December 19, 2010

பன்மொழித் திட்டம்? - உள்ளிருந்து கொல்லும் திராவிடம்!

மு. கருணாநிதி
'சிறுபான்மை மொழிச் சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநாட்டுக் (டிச.11) கோரிக்கைகளைப் பரிவுடன் பரிசீலித்து, பள்ளிகளுக்கான சமச்சீர்க் கல்வி பாடத் திட்டத்தில், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபிக் போன்ற சிறுபான்ம மொழிகளையும் கற்பித்திட வாரத்திற்கு நான்கு பாட வேளைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

மொழிப் பாடங்கள் மற்றும் சிறுபான்மை மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்படும். சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும். மதிப்பெண் பட்டியலில் சிறுபான்மை மொழிப்பாடங்களுக்கான மதிப்பெண்கள் இடம்பெறும் என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
'

- தினத்தந்தி 16.12.2010

ஏற்கனவே தமிழகம் பிற மொழியாளர்களின் வேட்டைக்காடாகி இருக்கிறது. அரசியல் - ஆட்சி - அறிவுத் துறைகளில் தெலுங்கர்களும், ஆட்சி - வணிகத் துறைகளில் மலையாளிகளும், வங்கி - வணிகத் துறைகளில் மார்வாடி-குஜராத்திகளும் கோலோச்சி வருவது கண்கூடு.

இந்நிலையில் சிறுபான்மை மொழிகள் என்ற பெயரில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அரபி என்று ஐந்து மொழிகளைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கான சமச்சீர்க கல்வித் திட்டத்தில் வாரத்திற்கு நான்கு பாடவேளைகள் ஒதுக்கப்படும் என்றும், அவற்றுக்கான மொழிப் பாடங்கள் மட்டுமின்றி, மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்களுக்கான பாடநூல்களும் தயாரிக்கப்படும் என்றும், அதற்கான தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் மதிப்பெண் பட்டியலிலும் இடம் பெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். பிற மொழிப் பாடங்கள் மட்டுமின்றி, மொழி வழியில் கற்பிக்கப்படும் பாடங்கள் என்பதையும் காண்க.

ஏற்கனவே தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் உரிமை என்ற அடிப்படையில் இன்றும் அவரவர் தாய்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எல்லைப் பகுதிகள் மட்டுமின்றி பிற மொழியாளர்கள் செறிவாக வாழும் பகுதிகளிலும் பிற மொழி வழிக் கல்வியா?

தமிழகத் தனியார் பள்ளிகளில் பெருமளவு தமிழ்வழிக் கல்வி கைவிடப்பட்டது மட்டுமின்றி, ஆங்கில வழியிலேயே கற்று, ஒரு மொழிப் பாடமாகக் கூட (First/Second Language) தமிழைப் படிக்காமல் முன்னகரும் இழிசூழல் நிலவுகிறது. இவ்வேளையில் இப்படி ஒரு ஆணை.

திராவிட வழித் தோன்றல்களின் அரசியல் ஆதாயத்துக்கான தமிழின முழக்கமும், உள்ளார்ந்த தமிழின ஏய்ப்பும் இன்றைய வெளிப்பாடு மட்டுமல்ல.

"நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம், மக்களின் பேச்சு இவைகளைத தமிழில் நடத்துகிறோம். சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?"

"மொழி என்பது ஒருவர் கருத்தை ஒருவர் அறியப் பயன்படுகிறதே தவிர, வேறு எதற்குப் பயன்படுவது? இதைத் தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காக - தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டு மொழி என்பதும், முன்னோர் மொழி என்பதும், மொழிப் பற்று என்பதும் ஆகியவைகளெல்லாம் எதற்கு மொழிக்குப் பொருந்துவது?"

"தமிழ்த் தாய் யாரிடமாவது அவர்களது பாலைக் கறந்து எடுத்து இரசாயன பரிசோதனை ஸ்தாபனத்தில் கொடுத்துப் பரீட்சித்துப் பார்த்தால், உடலுக்கு உரம் ஊட்டும் சாதனம் அதில் என்னென்ன இருக்கின்றது என்று கண்டுபிடித்துச் சொல்லச் சொன்னால், அப்போது தெரியும் - தாய்ப்பால் யோக்கியதை!"

"
எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணரவேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ் நாட்டு மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவேயாகும்."

(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி2, வே.ஆனைமுத்து, திருச்சி, 1974)

என்று பகுத்தறிவூட்டிய பெரியார் காலத்திலிருந்தே வருவது.

இராஜாஜி தமிழகத்தில் இந்தியைத் திணித்த 1938இல் பெரியார் எதிர்த்தார் என்பதையே இன்று வரை பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்று கூக்குரலிட்டு வரும் திராவிட இயக்கங்களும், பெரியார் வழித் தமிழ்த் தேசியர்களும், 1965இல் பக்தவச்சலம் இந்தியைத் திணித்த போது அதை எதிர்த்தெழுந்த மாணவர் போராட்டத்தைப் "பார்ப்பனர்களாலும் பத்திரிகைகளாலும் தூண்டிவிடப்பட்ட போராட்டம்" என்று கொச்சைப் படுத்தியதோடு, அதனை அரசு கடுமையாக ஒடுக்கவேண்டும் என்று முன்மொழிந்தவர் பெரியார் என்பதைச் சொல்வது கிடையாது. அப்போது இந்தியைத் திணிக்கும் அரசின் செயலை பெரியார் ஆதரித்ததும், இராஜாஜி எதிர்த்ததும், முதலில் எதிர்த்த தி.மு.கழகம் பின் சற்றே பின்வாங்கியதும் வரலாறு.

நாயக்கர் காலம் தொட்டு தமிழகத்தில் குடியேறி நிலவுடைமையாளர்களாகவும், பாளையக்காரர்களாகவும், வணிகர்களாகவும், புரோகிதர்களாகவும், கோயில் அருச்சகர்களாகவும், பல கைவினைச் சாதியினராகவும் ஆகி தமிழகத்தின் நிரந்தரக் குடிகளாகிவிட்ட தெலுங்கர்களும் கன்னடர்களும் வீட்டில் தத்தம் தாய்மொழியும், வெளிச் சமூக வழக்கில் தமிழும் பேசும் இரு மொழியாளர்களாகவே உள்ளனர். தமிழ் மண்ணில் இவர்களின் சுய இருத்தலுக்கும் நில உடைமைக்கும் அரசியல் ஆதிக்கத்திற்கும் நியாயம் கற்பித்தது திராவிடச் சொல்லாடல். அதனால்தான் எத்தனை பெயரில் திராவிட இயக்கங்கள் புறப்பட்டாலும் தெலுங்கினத்தவரே கொலுவேறுகின்றனர்.

திராவிடத் தெலுங்கர் முன்னேற்றக் கழகம் கண்டார் காமாட்சி நாயுடு. தெலுங்கு பேசும் அனைத்து சாதியினரையும் - தெலுங்குப் பார்ப்பனர் உட்பட - திரட்டித் தமிழ்நாடு தெலுகு சம்மேளனம் அமைத்தார் கே. வி. நாயுடு. கடந்த ஏப்ரலில் நடந்த மாநாட்டிற்குச் சென்னையெங்கும் சுவரொட்டிகள் தெலுங்கிலும் மிளிர்ந்தன. தலைமை கல்வித் தந்தை கெங்குசாமி நாயுடு. சிறப்புப் பங்கேற்பாளர்கள் ஆற்காடு வீராசாமி, கே.என்.நேரு, நெப்போலியன், தங்கபாலு. தமிழகத்தை அரசாளத் திராவிட அடையாளம். தங்கள் ஒற்றுமைக்குத் தெலுங்கு அடையாளம். பேச்சளவில் மட்டும் இருக்கும் தெலுங்கு பள்ளிகளிலும் வந்தால் அரசியல்படாத சாதாரண இருமொழியாளரும் முழுத் தெலுங்கராகத்தானே ஆவார்?

சித்தூர், திருப்பதி, புத்தூரை தெலுங்கரிடமும், கோலார், பெங்களூரு, கொள்ளேகாலைக் கன்னடரிடமும், பாலக்காடு, தேவிகுளம், பீர்மேட்டை மலையாளிகளிடமும் இழந்ததைத் தமிழர்கள் மறந்து விட்டனர். தமிழகத்தின் உட்பகுதியையும் இழக்க முடிவு செய்கிறார் முதல்வர்.

தமிழகம் முழுக்க வாழும் பிற மொழியாளர்களுக்கும் அவர்கள் செறிவாக வாழும் பகுதிகளில் அவரவர் தாய்மொழியைப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் பள்ளிகளிலே கொண்டு வருவது என்பது கொள்ளிக்கட்டையை எடுத்து நம் அடிமடியில் செருகிக் கொள்வதற்கு ஒப்பானது. மாணவர் நடுவில் அவ்வளவாய் இல்லாத மொழி வழி இன வேறுபாடு வடிவு கொள்ளும். பள்ளிகளுக்குள்ளும் பாளையப்பட்டுகள் உருவாகும்.

தமிழ்ப் புலவர் பட்டயம் பெற்ற பலரும் வேலை கிடைக்காமல் அவதியுறுகின்றனர். பள்ளிகளில் இடைநிலைத் தமிழாசிரியர்களே பல இடங்களில் மேனிலை வகுப்புகளுக்கும் தமிழ்ப் பாடம் எடுக்கும் அளவிற்கு மேனிலைத் தமிழாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மேனிலை வகுப்புகளில் தமிழ்மொழிப் பாடமே வாரத்தில் நான்கு பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகிறது. அதே அளவில் பிற மொழிப் பாடமும் கற்பிக்கப்படப் போகிறது!

இன்று பொதுப் பாடத் திட்டத்தில் ஐந்து பிற மொழிகள் கற்பிக்கப்படுமெனச் சொல்கிறார் முதல்வர். நாளை, தமிழகத்தில் பெருமளவில் வசிக்கும் மார்வாடி-குஜராத்தியரும் பிற வட இந்தியரும் குஜராத்தியையும் இந்தியையும் பொதுப் பாடத் திட்டத்தில் கொண்டு வரக் கோருவர். மராட்டியர் ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் குடியேறி, தஞ்சைப் பகுதியில் இன்றும் வாழும் (மராட்டி பிராமணர், போன்ஸ்லே, கெய்க்வாட் போன்ற) மராட்டிய இனத்தவர் மராட்டியைக் கொண்டுவரக் கோருவர். தக்காணியர் மற்றும் பல முஸ்லீம் இனத்தவரின் தாய்மொழியான் உருதுவை மட்டுமின்றி, தமிழகத்தில் பேசப்படாத அவர்களது புனித மொழியான அரபியையும் பொதுப் பாடத் திட்டத்தில் கற்பிக்கப்படும் என்கிறார் முதல்வர். நாளை இந்து மடாதிபதிகளும், இந்துத்துவ வாதிகளும் இதே அடிப்படையில் சமஸ்கிருதத்தையும் கொண்டு வரக் கோருவர். இது எங்கே போய் முடியும்?

தமிழர்களிடம் இழந்து வருகிற தம் செல்வாக்கை, பிற மொழியாளர்களைத் திருப்தி செய்வதன் ஈடுகட்ட முயலும் முதல்வரின் வாக்கு வங்கி அரசியலா இது?

மும்மொழித் திட்டத்தையே எதிர்த்துப் போராடியது தமிழகம். பன்மொழித் திட்டத்துக்கு வழிசொல்கிறதா திராவிடம்?

- யுவபாரதி

1 comment:

திங்கள் சத்யா said...

உங்கள் கட்டுரையில் நியாயம் இருக்கிறது. கோரிக்கை வைக்காமல் இதுபோன்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருக்க முடியாது. அப்படியனால், கோரிக்கை வைத்தவர்கள் யார், யார்?

இது குறித்து வெட்டிச் சம்பளம் வாங்கிக்கொண்டு, அதை வட்டிக்கு விடும் ஆசிரியப் பொருக்கிகளுக்கு தெரியுமா? தெரியாதா? தெரிந்தால், ஏன் கூக்குரலிடவில்லை.

இந்த தின்னை தூங்கிப் பயல்கள் நேர்மையுடனும், நியாமாகவும், நடுநிலையாகவும், தாய் மொழிப் பற்றோடு நடந்துகொண்டிருந்தால் எவனும் இந்தச் சமூகத்தை ஏமாற்றியிருக்க முடியாது. முதலில் அவனுகளை வெளியில் வந்து போராடச் சொல்லுங்கள்.