1.கழுதைக்குத் தெரியுமா
கற்பூர வாசனை?
2.அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாயில்ல இருக்கு?
என்ற
கேள்வி வடிவிலான இரு பழமொழிகளும் நாம்
அடிக்கடி கேட்பதுதான். வெறும் கிண்டல் என்பதாய்தான்
பெரும்பாலோர் நினைப்பர். ஆனால், உண்மை வடிவில்
சொல்லிச் சொல்லி, பேச்சு வழக்கில்
ஓர் எழுத்துத் திரிந்து, சொல் திரிந்து, நாளடைவில் பொருளே
திரிந்து போன பழமொழிகள் இவை.
இவற்றின்
உண்மை வடிவங்கள் :
1.கழுதுக்குத் தெரியுமா
கற்பூர வாசனை?
2.அரசை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாயில்ல இருக்கு?
என்பவையே.
கழுது
என்றால் பேய். சான்றாக,
(அ) “பேயும்
வண்டும்
பரணும்
கழுதே”
என்பது பிங்கல நிகண்டு (பா.3323).
(ஆ) “முத்தைத் தரு பத்தித் திருநகை“
எனத் தொடங்கும் புகழ்பெற்ற திருப்புகழ்ப் பாடலில் வரும் ஒரு
வரி “திக்கொட்க நடிக்கக் கழுகொடு
கழுதாட”
என்பது.
பேய்-பிசாசுகள்
கற்பூர வாசனை எழுந்தால் ஓடிவிடும் என்பது நம்பிக்கை. அதனால் எழுந்த பழமொழி “கழுதுக்குத்
தெரியுமா கற்பூர வாசனை?” என்பது.
அரசமரத்தைச்
சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது இன்றும் சிலரது நம்பிக்கை. கணவனோடு சேராமல் அரச
மரத்தை மற்றும் சுற்றினால்… என்ற கேள்வியோடு எழுந்ததுதான் “அரசை நம்பி புருஷனைக் கைவிட்ட
கதையாயில்ல இருக்கு?”
ஓரெழுத்துப்
பிசகினாலும் பொருள் திரிந்துவிடுகிறது. சொற்குற்றம் பொருட்குற்றமாகிவிடுகிறது. பிழையின்றித்
தமிழ் பேசுவோம்.
- யுவபாரதி
2 comments:
ஆம் நண்பரே. எனக்கே இன்றுதான் இப்பழ மொழிகளின் சரியான அர்த்தம் புரிந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.
மிகவும் சிறப்பான வினாக்கள் மிகவும் சிறப்பான பதில் கள் தொடருங்கள்
Post a Comment