-
யுவபாரதி
பூர்வீகம்
மதுரைப்பக்கம் என்றாலும் சற்றே வளர்ந்து பள்ளிப்பருவம்
எட்டிய காலத்தில் திருவண்ணாமலை பக்கம் வந்துவிட்டது எங்கள்
குடும்பம். கல்வித் துறையில் கடைநிலைப்
பணியில் இருந்த என் அப்பாவுக்கு
எழுத்தர் பதவி உயர்வினால் இந்த
வடக்கு வாசம்.
அப்போது,
எண்பதுகளின் மத்தியில், பென்னாத்தூரில்
இருந்தோம். நான் ஆறாவதோ ஏழாவதோ படித்துக்
கொண்டிருந்தேன். அவலூர்பேட்டை சாலையை ஒட்டியிருந்த துரோபதையம்மன்
கோவில் தெருவில் ஒரு முதலியார் வீட்டில்
வாடகைக்குக் குடியிருந்தோம். முதலியார் பஜாரில் ஒரு மளிகைக்
கடையும் ஒரு காய்கறிக் கடையும்
வைத்திருந்தார். பெரிய குடும்பம். எங்கள்
தெருவில் பல வீடுகள் அவருக்குச்
சொந்தமானவை. ரொம்பச் சிக்கனமானவர் என்பார்கள்.
அதே
ஊரில் நாங்கள் ஏற்கனவே இருந்த
வேறு இரு தெருக்கள் போலன்றி
இத்தெருவில் பல்வேறு சாதியினர் குடியிருந்தார்கள்.
முதலியார், நகரத்தார், வன்னியர், கேரள சிரியன் கிறிஸ்தவர், தலித்
கிறிஸ்தவர், பிராமணர், ஆச்சாரி, வாணியர் என்று. எண்பதுகளில்,
சற்றே பெரிய ஒரு கிராமத்தில்,
சுற்றியிருந்த ஒரே சாதியினர் வாழும் பிற தெருக்களுக்கு மத்தியில் கொஞ்சம் வித்தியாசமானது அது.
அப்போது
பொடிசுகளான எங்களுக்குப் பொழுதுபோக்கு - இந்த வார்த்தையே அப்போது உண்டா? தெரியவில்லை
– என்றால் கோலி, கிட்டிப்புல், ஐஸ்பாய், ஓடிப் பிடித்தல், கிரிக்கெட் இவை. ஓணாந் தண்டு
ஸ்டெம்ப், ஓரளவு சுமாராகச் செதுக்கப்பட்ட மரப்பலகை பேட், ரப்பர் பந்து அல்லது சின்ன
கல்லைப் பல்வேறு சைக்கிள் ரப்பர்களால் சுற்றி உருவாக்கப்பட்ட பந்து – இவைதான் கிரிக்கெட்
உபகரணங்கள்.
ஞாயிறு
மாலை வானொலி நேயர் விருப்பம். அதில் அடிக்கடி அஞ்சலட்டையில் எழுதிப் போடும் எங்கள்
பேர் வாசிக்கப்படுகிறதா என்ற ஆர்வம். முதலில் வருடத்துக்கு ஒரு முறையாக இருந்து,
பின் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை என்றாகிப் போன துரோபதையம்மன் கோவில் பாரதச் சொற்பொழிவும் கூத்தும் எங்கள்
வருடாந்திர விருப்பம்.
இந்த காலத்தில்தான் எங்கள் தெருவுக்கு டிவி
வந்தது. நகைஅடகுக்கடை வைத்திருந்த செட்டியார் வீட்டில்தான் வாங்கினார்கள். கருப்பு
வெள்ளை டிவி. கம்பெனி பேர் ஒனிடாவோ புஷ்ஷோ (Bush)!
செட்டியாருக்கு இரு பெண் பிள்ளைகள், ஒரு
பையன். அவன் பேரும் என் பேர்தான். அதனால், அடையாளத்திற்காக எங்கள் இருவரது பெயரையும் இனிஷியலோடு
பிறர் கூப்பிடத் துவங்கி கடைசியில் எங்கள் இனிஷியல் மட்டுமே எங்கள் பேராகிப் போனது.
நான் ஆரு. அவன் எஸ்ஸு.
நானும் அவனும் நண்பர்கள்தான். என்றாலும்
அடிக்கடி சண்டை வந்து பல நாட்கள் பேசாமல் இருப்போம். விளையாட்டுக்குத் தனித்தனியே ஆள்
சேர்ப்போம். அப்புறம் நாங்களாகவோ, பரஸ்பரம் முகம் திருப்பிக் கடப்பது கண்டு பொறுக்காத
பெரியவர்கள் தலையீட்டாலோ ஒன்று சேர்வோம். எங்களுக்குப் பிடித்தமானவையும் அவ்வளவு இணக்கம்!
அவனுக்கு ரஜினி என்றால் எனக்குக் கமல். எனக்கு நதியா என்றால் அவனுக்கு அமலா. அவனுக்குக் கருணாநிதி என்றால் எனக்கு எம்ஜியார். எனக்குப் புலி என்றால் அவனுக்குச் சிங்கம்.
அவர்கள் வீட்டில்தான் முதலில் டிவி வாங்கினார்கள்.
டிவி பார்க்க தினமும் எல்லோரும் அவர்கள் வீட்டிற்குப் போகமாட்டோம். புதன் மாலை சித்ரஹார்.
வெள்ளிக் கிழமை மாலை ஒளியும் ஒலியும். ஞாயிறு காலை இராமாயணம், மாலை தமிழ் சினிமா.
சில சமயம் படமே தெரியாமல் வெறும் புள்ளிகளாய்த்
தெரிந்தாலும் பொறுமையாகப் பார்ப்போம். செட்டியாரோ ஆச்சியோ ‘மாடிக்குப் போய் ஆன்டெனாவைப்
பாருங்க’ன்னு சொன்னதும், கையில் நீண்ட கோலோடு கிளம்புவோம். வீட்டினுள் ஒருவன். அவனிடம்
கேட்டு மாடிக்குச் சொல்ல வாசலில் ஒருவன். மாடியில் ஒருவன். ஆன்டெனாவில் காக்கா உட்கார்ந்திருந்தால்
விரட்டிவிட்டு, கோலால் திசை திருப்புவோம். எட்டினால் கூட தொடமாட்டோம். தொட்டால் ஷாக்
அடிக்குமில்லே?
“இப்போ
தெரியுதா?” “தெரியலையாம்”
“இப்போ?”
“சுமாராத் தெரியுதாம். கொஞ்சம் திருப்பு”
“இப்போ
தெரியுதா?” “ஆங்! நல்லாத் தெரியுதாம்.
கீழே இறங்கிடு”
ஒரே வாரத்தில் விளையாட்டுத் தோழர்கள் மத்தியில்
எஸ்ஸுக்கு மரியாதை கிடுகிடுவென ஏறிவிட்டது. கோலி விளையாட்டில் அவன் கோலி கிட்டவே இருந்தாலும்
யாரும் அடிக்க மாட்டார்கள். ஐஸ்பாய் விளையாட்டில் அவனைக் கண்டுபிடித்தாலும் தட்ட மாட்டார்கள்.
கிரிக்கெட்டில் அவன் அடித்த பந்து கைக்கே வந்தாலும் கேட்ச் பிடிக்கமாட்டார்கள். அவன்
பேட் பிடித்தால் அவுட்டே கொடுக்கமாட்டார்கள். மீறி எஸ்ஸை யாரும் தோற்கடித்தால் அவனோடு
காய்தான். சம்பந்தப்பட்டவன்
டிவி பார்க்க
தலை கவிழ்த்துக்கொண்டு வந்தாலும். வாசலிலேயே
நின்று கண்ணாலேயே விரட்டிவிடுவான் எஸ்ஸு.
இப்படி எஸ்ஸால் அடிக்கடி தண்டிக்கப்படுபவன்
நானாகத்தான் இருப்பேன். விளையாட்டில் விட்டுக் கொடுக்கலாம்தான். அதற்காக தோற்றுக்கொண்டே
இருக்கமுடியுமா என்ன? எஸ்ஸு என்னோடு காய்விட்டிருக்கும் பல நாட்களில், என் அம்மா, தம்பி
எல்லாம் அவர்கள் வீட்டிற்கு டிவி பார்க்கச் செல்கையில் என்னை அழைத்தாலும், ஏதேனும்
சாக்குச் சொல்லி வீட்டிலேயே முடங்கிக் கொள்வேன். எஸ்ஸும் நானும் பழம் விட்டு ராசியாகியிருந்தால்
அவன் வீட்டிற்குள் நுழையும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். ரொம்ப நாள் இப்படியும்
அப்படியுமாகத்தான் இருந்தது.
கொஞ்ச காலத்தில் தெருவில் எல்லோரும் சேர்ந்து
வாடகைக்கு டிவியும் டெக்கும் எடுத்துப் படம் பார்க்கும் பழக்கம் ஆரம்பித்தது. முதலில்
சிவராத்திரி, ஏகாதசி என்று எப்போதாவது இருந்தது, பின்னர் மாதம் இருமுறை என்ற அளவிற்கு
வழக்கமாகிவிட்டது.
ஓரிரு வருடங்களில் ஒவ்வொரு வீடாக டிவி வாங்கத்
துவங்கினார்கள். நான் ஒன்பதாவது படிக்கும் போது எங்கள் வீட்டிலும் ஒரு செகண்ட் ஹேண்ட்
கருப்பு வெள்ளை டிவி வாங்கினார்கள்.
அப்போதும் எஸ்ஸு எஸ்ஸுதான். அவர்கள் வீட்டிற்கு
கலர் டிவி வந்துவிட்டது.
1 comment:
அருமையான பதிவு..
ரெவெல்டான்.. டீவி.. இதைப் பற்றி நானும் கூட ஒரு பதிவு போடலாமென்று தான் நினைத்தேன்.. அந்த நிறைவைத் தருகிறது இந்தப் பதிவு
Post a Comment