றைக்கு  ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பெரும் திராளனவர்கள் என்று சொல்வதோ, போக்குவரத்திற்கு இடையூறு செய்தவர்கள் என்று கூறுவதோ காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்த வலிந்து சொல்லப்படும் பொய் என்றே அறிகிறோம்.  

• மறியல் செய்தவர்களைக் கலைப்பதற்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் எதையும் செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதை களத்தரவுகள் நிரூபிக்கின்றன. முதல் சூடு நெற்றியை நோக்கியே செலுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான உடல்களில் குண்டு காயம் இடுப்புக்கு மேலே தான் உள்ளது. காலை சுமார் 11.30 மணியளவில் துப்பாக்கிசூடு நடத்தப்பட்டதும் கூட்டம்சிதறியது. ஆனால் மாலை 5 மணி வரை காவல்துறை துப்பாக்கி சூட்டை மீண்டும் தனித்த முறையில் நடத்தியிருக்கிறது. அதில் மறியலோடு தொடர்பில்லாமல் கையில்கிடைப்போரையெல்லாம் சுட்டதோடு, அவர்களை பிடித்து வந்து கடுமையாகத் தாக்கவும் செய்துள்ளனர் (வீடியோ ஆதாரம்) இவ்வாறு மாலை 4 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த தீர்ப்புக்கனி என்ற டிப்ளமோ படித்த 21 வயது இளைஞரைப் பிடித்து அடித்தே கொன்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.  

• ஊடகங்களில் வெளியானது போல் காவல் துறையினரது வஜ்ரா வாகனம் பிற வாகனங்களும் மக்களால் தான் கொளுத்தப்பட்டன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. தங்களது துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்த விரும்பிய காவல் துறையினரே இதில் ஈடுபட்டிருக்கலாம் என்பதைப் பலரின் சாட்சியங்கள் மூலம் சந்தேகமாக கருதுகிறது. ஏனெனில் வஜ்ரா வாகனம் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின் மக்கள் சிதறி ஓடிவிட்டதால் முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதை தக்கசான்றுகள் மூலம் அறிகிறோம்.  

• சட்டபேரவையில் முதலமைச்சரும், ஊடகங்களும் தெரிவித்ததைப் போல இது இனக்கலவரம் அல்ல. மாறாக எளிமையாக கையாண்டிருக்கக் கூடிய விசயத்தை சிக்கலாக மாற்றிய காவல்துறையின் வன்முறை என்றே சொல்ல முடிகிறது. ஒடுக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் அரசியல் எழுச்சியை மட்டுப்படுத்துவது அதன் மூலம் இம்மானுவேல் குருபூஜைக்காக திரளும் அந்த வகுப்பார் மீது சாதிக் காழ்ப்பு கொண்டு செயற்படும் ஆதிக்க வகுப்பினரைத் திருப்திபடுத்துவது என்பதே அரசாங்கம் மற்றும் காவல்துறை ஆகியவற்றின் நோக்கம் என்பதை அறிக்கையின் மூலம் தெரிகிறது.  

• துப்பாக்கிச் சூட்டிலும், காவல்துறையின் தாக்குதலாலும் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை. உரிய 3சிகிச்சையும் உடனடியாக அளிக்கவில்லை. தாக்கப்பட்ட குடும்பத்தாருக்கு உரிய தகவல்களை அளிக்கவில்லை  என்று அலைக்கழிக்கப்பட்டுள்ளனர், ஒருவரை உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதை அறியாமலேயே பிணவறைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  

• துப்பாக்கிச்சூடு, தாக்குதல் போன்றவற்றோடு நில்லாத காவல்துறை பல்வேறு கிராமங்களிலுள்ள தலித்துகள் மீது பொய் வழக்குகள் புனைந்து அவர்களை கைது செய்யத் தேடிக் கொண்டிருப்பதால் எந்த கிராமத்திலும் இப்போது ஆண்கள் இல்லை. பெண்களும், குழந்தைகளும் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளதை எங்கள் குழுவினர் அறிந்தோம். தலித் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தும் பொருட்டு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எச்.பரளை என்ற கிராமத்தில் 18.09.2011ம் நாளில் பயிற்சி என்ற பெயரில் 30க்கும் மேற்பட்ட போலீசார் தெருவுக்குள் இறங்கி, கற்களை வீசுதல், டயர்களை எரித்தல், இரு தரப்பு மோதல் என்றெல்லாம் இரண்டு மணி நேரமாக முன்னறிவிப்பு ஏதும் இல்லாமல் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே இருந்த நிலையில் அச்சமூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

• வன்முறையாளர்கள் சுட்டதாக காவல்துறை கூறுகிறது. ஆனால் சுடப்பட்ட பேரில் ஒருவர் கூட ஜான்பாண்யன் ஆதரவாளர்களாக இல்லை என்பது  குறிப்பிடத்தக்கது.  

• இத்துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டோர் மற்றும் காயமுற்றோர் குறித்த முழுமையான தகவல்களைச் சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களுக்கோ பத்திரிகைகளுக்கோ இதுவரை காவல்துறை அதிகாரப் பூர்வமாக தெரிவிக்கவில்லை. மாறாக அலைக்கழிப்பை ஏற்படுத்துகிறது.  

• கலவரத்திற்கு காரணமாக தமிழக அரசு கூறும் பள்ளப்பச்சோரி சம்பவம் முழுக்க இட்டுக்கட்டப்பட்டது. அச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே எம்குழுவின் ஆய்வு. பள்ளப்பச்சேரியில் தேவரை இழிவுப்படுத்தி எழுதியதாக கூறப்படுவதற்கும், பழனிக்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை அவரை இழிப்படுத்தி எழுதியதையோ, எழுதியவரையோ கண்ணுற்றவர் எவருமில்லை. மேலும் எழுதியதாகக் கூறப்படும் இடம் முழுக்க முழுக்க தேவர் வகுப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள இடம். எனவே இச்சம்பவத்திற்கும் பரமக்குடி வன்முறைக்கும் தொடர்பில்லை. ஜான்பாண்டியனை தக்க பாதுகாப்போடு குருபூஜைக்கு காவல்துறையினர் அழைத்து வந்திருக்க முடியும். 

பரிந்துரைகள் 

• காவல்துறையின் தாக்குதலால் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் வழக்குகளுக்கு பயந்து மருத்துவமனையில் சேர்ந்து உரிய சிகிச்சை பெற முடியாத நிலையில் உள்ளனர். மேலும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வீடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். எனவே தலித்துகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து பொய் வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.  

• தாக்குதலில் இறங்கிய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு பதிவு செய்தால் அதைSC/STவன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு மாற்றி பாதிக்கப்பட்டோருக்கு அதனடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும்.  

• இறந்த குடும்பங்களுக்கு 5 லட்சம் நிவாரணமும், தகுதியானோருக்கு தகுதியான அரசுப் பணிகளையும் வழங்க வேண்டும்.  

• இத்தாக்குதல் குறித்து விசாரிக்க அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கமிஷன் மீது நம்பிக்கை இல்லை. எனவே சி.பி.ஐ விசாரணை வேண்டும்.  

• விரிவான பொது விசாரணை வேண்டும். 


-  யுவபாரதி

October 05, 2011

மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் உண்ணாப் போராட்டம்


மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது.   மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ, சமூகத்துக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிற போது அது அறமான செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ்வகையில் நியாயம்?  நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்து செய்துள்ளன. காந்திதேசம் என்ற கிரீடத்தை பெருமையாகச் சூடிக் கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரணதண்டனையை ரத்து செய்யவில்லை.

இப்போது ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலிருந்த காலம் இருபது ஆண்டுகள். வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தால் கூட இவர்களின் சிறைக்காலம் முடிந்து போயிருக்கும். எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில்...                                     

இந்திய அரசே , மரண தண்டனையை ரத்து செய் !


பேரறிவாளன் , சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை நீக்க 


தமிழக அரசே,  அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேறுக!


என்ற கோரிக்கையை முன்வைத்து 09.10.2011 அன்று சென்னை கோயம்பேட்டில் ஒருநாள் உண்ணாப் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்தியா அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இல் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி தமிழக அமைச்சரவை கூடித தீர்மானம் நிறை வேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பினாலேயே இத்தூக்குத் தண்டனையை நீக்க முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் அருகிலுள்ள ஆட்டோ கேரேஜ்ஜில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாப் போராட்டத்தில் பங்கேற்குமாறு படைப்பாளிகள் அனைவரையும் அழைக்கிறோம்.


பா.செயப்பிரகாசம் 

அமைப்பாளர்களுக்காக.


October 12, 2010

கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை நிராகரிக்கிறோம் : சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டறிக்கை

நன்றி: கீற்று இணையதளம்

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமறைக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஸ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல அமெரிக்க எழுத்தாளன் ஜான் ரீட் மாஸ்க்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோப்பர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள்.

வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பெர்ட்ராண்ட் ரஸ்ஸல், ழான் பவுன் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு பிசாசு எனத் தனது நோபல் பரிசு உரையில் பிரகடனப்படுத்தினார் நாடகாசிரியனான ஹெரால்ட் பின்ரர்.

படைப்பாளிகள்,கலைஞர்கள் எந்த மதிப்பீடுகளுக்காக நிற்கிறார்கள்? இவர்கள் கருத்துச் சுதந்திரத்திற்காகத் தம்மை உறுதியாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள். வாளை விடவும் எழுதுகோல் வலிமையானது என்று நிரூபித்தவர்கள்.

சிறிலங்காவில் எழுதுபவர்கள் தேர்ந்துகொள்ள இன்று என்ன இருக்கிறது? லசந்த போன்ற மனச்சாட்சியுள்ள பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் தமது உயிராபத்து கருதி சிறிலங்காவிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். மாற்றுக் கருத்து ஊடகங்கள் அனைத்தும் தாக்கப்படுகின்றன. கலைஞர்கள் காணாமல் போனோராக அறிவிக்கப்படுகிறார்கள். படைப்பாளிகளுக்கும் கலைஞர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் பாதுகாப்பில்லாத நாடு சிறிலங்கா என உலக ஊடகங்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றன.

தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை பயங்கரவாதமாகச் சித்தரித்து, தமிழின அழிப்பை நடத்தி முடித்துள்ளது சிறிலங்கா பயங்கரவாத அரசு. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்டத்தினை அழிக்க எடுத்த இராணுவ நடவடிக்கையின்போது, சர்வதேச யுத்த விதிகளை மீறி, தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் மூலம் போராளிகளையும் தமிழ் மக்களையும் வகைதொகையின்றிக் கொலை செய்தும், பதுங்குகுழிகளில் தஞ்சம் புகுந்தவர்களை மண்மூடிக் கொன்றும் சரணடைந்தவர்களை சல்லடையாக்கி நரபலியாடி நின்றது இந்தச் சிங்கள பயங்கரவாத அரசு.

யுத்தம் முடிவடைந்த பின்பும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு சாட்சியங்கள் இல்லாமல் ஆக்குவதற்காக, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களை யுத்தபூமியில் பார்வையிட தொடர்ந்தும் அனுமதி மறுத்து வருகிறது. நடைபெற்ற இந்த இனப்படுகொலை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச நீதிமன்றில் விசாரிக்கப்படவேண்டும் என்று உலகின் மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புக்கள் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகிறார்கள்.

தமிழர்களின் இரத்தத்தில் தோய்ந்துபோய் இருக்கும் இனவெறி சிங்கள அரசு, நீதிக்கான தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள, தனது நிரந்தர செயற்பாடான பொய், ஏமாற்று, வஞ்சக நடிப்பு ஆகியவற்றை மீண்டும் அரங்கேற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரசியற் களத்தில் மட்டுமல்லாது, தமது பொருளியல் நலன் கருதிய வகையில், கலை, இலக்கியம், விளையாட்டு கேளிக்கை ஆகியவைகளின் மூலம் தனக்கான அதிகார வெளியை சிறிலங்கா அரசு ஏற்படுத்திக்கொள்ள முயல்கிறது.

சிறிலங்கா பயங்கரவாத அரசின் இந்தத் திட்டத்தின் சங்கிலித் தொடர்ச் செயற்பாடுகளாக கொழும்பில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழா, யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கேளிக்கை, சிறிலங்கா இராணுவத்தினர்களுடனான இந்திய நடிகர்களின் கிறிக்கெற் விளையாட்டு ஆகிய களியாட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன் இன்னொரு முனையாகவே 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மகாநாடு நோக்கப்படுகின்றது. சர்வதேச தமிழ் எழுத்தாளர்களைப் பங்குபற்ற வைப்பதன் மூலம் அனைத்துத் தமிழர்களும் தனது பக்கமே என்ற தோற்றத்தினை அரசு ஏற்படுத்த முயல்கின்றது. இதற்கு நாம் பலியாகக்கூடாது.

சிங்கள மேலாதிக்கத்தால் இறுகிப்போன சிறிலங்கா அரசு, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களை கொழும்பில் அனுமதிக்க மறுத்துவரும் நிலையில், தனது பகை இனத்தின் இலக்கிய மகாநாட்டை கொழும்பில் நடத்த அனுமதித்திருக்கிறது என்றால் சிங்கள அரசிற்கு அதனால் ஏற்படும் அரசியல் அனுகூலம்தான் இதற்கான அடிப்படையாக இருக்குமே தவிர, தமிழ் எழுத்தாளர்களது செயற்பாட்டு நலன்களின்பால் கொண்ட அக்கறையாக இருக்க முடியாது.

சிறிலங்கா பயங்கரவாத அரசினால் உருட்டப்படும் சதுரங்கக் காய்களாகவே இந்த எழுத்தாளர்கள் ஆகிப்போவார்கள் என்பதற்கு அப்பால் வேறெதுவும் நிகழப்போவது இல்லை.

இன்னும் உலர்ந்துவிடாத எமது மக்களின் இரத்தச் சுவடுகளின் மீது, எமது பெண்களதும், பச்சிளம் குழந்தைகளினதும், முதியவர்களினதும் மரணித்த, எரியூட்டப்பட்ட உடலங்களின் மீது நடத்தப்படும் சிறிலங்கா அரசின் அரசியல் நாடகத்திற்கு துணைபோகும் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாட்டைப் எல்லா வகையிலும் புறக்கணிப்பதே மனச்சாட்சியுள்ள படைப்பாளிகள், கலைஞர்களது வரலாற்றுக் கடமையாகும் என நாங்கள் கருதுகிறோம்.

நீதியின்மேல் பசிதாகம் உடைய படைப்பாளிகள், கலைஞர்கள் தார்மீக நிலையில் மனிதகுல மனச்சாட்சியாகவே இருப்பவர்கள். அநீதிகளை, சிறுமைகளைக் கண்டு பொங்குபவர்கள். நொந்துபோன மக்கள் வலியின் குரலை ஓங்கி ஒலிப்பவர்கள். நீதிக்காக அதிகாரத்தை எதிர்ப்பவர்கள். வரலாறு நெடுகிலும் நிமிர்ந்து நிற்கும் இந்தத் தார்மீக அடிப்படைகளில் நின்று எழுத்தாளர்களாகவும் கலைஞர்களாகவும் நாங்கள் கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நிராகரிக்கிறோம்.


January 09, 2010

செங்குருதியில் நனையும் செம்மொழி மாநாடு

தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பு,
29, பத்திரிகையாளர் குடியிருப்பு,
திருவான்மியூர், சென்னை – 600 041.
மின்னஞ்சல் : jpirakasam@gmail.com பேசி : 94440 90186

05.01.2010.

தோழமைக்குரிய இளம் ஆய்வாளர்களே,

தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் சார்பில் உங்களுக்கு மனமார்ந்த வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இன்று தமிழினத்தை துன்ப இருள் கவ்விக் கொண்டிருக்கிறது. இந்நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகள் தமிழீழ மக்களின் கண்ணீராலும் குருதியாலும் நனைந்து கொண்டிருக்கின்றன. இந்த வன்கொடுமைகளுக்குக் காரணமான நம் அரசுகள் இப்பொழுது இது அயல்நாட்டுச் சிக்கல் என்கின்றன. நாம் நமது கவலை என்கிறோம்.

உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு எந்தப் பின்னணியில் கூட்டப்படுகிறது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள். ஒரு கட்சி மாநாட்டை அறிவிப்பது போல் உலகத்தமிழ் மாநாடு குறித்துத் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது. உரிய கால இடைவெளி, ஆராய்ச்சிப் புலம்சார்ந்த அணுகுமுறை இல்லாமல் செய்யப்பட்ட இந்த அறிவிப்பை உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் நோபரு கரோஷிமா ஏற்க மறுத்து விட்டார். இதை அடுத்துத் தடாலடியாக இந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்களுக்குப் பின்னியங்கும் அரசியலை நுழைபுலம் காணும் ஆய்வாளர்களாகிய நீங்கள் நன்கறிவீர்கள்.

ஈழத்தமிழர் சிக்கலில் உலக அளவில் சரிந்து வரும் தம் செல்வாக்கை உயர்த்துவது என்பது வெளிப்படையான காரணம். இதை வெற்றியுடன் நடத்துவதன் மூலம் தாமும் தமது அரசும் எடுத்த நிலைப்பாடுகளை உலகத் தமிழினம் ஒப்புக் கொண்டு விட்டது என்பது இனி வெளிப்படுத்திட இருக்கிற காரணம். அரசியல் சதுரங்கத்தில் கலைஞரின் காய்களாக நகர்த்தப்படுவதாகத் தமிழ் சமூகமும் தமிழ் மொழியும் ஆனது தான் இன்றின் துன்பியல் வரலாறு.

குறைபடியாத காலைக்கதிர்கள் நீங்கள் தாம் துடிப்புமிக்க மனச்சாட்சியும் நீங்கள் தாம் உங்களை ஒத்த இளைஞர்கள் களச்சாவு கண்டுள்ளனர். தீக்குளித்து மாண்டுள்ளனர். அவர்கள் செய்த ஈகங்கள் அளப்பரியவை. இந்த வரிசையில் இம்மாநாட்டைப் புறக்கணிப்பது நீங்கள் செய்யும் ஒப்பற்ற ஈகமாக வரலாறு பதிவு செய்யும். உங்கள் ஆய்வுத்திறனைக் காட்டும் பெரியதொரு வாய்ப்புத்தான் இது. எனினும் இதில் நீங்கள் பங்கேற்பது அறம் சார்ந்ததாய் இருக்காது. இளமையில் நிற்கும் உங்கள் முன் விரிந்து கிடக்கிறது காலம். இதனினும் மதிப்புமிக்க வாய்ப்புக்கள் காத்துக் கிடக்கின்றன.


ஆம், தமிழினத்தை ஒளிபெறச் செய்பவர்கள் நீங்களன்றோ!

தோழமையுடன்

ஒருங்கிணைப்புக் குழு :
பேராசிரியர் சரசுவதி
கவிஞர் இன்குலாப்
இராசேந்திர சோழன்
சூரியதீபன்
பொன். ஏழுமலை
கவிஞர் ஜெயபாஸ்கரன்
கவிபாஸ்கரன்
செ. சுகுமார்