நன்றி : யாவரும்.காம்
இன்று அவரவர் வீட்டில் அமர்ந்தபடியே முடிவு
செய்து, எல்லார்வீட்டு கணினித் திரையிலும் ஒரே கணத்தில் புகைப்படத்தோடு பேனர் வைத்து
அழைப்பது போல, ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அழைப்பதென்பது எளிதாக இருக்காது அப்போது.
ஒரு சிலரிடம்தான் தொலைபேசமுடியும். மற்றவர்களுக்கெல்லாம் கடிதம்தான். உறுதிப்பட காத்திருக்கவேண்டும்.
இலக்கியக் கூட்டங்களும் நண்பர்களின் வெற்று அரட்டைக் கச்சேரியாகவோ, பெரிய வாத்தியாருக்குக்
கீழ்ப்படிந்து வாய்பார்க்கும் சிறார்வகுப்பாகவோ, வணிகப் பிரதிநிதிகளின் தொழில்முறைச்
சந்திப்பு நிகழ்வாகவோ இருக்கவில்லை. சில தீவிரத் தன்மையோடிருக்கும். சில அப்படி இருக்காது.
அவ்வளவுதான்.
இரண்டாயிரமாம் ஆண்டு இறுதியில் இருநாட்கள்
தருமபுரியில் ‘பெண் எழுத்தாளர் சந்திப்பு’ ஒன்றை நடத்துவது என முடிவாகியிருந்தது. பிரம்மராஜன் ஏற்பாடு. அதற்கெனச்
சிலரை அழைக்கும் பொறுப்பை பவா ஏற்றிருந்தார். அதனால், அதற்கு ஒரு மாதம் முன்பு, அவர்
வீட்டில் அமர்ந்து பாமா, கல்பனா, கிருஷாங்கினி, இளம்பிறை இவர்களுக்கெல்லாம் கடிதம்
எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது மேற்படி நிகழ்வில் “சுதந்திரத்தின் வெளிப்பாடாகக்
கவிதை” என்ற தலைப்பில் கட்டுரை அளிப்பதற்காக, தம்மிடமிருந்தவை மட்டுமின்றி, நண்பர்களிமிருந்த
கவிதை நூல்களை எல்லாம் ஒருமாதம் வேட்டையாடிக் கொண்டிருந்தார் ஷைலஜா. ஒரு வயதுக் குழந்தையாக
இருந்த தன் மகன் வம்சியைப்பற்றி, சகோதரி ஜெயஶ்ரீயின் மகள் சுகானா எழுதிய கடிதத்தைக்
காட்டினார். ‘வம்சிக் குட்டன், நல்ல குட்டன், கரையுங் குட்டன், ஆரெங்கிலும் கடிக்கும்
குட்டன், ஆருடெங்கிலும் அடுத்தேக்கு போகும் குட்டன்’ என நீண்டு ‘பான வயற்று வம்சிக்
குட்டன்’ என்று முடியும் பாட்டு அதில் இருந்தது.
பல்முளைக்காத வயதிலேயே, மடியில் அமர்ந்ததும்
நன்றாகப் பிடிபார்த்துக் கடித்தல், என் சட்டைப்பையில் இருக்கும் பொருட்களை எல்லாம்
எடுத்து ஒன்றொன்றாக தரையில் எறிதல் முதலான திறமைகள் வம்சிக்கு இருந்தது. அன்றைக்குச்
சில நாட்கள் முன்பு பொருளோடு பொருளாக என் பையிலிருந்து ஒரு சிகரெட்டையும் எடுத்து நடுவீட்டில்
தரைவீசி, அடுத்த இரு நாட்கள் ஷைலஜா தோழரைப் பார்க்கும்போதெல்லாம் என்னை மன்னிப்புக்
கேட்க வைத்திருந்தான் வம்சி.
பவா, ஷைலஜா, ஜெயஶ்ரீ, நான், பல்லவன், ஃபீனிக்ஸ்
உள்ளிட்ட பத்து பேர் குழு முதல்நாள் நள்ளிரவு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, மறுநாள்
காலையில் தருமபுரி சென்று இறங்கியது. நவம்பர் பதினெட்டு. ஆட்டுக்காரன்பட்டி பானாசிங்
பள்ளியில் ‘பெண் எழுத்தாளர் சந்திப்பு’. கவிஞர் வத்ஸலா நெறியாளராக இருந்த அன்றைய அமர்வுகளில்,
பாமாவின் நாவல்களில் காட்சிப்படும் அதிகாரக் கட்டமைப்பு பற்றி அரங்கமல்லிகாவும், பாமா
நாவல்களின் அமைப்பு முறை பற்றி பெருமாள்முருகனும் கட்டுரை வாசித்தார்கள்.
“பாமாவின் நாவல்களில் தன்வரலாறு மூலமாக தலித்துகளின்
மீதான அதிகாரம் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. ஆண்வயப்பட்ட அதிகாரம் என்பது அரசியல்,
காவல்துறை, சாதி, குடும்பம் என எல்லா வகையிலும் செயல்வடிவம் பெற்று தலித் பெண் உடல்களை
அழுத்துகிறது. நடுக்காட்டில் இறந்தாலும் மேல்சாதிப் பெண் தெய்வமாகவும், தலித் பெண்
பேயாகவும் கருதப்படும் கருத்தாக்கமே இங்குள்ளது” என்றார் அரங்கமல்லிகா.
“கருக்கும், சங்கதியும் கதைசொல்லியின் சுயவரலாற்றுப்
புதினங்கள். இவற்றில் வாய்மொழி மரபும் எழுத்துமரபும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது.
ஒன்றிலிருந்து ஒன்று கிளைக்கிறது. தலித் வாழ்வு மையப்படுத்தப்பட்டிருக்கிறது” என்றார்
பெருமாள் முருகன்.
குடும்பம் எனும் அமைப்பு மீதான விமர்சனம்
பற்றி சூத்ரதாரி கட்டுரை வாசித்தார். குடும்பக் கட்டுமானம் பெண்ணியத்தால் தகர்க்கப்பட்டுள்ளதாக
சூத்ரதாரி சொல்ல, திலகவதியும் அமரந்தாவும் பெண்ணியத்தின் தோற்றத்திற்கு முன்பே குடும்பக்
கட்டுமானத்தில் தகர்வு நிகழ்ந்திருப்பதாக வாதிட்டனர். தன் தனிவாழ்வு பற்றியும் குறிப்பிட்டுப்
பேசிய வத்ஸலா மிகத் தீவிரமாக வாதிட்டார்.
சண்முகம் என்ற ஒருவர் “பெண்கள் எப்போதும்
ஆண்களை விடக் குறைவுபட்டவர்கள்தான். அறிவியல் ரீதியாகப் பார்த்தாலும் அப்படித்தான்.
என்னால் நிரூபிக்கமுடியும்” என்றெல்லாம் பேச அரங்கில் பெரும் சலசலப்பு எழுந்தது. அமரந்தாவும்
குட்டிரேவதியும் எழுந்து கடுமையாக எதிர்வினையாற்றினர். நான் எழுந்து, “ஜெயகாந்தன் ஒரு
முறை சொன்னது நினைவுக்கு வருகிறது. பழமைவாதிகள் வயதானவர்களாகத்தான் இருந்தாகவேண்டும்
என்கிற கட்டாயமில்லை” என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன். இடைவேளைகளும் மாலையும் கலாப்ரியா,
நம்பி அண்ணாச்சி, கைலாஷ் சிவன், க.சீ.சிவக்குமார், குட்டிரேவதி இவர்களோடான உரையாடலில்
போயின.
மறுநாள் பிருந்தா, வெண்ணிலா, முருகேஷ் முதலான
நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில் ஏதோவொரு கணத்தில் அப்போதைய என் வீட்டுப்
பிரச்சினைகள் பற்றிய நினைவு எழுந்தது. மனம் வீட்டிலிருந்து விடுபடாது உறைந்துவிட்டது.
இரண்டாம் நாள் அரங்க அமர்வுகளில் மனம் பதியவேயில்லை. மாலையில் திருவண்ணாமலை நண்பர்கள்
எல்லாம் ஒகேனக்கல் போக என்னை அழைத்தும் போகமுடியவில்லை. வெண்ணிலா-முருகேஷோடு ஊர்திரும்பி,
பேருந்து நிலையத்தில் நின்றபடி நள்ளிரவு கடந்தும் வெகுநேரம் பேசிவிட்டு, வந்தவாசி பேருந்தில்
அவர்களை ஏற்றிவிட்டு வீடடைந்தேன்.
- யுவபாரதி
1 comment:
இந்தச் சந்திப்பு எப்போது நடந்தது? அண்மையில் நடந்திருக்க வாய்ப்பில்லையே பழைய நிகழ்வை இப்போது எடுத்து எழுதியிருக்கிறீர்களா?
எனினும் பதிவிற்கு நன்றி.
Post a Comment