February 13, 2015

முருக வழிபாடு - ஓர் உரையாடல்

https://www.facebook.com/ilango.krishnan.1/posts/850972431615102என்ற பதிவில் இளங்கோ கிருஷ்ணன் 'முருக வழிபாடு தமிழ் மதமா?' என்று தொடங்கிய உரையாடலில் பங்கேற்க முயல்கையில் என் பின்னூட்டம் நீளமாகும் எனத் தோன்றியது. எனவே தனியே பதிவிடுகிறேன்.)

1. அண்ணாதுரை சொன்னதாக இளங்கோ கிருஷ்ணன் சொல்லியிருப்பதை நான் இதற்கு முன் படித்ததில்லை. அப்படிக் கருத வாய்ப்பில்லை என்றும் சொல்லமுடியாது. அண்ணாவை முன்வைத்து தன்படங்களில் பாடும்-பேசும் எம்ஜிஆரின் பல்லாண்டு வாழ்க, நம் நாடு முதலிய பிரபல படங்களில் கையில் வேல் தாங்கிய முருகன் படம் இடம்பெறுவதைக் கவனித்திருக்கிறேன். ஒன்றே குலமென்று பாடுவோம்... என்ற பாடலைக் கவனித்தால் இந்த சொல்லாடல் முக்கியத்துவம் பெற்ற காரணம் தெரிகிறது.

2. குறிஞ்சி நில முருகன், பாலை நிலக் கொற்றவைச் சிறுவன். முல்லை நில மாயோன், பாலை நிலக் கொற்றவை சோதரன். குறிஞ்சி-முல்லை-பாலைக்குள்ள தொடர்பை நாமறிவோம். நிலவுடைமை வலுப்பெற்று பிற திணை வாழ்வுகளை மருத நில வாழ்வியல் உள்ளிழுக்கும் நிகழ்வும், சுடலையாண்டி கல்யாண சுந்தரனாகி உமாமகேசுவரனாகவும், சோமாஸ்கந்தனாகவும் ஆகி நிலைபெறும் நிகழ்வும், பேரரசு உருவாக்கமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சிலப்பதிகார வேட்டுவ வரியிலேயே கலைமானின் மீதேற்றி வழிபடும் இளம்பெண் வழிபாட்டிற்கிடையிலேயும் கொற்றவையை சிவன் மனைவியாகவும், மாயன் சோதரியாகவும் போற்றும் மரபு தொடங்கிவிடுகிறது.

3. பற்பல திணை வாழ்வுகள் கலந்து மையப் பெருஞ் சமூக உருவாக்கம் நிகழ்கையில் அந்தந்த திணைமரபினர் உள்ளிழுக்கம் என்பது அந்தந்த தெய்வங்கள் அதற்கென ஒரு மதிப்புற்குடைய இடம் என்பதும் சேர்ந்தே நிகழ்ந்திருக்கிறது. திணைக் கடவுள்கள் பெருங்கடவுள்களுள் ஒருவராகின்றனர். ஆயினும் அவர்களுக்குரிய தனிப்பட்ட வழிபாடு-படையல்களில் பழம்பண்பு தெரிகிறதுதான். குறிப்பாக இன்றும் முருகனுக்குத் தேனும் திணைமாவும் முக்கியம்தான்.

4. கொற்றவை ஒரு சோதரனுக்கு சோதரியாகவும் (அதுவும் தங்கை) ஒரு கணவனுக்கு மனைவியாகவும் ஒரு மகனுக்குத் தாயாகவும் ஆக்கப்பட்டு மையப் பெருஞ் சமூக உருவாக்கத்திற்குள் உள்ளிழுக்கப்படுவதும், பெண் தலைமை மறைந்து ஓர் ஆண் மையமாகவே சோதரன்-கணவன்-மகன் என ஏதோவொரு வகையில் ஆணோடு சேர்த்தே அடையாளம் காணப்படும் நிலையும், திணைச் சமூகம் - பெருஞ்சமூகம், அடையாள நிலம் - உடைமை நிலம் இம்மாற்றங்களோடு பெருந் தொடர்புடையது.

5. இளங்கோ கிருஷ்ணன் குறிப்பிடுவது போல், 'இன்றிருக்கும் முருகன் கோவில்கள் - உரையாடல்கள் எல்லாம் அதிக பட்சம் ஒரு நானூறு வருட வரலாறு உடையவை' என்பது ஏற்புடையதல்ல. பத்துப்பாட்டில் ஒன்றான திருமுருகாற்றுப்படையிலேயே அறுபடைவீடுகள் - அங்கு கோயில் கொண்டுள்ள முருகன்கள் உண்டு. ஆகவே அறுபடை வீடுகளுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை ஆயிரம் வருட வரலாறு உண்டு. முருகன் போர்த் தெய்வம். படைவீடு என்பதற்கு போர் நிமித்தம் தற்காலிகமாகப் படைதங்கும் இடம் எனத் தனித்துச் சொல்லவேண்டியதில்லை. இன்றிருக்கும் பல கோயில்கள் 500 ஆண்டுகளுக்கு முன்பே பேர் பெற்றவை என்பதற்கு அருணகிரிநாதரின் திருப்புகழே சாட்சி.

6. சைவத்தால் எவ்வளவு உள்ளிழுக்கப்பட்டாலும் முருக வழிபாடும் சரி, சக்தி வழிபாடும் சரி, தனித்தும் வலுவாக இயங்கின என்பதால்தான் ஆறுமதங்களில் சைவம் மட்டுமின்றி, கௌமாரமும் சாக்தமும் தனித்துக் கூறப்படுகின்றன. (வைணவம் ஈர்த்துக் கொண்ட சக்தி வழிபாட்டின் கூற்றுக்கும், சைவம் ஈர்த்துக் கொண்ட சக்தி வழிபாட்டின் கூற்றுக்கும் உள்ள பெரும் வேறுபாடு குறித்து நிறைய பேசலாம். முருக வழிபாடு குறித்த இக்குறிப்பில் வேண்டியதில்லை).

7. தமிழைத் தாய்மொழி-ஆட்சிமொழி-இலக்கியமொழியாகக் கொண்ட சோழ - பாண்டியப் பேரரசுகள் அடுத்தடுத்த இரு நூற்றாண்டுகளில் வலுவிழந்து வீழ்ந்து, தெலுங்கைத் தாய்மொழி - ஆட்சி மொழி -இலக்கிய மொழியாகக் கொண்ட விஜயநகரப் பேரரசு தமிழகத்தில் வேரூன்றி நிலைபெற்றதற்கும், அந்த 14-ஆம் நூற்றாண்டுக்குப் பின், முருக வழிபாடு தமிழ் - தமிழ்க்கடவுள் என்ற அடையாளத்தோடு படிப்படியாக வேகம் கொண்டு எழுந்ததற்கும், ஆள்வோர் - ஆளப்படுவோர் என்ற முரணின் ஒரு குறியீடாக முருகன் இருந்திருக்கிறான் என்பதற்கும் வரலாறு - மொழி - அடையாள ரீதியாக நெருங்கிய தொடர்புண்டு. முருகன் தமிழ்ப் பெருங் கடவுளானான்.

8. மேலும், விஜயநகரப் பேரரசு, அதன் கிளைகளான நாயக்க மன்னர்கள் சைவம் - வைணவம் இரண்டையும் ஆதரித்தனர் என்றாலும் வைணவமே அவர்கள் சார்ந்த சமயம். திருமாலானவன் பெருமாள் எனும் பெரியவனாயும் கண்ணன் எனும் சிறுவனாகவும் இருப்பவன். சைவர்களின் சிவன் பெரியவன் மட்டுமே என்பதால் கண்ணனுக்கு இணையாக சிறுவனாகவுமுள்ள முருகனைச் சைவர்களும் அறுமுகச் சிவன் என்றனர். ஆட்சியிழந்த சைவம் தம் தரப்பில் அதிக நூல்களை எழுதியதும் அக்காலத்தில்தான். முருகன் குமரனாக மட்டுமின்றி சைவப் பெருங் கடவுளாகவும் நிலைபெற்றான்.
9. எல்லாப் பெருங்கடவுளருக்கும் தமிழில் போற்றிப் பனுவல்கள் உண்டு. ஆனால் மற்றவர்களை ஒப்பிடுகையில் மந்திரப் பனுவல்கள் தமிழில் முருகனுக்கே அதிகம். சித்தர் பாடல்களின் பேசு பொருள் சார்ந்து பரிச்சயமும், ஈடுபாடும் கொண்டவர்கள் முருகன் – தமிழ் தொடர்பை இன்னும் நெருக்கமாக உணர்வர்.

No comments: