April 26, 2016

மரக்கிளையும் பற்றுக்கோலும்



* அரசு என்பது மக்களின் சமூக வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி மேலாண்மை செய்யவும் பாதுகாக்கவுமான நிறுவனம். சமூக நிறுவனங்களுக்குள் அதுவே அதிகாரம் மிக்கது.

* ஒரு அரசாங்கத்தின் ஆகச்சிறந்த பரிமாணம் என்பது அதன் மக்கள் பெற்றுள்ள அரசியல் விழிப்புணர்வே.

* அரசியல் என்பதே நலன்கள், மோதல்கள், அதிகாரம் என்ற மூன்றோடும் தொடர்புடையது.

மேற்கண்ட குறிப்புகளில் அரசு-அரசாங்கம்-அரசியல் என்ற சொற்களுக்குப் பதிலாக சாதி என்ற சொல்லைப் பொருத்திப் பார்த்தால் மிகவும் பொருந்தும்.

இந்நாட்டில்/மாநிலத்தில் ஒவ்வொரு முறையும் ஆளவிருக்கும் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையான தேர்தலில் சாதி முக்கியப் பங்கு வகிக்கிறது; பெரும்பாலான மக்கள் தாங்கள் சாதி பார்த்து வாக்களிப்பதில்லை என்றே சொல்லிக் கொண்டாலும், அவ்வத் தொகுதிகளில் ஆதிக்கம் பெற்ற பெரும்பான்மைச் சாதியைச் சார்ந்தவர்களே பெரும்பாலும் வேட்பாளர்களாகிறார்கள்; அக்கறை கொண்டு விமரிசிப்பதை விடவும், மக்களை விமர்சிக்காமல் அவர்களுக்குப் பிடித்தமானவர்களாகக் காட்டிக்கொள்ளவே அனைவரும் பெரிதும் முயல்கிறார்கள். ஏன்?

உண்மையில் சனநாயகம் வேர்கொண்டிருப்பது அரசாங்கம் எனும் நிறுவனத்தில் இல்லை. பரஸ்பர சமூக உறவுகளில்தான் இருக்கிறது. சமூக உறவு என்கிறபோதே அதில் முக்கியப்பங்கு வகிப்பது சாதி. அதனால்தான் சட்டரீதியாக சனநாயகத்தை ஏற்படுத்தினாலும் முழுமையாக நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு அது சவாலாயிருக்கிறது. சுதந்திரம் இருக்கிறதுதான். அதன் பொருளார்ந்த தன்மையில் குடிமக்கள் எல்லார்க்கும் ஒத்த அளவில் இல்லாததால் பல தருணங்களில் சமத்துவத்திற்கு எதிராகவே இருக்கிறது. பிறகு, சகோதரத்துவம் பற்றிப் பேச என்ன இருக்கிறது 

பெருநகரம் சார்ந்த சமூக உறவுகளில் சாதி பெரிதும் வெளிப்படாதிருக்கிறது. நகரமயமாதல் வகிக்கும் முன்னோக்குப் பாத்திரம்தான் இது. அதுவும் அவசரமாய்க் கடந்து போகும் பயண அளவில்தான். இருந்து வாழ்வதில் இல்லை. உடன் படிக்கும் / பணியாற்றும் ஒரு தனிமனிதரை அடையாளம் காண்கையில், எத்தனைத் தகவல்கள் தெரிந்தாலும், சாதி தெரிந்தால்தான் ஒருவர் குறித்து அனைத்தும் அறிந்தவராக திருப்தி கொள்ளும் சமூக மனம்தான் இயங்குகிறது. சிறுநகரம் மற்றும் கிராம அளவில் இந்த சமூக மனத்தின் வலிமை அதிகம் எனச் சொல்லவேண்டியதில்லை.

கடந்த பதினைந்து வருடங்களில், வெகுமக்கள் புழங்கு தளத்திலும் தத்தம் சாதி குறித்துப் பேசுவது அதிகரித்திருக்கிறது. ஒப்பீட்டளவில் வட்டார அளவிலான சிறுபான்மைச் சாதியினரிடம் சாதியை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத தன்மை இருக்கிறது. அது வாய்ப்பு கிடைக்காத அளவிலான எண்ணிக்கை சார்ந்த கூச்சம் எனலாம். ஆனால், வட்டார அளவிலான எண்ணிக்கைப் பெரும்பான்மைச் சாதியினரிடத்தில் - வயது வித்தியாசம் கடந்து - அந்தக் கூச்சமும் இல்லை; அவசியப்படவுமில்லை. போட்டிக்கு வர இயலாத அளவிலான சிறுபான்மைச் சாதியினருடன் இணக்கமான உறவையே பூண முயலும் பெரும்பான்மைச் சாதியினர் பலரின் சாதாரண உரையாடலிலும், தலித் சமூகத்தவர் சிலர் வகிக்கும் உயர்பதவி, அதற்காதாரமான வளர்ச்சி மற்றும் பல பிரச்சனைகளுக்கும் இவர்களே காரணம் என்பதாகச் சொல்கிற அதிருப்தியைக் காணமுடியும். உடன் நிற்பவர்களில் தலித் சமூகத்தவர் இருப்பது தெரிந்தாலும் இயல்பாக இப்படிச் சொல்லமுடிகிறது என்பதுதான் நடப்பியல்.

படித்தவர்கள் நடுவிலேயே இப்படிச் செயல்படும் சமூக மனம் வெகுமக்கள் நடுவில் எப்படியெல்லாம் செயல்படும் என்பதற்கு, ஆங்காங்கே வெளித்தெரிந்த அளவிலான ஊர்விலக்கங்களும் ஆணவக் கொலைகளும் சாட்சியாக இருக்கின்றன. பொதுப்புத்தி என்ற பெயரில் பொதுச் சமூகம் என்பதாய்க் குறிப்பிடப்படும் வெகுமக்களிடம் இச்சிந்தனை நிலை பெற்று நிற்பதால், இது இயல்பான நம்பிக்கையாகவும் நிலைபெற்றுவிடுகிறது. எண்ணிக்கைப் பெரும்பான்மை சார்ந்த அரசியல் நடைமுறையில் என்பதால் வெகுமக்களை விமரிசித்தல் எனும் அபாயத்தை ஆட்சியாளர்கள் அணுகுவதில்லை.

கற்றோர் விழுக்காடு அதிகரித்து வருகிறதுதான் என்றாலும், சாதி மீதான விமர்சனத்தை எண்ணும் எழுத்துமாக மட்டுமே இருக்கிற கல்வி செய்வதில்லை. அது முற்றிலும் அன்னியப்பட்டிருக்கிறது. உண்மையான சமூக நடத்தையைக் கல்வி கற்பிக்காத இடத்தில், சாதி தனக்காகச் செய்து கொள்வதே சமூக நடத்தையாகிறது. அரசியல் நடத்தையும் அதிலிருந்தே கிளைக்கிறது. கல்வியை வரையறுக்க வேண்டிய இடத்திலுள்ள அரசு என்பது அரசியல் கட்சிகளுக்கிடையிலான தேர்தல் போட்டிகளில் வென்று ஆட்சியமைக்கும் அரசாங்கத்தால் அதிகாரம் பெறுகிறது.

நடப்பியல் சார்ந்து விவாதிக்கும் கல்வி, அரசியல் விழிப்புணர்வு மிக்க குடிமக்களை உருவாக்கும் வாய்ப்புள்ளதாகையால், ஆட்சியாளர்களின் தன்னிச்சையான நடவடிக்கைகளைத் தர்க்கப்பூர்வமாக தவிர்க்கத்தக்க தடை மிகுந்துவிடும் அபாயமும் உள்ளது. அதிகாரத்திற்கு ஆபத்தின்றி, உணர்வு ரீதியாகத் திரட்டிக்கொள்ள காலகாலமாக கிளைபரப்பி நிற்கிற சாதியைப் பற்றுக் கோலாகக் கொள்வதே எளியதும் வலியதுமாக ஆட்சியாளர்களுக்கு ஆகிவிடுகிறது. எண்ணிக்கைப் பெரும்பான்மையும் சமூக ஆதிக்கமும் கொண்ட சாதிகளைச் சார்ந்தவர்களால் அரசியல் அதிகாரம் எளிதில் கிடைக்கிறது என்பதால் அவர்களே அதிக அளவில் வேட்பாளர்களாகக் களமிறங்கி சமூக அதிகாரத்தோடு அரசியல் அதிகாரமும் பெறுகிறார்கள்.

ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அவரது சாதி தோலாகவும், தொகுதி சட்டையாகவும் ஆகிவிடுகிறது என்று அம்பேத்கர் ஒரு கட்டுரையில் சொன்னது போல அவர்களும் ஆகிவிடுகிறார்கள்.

No comments: