January 13, 2013

கலர் வாங்கித் தர்றேன் சார்!


ஒவ்வொரு வருடமும் வருடப் பிறப்பு, பொங்கல், தீபாவளி காலங்களில்தான் சொந்த ஊருக்கு வருவது என்று ஆகிவிட்டது. நேற்று அதிகாலை ஊர்வந்து சேர்ந்தேன். இங்கிருக்கும் நாட்களில் ஊருக்கு மூன்று திக்கிலும் இருக்கும் மதுரை, வத்தலக்குண்டு, தேனி நகரங்களைச் சேர்ந்த நண்பர்களை – ஒரு நாளைக்கு ஒரு ஊர் என்று – சென்று சந்திப்பது வழக்கம்.

அப்படித்தான் நேற்று மாலை வத்தலக்குண்டில் முகாம். மக்கள்வரத்து மிக்க வணிக நகரம். கொடைக்கானல் செல்லும் அரசுப் பேருந்துகளும், சுற்றுலாப் பேருந்துகளும் இங்கு வந்துதான் மலையேறும். மார்கழி மாதம் ஐய்பபசாமிப் பேருந்துகள் இவ்வழியாக வரிசை கட்டிச் செல்லும். பேருந்து நிலையத்தை ஒட்டியிருக்கும் ஒரு நண்பரது துணிக்கடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். இரண்டு நிமிடத்தில் அங்கிருப்பேன் என்று கைப்பேசியில் சொன்ன இன்னொரு நண்பர் இருபது நிமிடங்களில் வந்து சேர்ந்தார். தன் ‘பைக்’கிலிருந்து இறங்காமலேயே, சேவுகப்பட்டி பக்கம் ஒரு வேலை என்றார். என்னையும் கூப்பிட்டார். ஏறிக்கொண்டேன். அவர் எமது துறை நண்பரும் கூட. 

வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் சாலையில் ஒரு மைல் தொலைவிற்கும் உள்ளாகவே இருக்கும் கிராமம் சேவுகப்பட்டி. நகரையும் அதையும் பிரிப்பது ஒரு சிறு தரைப்பாலம் மட்டுமே. வத்தலக்குண்டு பயணத்தின் போதெல்லாம் அக்கிராமத்தைக் கடந்து போய் வந்திருக்கிறேனே தவிர, இதுவரை ஒருமுறை கூட அங்கு இறங்கியதில்லை.

சேவுகப்பட்டியில் பிரதான சாலையை ஒட்டியிருந்தது நாங்கள் பார்க்க வந்த பகுதி. காய்ச்சல் என்று சொல்லி தேனியை அடுத்த ஒரு மருத்துவமனையில் சேர்ந்திருந்த ஒரு இளைஞர் அங்கு தன் முகவரி என்று பதிவு செய்திருந்த வீடு அங்கிருந்தது.

வண்டியை நிறுத்திவிட்டு, முதலில் அப்பகுதியிலிருந்த எட்டு சிறு தெருக்களுக்குள்ளும் சென்று பார்த்தோம். குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். நண்பரின் பணிப்பொறுப்புக்கு உட்பட்ட பகுதி என்ற வகையில், நண்பரை அடையாளம் கண்டுகொண்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வயதான பெண் எங்களோடே நடந்துவந்தார்.

தெருக்களும், வீட்டு வாசல்களும் நன்கு பராமரிக்கப்பட்டிருந்தன. டயர், சிரட்டை, பிளாஸ்டிக் கப், உடைந்த பானை, ஓடு என்று கொசு உற்பத்திக் களமாக வாய்ப்புள்ள ஒரு பொருளும் அங்கில்லை. சில வீட்டு வாசல்களிலிருந்த சிமெண்ட் தொட்டிகளும் சுண்ணாம்பு பூசிக் கழுவப்பட்டே நீர் நிரப்பப்பட்டிருப்பது தெரிந்தது. வாரம் ஒரு முறை தவறாமல் அப்படிச் செய்வதையும், அடிக்கடி குளோரினேஷன் செய்யப்படுவதையும் அங்கங்கிருந்த மக்கள் உறுதி செய்தனர். அப்பகுதியில் பெரியவர்கள், குழந்தைகள் என எவருக்கும் காய்ச்சல் ஏதுமில்லை என்றும் தெரிவித்தனர். பின் பதற்றமின்றி சம்பந்தப்பட்ட வீட்டு முகவரிக்குச் சென்றோம்.

அவ்வீட்டில் சம்பந்தப்பட்ட இளைஞரின் அண்ணன் குடும்பம் இருந்தது. பொறுப்பற்றுத் திரிந்ததைக் கண்டித்ததால் வீட்டில் கோபித்துக் கொண்டு போன தன் கொழுந்தன் ஊருக்கு வந்தே மூன்று வருடங்கள் ஆகின்றன என்றும், தொலைபேசியில் கூட பேசுவதில்லை என்றும் சொன்னார் அவரது அண்ணி. அருகிலேயே நின்றிருந்த இன்னொரு பெண்ணும் அதை ஆமோதித்தார். எனினும், எவருக்கேனும் காய்ச்சல் முதலியன தென்பட்டால், உடனே தனக்கோ, அப்பகுதியிலேயே உள்ள செவிலியரிடமோ தவறாமல் தெரிவிக்கவேண்டும் என்று அவர்களிடம் சொன்னார் நண்பர். கிளம்பத் தயாரானோம்.

முக்கால் மணிநேரமாய்ச் சுற்றியதால் சற்றுத் தாகமாக இருக்கவே அந்த அண்ணியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டேன்.

‘கலர் வாங்கித் தர்றேன் சார்!’ என்றார்.

‘சேச்சே! அதெல்லாம் வேணாம்மா. தண்ணி மட்டும் குடுங்க. போதும்’ என்றேன்.

ஒரு வித கூச்சத்துடன் ‘சார்! எங்க வீட்ல போயி தண்ணி கேக்கறீங்களே?’ என்றார் அந்த அண்ணி. பக்கத்திலிருந்த பெண் ‘அது பெரிய பாவங்க’ என்றார். என் அம்மா வயதிருக்கும் அவர்களுக்கு.

பள்ளிப்பருவத்துக்குப் பின் பெரும்பாலும் நகரப் பகுதிகளிலேயே வளர்ந்து, வாழ்கிறவனுக்கு இந்த வார்த்தைகளுக்குப் பின்தான் இது தலித் மக்கள் வாழும் பகுதி என்று தெரிந்தது.

‘என்னம்மா? இந்தக் காலத்தில போயி இப்படிப் பேசறீங்களே? தண்ணி குடுங்கம்மா’ என்று அந்த அண்ணியிடம் சொல்லிவிட்டு, பக்கத்திலிருந்த பெண்ணிடம் சொன்னேன் ‘தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுக்கறது பாவமில்லைம்மா. புண்ணியம்’ என்று.

‘நாங்க சுத்தமாத்தாங்க வெச்சிருக்கோம். இருந்தாலும்…’ என்று இழுத்தபடியே தண்ணீர்ச் சொம்பை நீட்டினார் அந்த அண்ணி. குடித்துவிட்டு நன்றி சொல்லிக் கிளம்பினேன்.

பேச்சுவாக்கில் ‘இந்தக் காலத்துல போயி’ என்று சொல்லி விட்டதை உணர்ந்தேன். எந்தக் காலத்திலும் இது சரியில்லையே! 

முதன்முதலில் இப்போதுதான் சேவுகப்பட்டிக்கே வருகிறேன். அப்பெண்களுக்குஎன் குறித்து ஏதும் தெரியாது. ஆனால் நான் ஒரு 'ஊர்'க்காரன் என்று புரிந்துகொள்வது அவர்களுக்குப் போதுமானதாயிருக்கிறது. பாவபுண்ணியக் கருத்தாக்கமும் ஊருக்கும் சேரிக்கும் வேறாயிருக்கிறது. கடை பாட்டிலுக்குத் தீட்டு இல்லை! வீட்டுச் சொம்பிற்குத் தீட்டு இருக்கிறது?

‘அவங்க அப்படித்தான் பாஸ். நாம எவ்ளோ சாதாரணமாப் பழகினாலும் அவங்க அப்படித்தான் நினைப்பாய்ங்க. இப்போ நீங்க தண்ணி வாங்கிக் குடிச்சதைப் பத்திக் கூட பத்து நாள் பேசுவாங்க’ என்றார் நண்பர். எனக்கு என்னவோ போலிருந்தது. இரண்டு மூன்று நிமிடத்தில் வத்தலக்குண்டு வந்துவிட்டோம்.

நண்பர்கள் மத்தியில் பல விஷயம் பற்றியும் பேச்சு வந்தது. நகரம் விரிவடைந்து வருவதைப் பற்றி, நகரை அடுத்துள்ள பகுதிகளின் நிலமதிப்பு பல மடங்கு உயர்வதைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டு ‘டவுன் சிட்டியாயிட்டு வருது’ என்றார் ஒரு நண்பர். மாநகரம் என்பது மண்விலை மட்டுமா? மனப்பான்மை மாற்றமில்லையா?.

சுற்றுப்புறத்தில் சுகாதாரக் குறைவில்லை. நோய்க் காரணிகள் ஏதுமில்லை. ஆனால் மனதளவில் ஊர் நோயுற்றிருக்கிறது. அதன் தாக்குதல் சேரியில் வெளிப்படுகிறது.

யுவபாரதி

No comments: