தன் தந்தையால் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்ட தம்பி
அதிகாயன், இலக்குவன் கணையால் கொல்லப்படுகிறான். அவனோடு கும்பன், நிகும்பன், நராந்தகன்
முதலான படைத்தலைவர்களும் களத்தில் கொல்லப்படுகின்றனர். இதையறிந்ததும் மேகநாதன் இராவணனிடம்
சொல்கிறான்: 'கொன்றார் அவரோ? கொலை சூழ்க! என நீ கொடுத்தாய்'
'தெரிந்தே பலி கொடுத்தாயே, அப்பா! வினைவலிமை, தன்வலிமை,
மாற்றான் வலிமை, துணை வலிமை இவற்றை ஒப்பிட்டுப் பார்க்காமல் மன்னன் என்ற பெயரில் இத்தனை
பேரைப் பலி கொடுத்தாயே, அப்பா!’
எனினும், 'என் தம்பியைக் கொன்றவனை கூற்றுவனுக்குத் தராமல்
போய் தேவர் குழாம் நகைக்கும் வண்ணம் பாரில் இருந்தேன் எனின், நான் அவ் இராவணி அல்லேன் ' என வஞ்சினம் கூறிப் போர்க்களம் சென்ற மேகநாதன் பெரும்போருக்குப் பின் இறந்துபடுகிறான்.
தூதுவர் மூலம் செய்தி அறிந்த இராவணன் கதறுகிறான். (இராவணி என்றால் இராவணனின் வழித்
தோன்றல்).
மைந்தவோ எனும், மா மகனே எனும்,
எந்தையோ எனும், என் உயிரே எனும்,
முந்தினேன் உனை, நான் உளனே எனும்,
வெந்த புண்ணிடை வேல் பட்ட வெம்மையான்.
'என் மகனே! என் செல்வமே! என் அப்பனே! என் உயிரே! காலனிடம்
உன்னை முன்னனுப்பிவிட்டு நான் இன்னும் உயிரோடு இருக்கிறேனே' எனப் புலம்புகிறான் இராவணன்.
தன் தம்பியையும் இளைய மகனையும் ஏற்கனவே பறிகொடுத்த இராவணன் தனக்கு ஈமக்கடன் செய்ய வேண்டிய
மூத்த மகனையும் இழந்துவிட்டான். வெந்த புண்ணில் வேல்பட்டது போல் பத்துத் தலைகளும் பரிதவிக்கின்றன.
வாகை சூடித் திரும்புவான் என்று தான் நினைக்கையில் களப்பலியாகிவிட்டான்
மகன். மகன் உடல் தேடி களம் புகுகிறான் இலங்கை வேந்தன். தேவர், இயக்கர், கந்தருவர் முதலான
சேவகர்கள் யாவரும் அவன் பின்னாலேயே ஓடிவருகின்றனர். போர்க்களத்தில் கிடந்த பிணங்களை
உண்பதற்காகப் பேய்களும், கழுகுகளும் சூழ்ந்திருக்கின்றன.
அழுதவால் சில, அன்பின போன்ற, அடி
தொழுதவால் சில, தூங்கினவால் சில,
உழுத யானைப் பிணம் புக்கு ஒளிந்தவால் –
கழுதும் புள்ளும் அரக்கனைக் கண்டதும்.
அவற்றில் சில இராவணனைக் கண்டதும் அழுகின்றன. சில அன்பின்
மிகுதியால் துடிக்கின்றன. அவனது அடிதொழுகின்றன சில. உண்ட களைப்பில் உறங்குகின்றன சில.
வீழ்ந்து கிடந்த யானையின் பிணத்திற்குப் பின்னால் சில பேய்களும் கழுகுகளும் ஒளிந்து
கொள்கின்றன.
இராவணனின் கண்களுக்கு இவை ஏதும் புலப்படவில்லை. பிற
யாரொருவரையும் பார்க்கும் மனநிலையில் அவன் இல்லை. தன் மகன் மேகநாதனின் உடலைத் தேடுகிறான்.
கோடிக் கணக்கில் வீழ்ந்து கிடந்த குதிரைகளின் உடல்களையும், அரக்கர்கள் யாக்கைகளையும்,
யானைகளின் பிணங்களையும், உடைந்து கிடந்த தேர்களையும் உருட்டிப் புரட்டிப் பகல் முழுக்கத்
தேடுறான். பேர் சொல்லப் பெற்ற பிள்ளையின் பிணத்தைத் தேடுகிறான். 'நாடினான், தன் மகன்
உடல், நாள்எலாம்' என விசும்புகிறான் கம்பன்.
மெய் கிடந்த விழி வழி நீர் விழ
நெய் கிடந்த கனல் புரை நெஞ்சினான்
மொய் கிடந்த சிலையொடு மூரி மாக்
கை கிடந்தது கண்டனன், கண்களால்.
கண்களில் நீர் வழிய வழிய, நெஞ்சு நெய் கனல் பட்டு உருகிய
இராவணன் முதலில் காண்பது மேகநாதனின் கைகளை. அக்கைகளோ ஏந்திய வில்லையும் கணையையும் விடாது
கிடந்தன. மகனின் கைகளை எடுத்து தன் தலைமேல் வைத்து அழுகிறான். அதற்குப் பிறகே மகனின்
மெய் கண்டு அதன்மேல் விழுகிறான்.
கை கண்டான் பின் கருங்கடல் கண்டென
மெய் கண்டான் அதன்மேல் விழுந்தான் அரோ!
பெய் கண்தாரை அருவிப் பெருந் திரை
மொய் கண்டார் திரை வேலையை மூடவே.
இராவணனின் கண்களிலிருந்து அருவியென பெருகிய நீர் கடலையே
மூடுவதைக் கண்டனர் அக் காட்சியைக் கண்டவர்கள். அம்புகள் அமிழ்ந்து கிடந்த மகனின் உடலை
எடுத்து, தன் மார்போடு அணைத்து அரற்றுகிறான் இராவணன். 'அப்புமான் உற்றது யாவர் உற்றார்
அரோ!' என்கிறான் கம்பன். ஐயோ! அத்தலைவன் உற்ற துயரம் யார் உற்றார்?
மேகநாதனின் தலையை மட்டும் காணவில்லை. அவனைக் கொன்ற அந்த
மானிடன்தான் கொண்டு சென்றிருக்கவேண்டும் என்றுணர்ந்து விண் திறந்திட விம்மி அரற்றினான் இராவணன். 'என் பகைவர் என் புத்திரனையம் கொண்டு போயினரே! அம் மானிடர் இருவரும், அக் குரங்கும்
போர்க்களத்தே இருக்கின்றனரே. இன்னும் மாளவில்லையே! இனிமற்று உண்டோ, இராவணன் வீரவாழ்க்கை' எனக் கழிவிரக்கம் கொண்டு கதறுகிறான் இராவணன்.
சினத்தொடும் கொற்றம் முற்றி, இந்திரன் செல்வம் மேவி,
நினைத்தது முடித்து நின்றேன், நேரிழை ஒருத்தி நீரால்,
எனக்கு நீ செய்யத்தக்க கடன் எலாம், ஏங்கி ஏங்கி,
உனக்கு நான் செய்வதானேன்! என்னின்யார் உலகத்து உள்ளார்?
‘சினத்தோடு எதிர்நின்று வென்று இந்திரனின் செல்வத்தை
அடைந்தேன். நினைத்ததை எல்லாம் செய்து முடித்தேன். ஒரு பெண் மீது கொண்ட ஆசையால், எனக்கு
நீ செய்ய வேண்டிய ஈமக்கடன்களை எல்லாம், என் மகனே! உனக்கு நான் செய்யும்படி ஆனதே! என்னைப்
போன்ற ஒரு துர்ப்பாக்கியவான் யாரேனும் இவ்வுலகத்தில் உண்டா? என் மகனே!’
- யுவபாரதி
No comments:
Post a Comment