பத்து வருடங்களுக்கு முன் ஒருநாள். பிரியா ஓட்டல் பக்கமிருந்து திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்குள் படியேறி நுழையும் நடுவாசலை ஒட்டிய பரப்பில் உறங்கிக்கொண்டிருந்தேன். நள்ளிரவு தாண்டியிருக்கும். தொடையில் விழுந்த அடி எழுப்பிவிட்டது. பக்கத்தில் சதீஷும் மலங்க மலங்க எழுந்து உட்கார்ந்திருந்தான். ஒருக்களித்துக் கிடந்தவர்களுக்கு தொடையிலும், குப்புறக் கிடந்தவர்களுக்கு புட்டத்திலும் வரிசையாக அடி விழுந்தது. சிலர் காலால் எத்தியும் எழுப்பப்பட்டனர். ஒவ்வொருவராக
விசாரிக்கப்பட்டு, பைகள்
சோதனைக்கு உள்ளாயின.
‘இங்க எல்லாம் படுக்கக்கூடாது. போ... போ...’. காவலர் விரட்ட, நானும் சதீஷும் இன்னும் சிலரும் வடக்கே பச்சையம்மன் கோவில் நோக்கி நடந்தோம். விடிந்ததும் தெரிந்தது. நேற்றிரவு
கடலைக்கடை மூலையில், கடையைப்
பூட்டிக்கொண்டு கிளம்பிய சேட் ஒருவரின் பணப்பையை
எவனோ பறித்துக்கொண்டு
போயிருக்கிறான். பறித்தவன்
சாயம்போன காவி வேட்டியில்
இருந்திருக்கிறான். பெங்களூரு சாலையில் நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் காரில் சென்றவன் அம்மாபாளையம் பக்கம் இரவே பிடிக்கப்பட்டும் விட்டான்.
நாங்கள் மட்டுமல்ல. பஞ்சலிங்கம், எட்டுத் திக்கு லிங்கங்கள், இடுக்குப் பிள்ளையார், திருநேர் அண்ணாமலை என கிரிவலப்பாதையின் பற்பல
கோவில் வாசல்களில் படுத்துக்கிடந்தவர்களும் இரவு உறக்கம் கெட்டுத் திரிந்திருக்கிறார்கள். பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கையிலும் அச்சமில்லை என்று சொல்லமுடியாது.
சென்னையில்
ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்துவந்த சதீஷ்
இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலையில் திரிந்து வந்தான்.
அவன் அம்மா அவ்வப்போது வந்து
அழுததும் ஊருக்குப் போவதும்,
பின் திரும்பி
வருவதுமாக இருப்பான். அவனுக்கு ஆங்கிலத்தில் பரந்த வாசிப்பு இருந்தது. இரமணாசிரம நூலகத்திலிருந்த சில அரிய நூல்களை எனக்கு அறிமுகப்படுத்தினான். எனக்கு
அப்போது நிரந்தர
வேலை இருந்ததுதான். ஆனால் சம்பள நாளன்றே அது அலுவலக
வாசலிலோ வீட்டுக்குள் நுழைந்ததுமோ
பறிபோய்விடும். ஓரிரு
நூறுகளைத் தக்க வைப்பதே பெரும்பாடு.
கடனில் மூழ்கிப்போய்விட்ட குடும்பத்தில் வாழ்கிறவனுக்கு கனவு உணர்வு உரிமை எல்லாம் இருக்கிறது என்று சொல்லமுடியாது. ஒளிந்து ஒளிந்தே வீடுவர முடியும். வந்தாலும் வெகுநேரம் இருக்கமுடியாது.
சில நாள் மாலை இரவு நேரங்களில் தண்ணீர்ப் பொட்டலம், குளிர்பானங்கள் வாங்கி விற்பதுண்டு. தினசரிச்
செலவுகளுக்கு ஓரளவு காசு கிடைக்கும்.
முடிந்தவரை நண்பர்கள் வீடுபக்கம் நடப்பதைக் கூட
தவிர்ப்பேன். எதேச்சையாகக் கடந்தாலும் அப்போதைய உடையோ, தோற்றமோ பெரிதும் காட்டிக்
கொடுத்ததுமில்லை. தீயில் தவமிருக்கும் வடவீதி காமாட்சி அப்போது பலநாள் படியளந்திருக்கிறாள். இலக்கிய
நிகழ்வுகளுக்குச் செல்வது சிறுகச் சிறுகக் குறைந்து, ஒருகட்டத்தில் நின்றே விட்டது.
தமுஎச நிகழ்வுகளை மட்டுமல்ல, வம்சி புக்ஸ் திறப்பு விழாவைக் கூட பேனர் பார்த்துத் தெரிந்துகொள்ளும்படி ஆனது.
பேய்கோபுரம்
எதிரில் சக்தி திரையரங்கை அடுத்து
மலைசெல்லும் பாதையில் இருந்தது வள்ளலார்
சத்திரம். மாதந்தோறும் பலர் வீடுகளுக்கும் சென்று உதவி பெற்று அன்னதானம் செய்து வந்தது
அண்ணாமலை ஐயா தம்பதி.
முன்பு எங்கள் குடும்பமும் உதவி செய்திருக்கிறது. காலமாற்றம் சில நாள் காலை அங்கே சென்று கஞ்சி குடிக்கும்படிச் செய்தது. இரவலனாக நான் சென்ற காலத்தில் அந்த ஐயா மறைந்துபோய், அந்த அம்மா அப்பணியைத் தொடர்ந்துவந்தார். சத்திரமே என்றாலும் முன்பு நாம் உதவி செய்த இடம் என்பது அழுத்தமாக நினைவு வருகையில் அங்கு செல்வதைத் தவிர்த்துவிடுவேன்.
அப்போது நண்பர்கள்
வீட்டிற்குப் போயிருந்தால் நிறைவாய் உண்டிருக்கலாம்தான். ஒரு நண்பர் வீட்டில் நாம் சாப்பிட்டால், அவர்
நம் வீட்டிற்கு வரும்போது உணவிடும் அளவிற்கு நம்நிலை இருக்கவேண்டும் என்ற
எண்ணம், நான் நொடிந்தபிறகு
எந்தவொரு நண்பர் வீடு செல்வதையும்
கொஞ்சம் கொஞ்சமாகத்
தவிர்க்கச் செய்தது. முன்பு எங்கள் குடும்பம்
ஓரளவு நல்ல
நிலையிலிருந்த காலத்தில் எங்கள் வீட்டில் நண்பர்களும்,
நண்பர்கள் வீட்டில் நானும் சாப்பிடுவது என்பது எனக்கு
இயல்பாக இருந்தது. பெரும்பாலும் இரவு உணவு என்பது பவா
வீட்டில் அம்மம்மா கையால் இருக்கும்.
அது முற்காலமானது.
இல்லாமை
வந்த காலத்தில் என் நிலை அறிந்த
நண்பர்களிடம் இரக்கம் சுரப்பதைத்
தாளமாட்டாமல், எங்கேனும் கூட்டத்தோடு கூட்டமாக இரந்து நிற்பதையே
ஏனோ மனம்
ஏற்றது. பழைய நண்பர்கள் முகம்படாமல்
வாழ்ந்தேன். அலுவலக நாட்களில் சக ஊழியர்கள் வற்புறுத்தியேனும் உணவளித்துவிடுவர். வீராப்பாய்த் தவிர்க்கும் நாள் தேனீர் இனிப்போடும் பீடிக் கசப்போடுமே போகும். அவமானமும் அவநம்பிக்கையுமாய் கசங்கிக்கிடந்த
காலத்தில், எல்லாநேரமும் வயிற்றைத் தன்மானமே வென்றிருக்குமானால் இன்று நான் இல்லை. விடுமுறை
நாட்களில் பகல் முழுக்க ஒதுக்குப்புறமான கோவில்,
மலை, கிரிவலப்பாதை. கையில் போதுமான காசிருந்தால்
உணவகம். கிரிவலப் பாதையில் பசிமறந்து சுருண்டு கிடந்தாலும், வேண்டுதல்காரர் எவரேனும் எழுப்பிச் சோறிடுவார். அல்லது சக பரதேசி யாரேனும் வாங்கிவந்து எழுப்பித் தருவார். சோறிடுவோரில் கடமையே என்று கரண்டி காட்டி நகர்வோரும் உண்டு. அமுதுண்ட கண்களில் ஒளிதுலங்கும்வரை காத்திருந்து நிறைவோரும் உண்டு.
சில நாள் நரிக்குகை போவேன். சீனிவாச சாமியும் சென்னைக்காரர்தான். வணிகவியல் முடித்து ஏதோவொரு நல்ல வேலையில் இருந்தவர், பின் துறவு பூண்டுவிட்டார். சிறிது காலம் சுடுகாட்டை அடுத்த
ஈசான லிங்கத்திற்குப் பூசை செய்து வந்தார். பிறகு மலையில் முலைப்பால் தீர்த்தத்திற்கு வடக்கே சற்று தொலைவில் இருந்த நரிக்குகையில் தங்கிவிட்டார். அவரும் உடனிருந்த சில சாமிகளும் கிடைத்த அரிசி, காய்கறிகளை வைத்து சோறாக்குவார்கள். குகை வாசல் பிள்ளையாரை வணங்கி
சிவபுராணம் சொல்லி
திருவோட்டிலிட்டுப் பகிர்ந்துண்போம்.
விசிறி சாமியார் ஆசிரமத்தில் எல்லாரையும் ஒன்றாக உட்காரவைத்துச் சோறிடுவார்கள். ஆனால், இரமணாசிரமத்தில்
உணவிடுதலோ இருவகை. ஒன்று, ஆசிரமத்திற்கு
உள்ளே தலைவாழை இலை போட்டு
நெய்மணக்கும் அறுசுவை உணவு. நான் நன்றாக
இருந்த காலத்தில் இலக்கிய நண்பர்களோடு ஓரிரு
முறை சாப்பிட்டிருக்கிறேன். இரண்டு, ஆசிரம வாசலில் நுழைந்ததுமிருக்கும்
பரந்தவெளியில் வரிசையில் நிற்கவைத்து எல்லாக் காய்களும் செய்த குழம்புச் சோறு போடுவார்கள். பரதேசிகளின் கையிலிருக்கும் பாத்திரத்தில் இரு கரண்டி அள்ளிப் போடுவார்கள். கையில் பாத்திரம் வேண்டும்
என்கிற கவனமுமின்றி முதன்முதலாய் அவ்வரிசையில் போய் நின்ற
அன்று, பின்னாலிருந்த ஒருவர் தன் பையிலிருந்து ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்தார்.
‘வெறும் கையில் வாங்கிச் சாப்பிடமுடியாது சிவா. ரொம்ப சுடும்’ என்றபடி. அப்படி அறிமுகமானவன்தான் சதீஷ்.
- யுவபாரதி
3 comments:
அருமையான பதிவு... ௭ழுத்து நடை மேலும் சுவாரஸ்யம்...��
அருமையான பதிவு ஐயா நன்றி வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். வறுமையின் கொடுமை, நன்றாக வாழ்ந்தவர் தாழ்ந்தால் அனுபவிக்கும் வலியின் உச்சம். என் கண்களில் கண்ணீர் வரவைத்தது. என்வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது... மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது.. ethuvem ethuvem கடந்து போகும்.. ஆல் இஸ் வெல்..
மாற்றம் ஒன்றே மாறாதது.
Post a Comment