நவ்வல் எல் ஸாதவி |
ஒரு வாரத்திற்கு முன் எகிப்திய எழுத்தாளர் - உளவியலாளர் - பெண்ணியச் செயற்பாட்டாளர் நவ்வல் எல் ஸாதவி எழுதிய
"சூன்யப் புள்ளியில் பெண்" படித்தேன்.
ஒரு கொலைக்குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு, குவானத்தீர் சிறையிலிருந்த ஃபிர்தௌஸ் என்ற பெண்ணை ஒரு உளவியலாளர் என்ற முறையில் சந்திக்க முயன்றது, மரணதண்டனைக்கு முதல் நாள் சந்தித்தது என்பது வரையில் எல் ஸாதவியின் வெளிப்பாடாகத் துவங்கும் இந்நூல், பின்னர் அந்த ஃபிர்தொளஸின் சொற்களிலேயே விரிகிறது. சொல்லி முடித்ததும் இயல்பாக கொலைக்களம் செல்கிறார் ஃபிர்தௌஸ்.
1974-ல் அத்தண்டனை நிறைவேற்றப்பட்டதாக எல் ஸாதவி தெரிவிக்கிறார். அரபியில் எழுதப்பட்ட இந்நூல் ஆங்கிலம் வழி தமிழில் லதா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் உன்னதம் வெளியீடாக 2008-ல் வந்திருக்கிறது.
ஆப்பிரிக்க நாடுகளில் பழக்கமான வாலைப் பருவத்திலேயே பெண்ணுறுப்பை பங்கப்படுத்தும்
(Female Genital Mutilation) சடங்குக்கு உள்ளாகிறார் ஃபிர்தௌஸ். தன்னலம் கருதும் தந்தை, இளம்பருவத்திலேயே தன்னை பாலியல் இச்சைக்குப் பயன்படுத்தும் மாமன், அவன் தயவில் படிப்பு, திருமணம் என்ற பெயரில் ஒரு முரட்டு முதியவருக்கு விற்பனை எனச் சிக்கலுக்குள்ளாகி, வீட்டிலிருந்து தப்பி வெளிவரும் ஃபிர்தௌஸ் நம்பும் காபிக்கடைக்காரர், ஒரு மூத்த பாலியல் தொழிலாளி எனப் பற்பலரிடமும் சிக்கி, தன் உணர்வுகளை ஒடுக்கிக்கொண்ட ஒரு பாலியல் அடிமைத் தொழிலாளியாகவே ஆகிறார். ஆனால் அதுவரை அவருக்குப் பணம் சம்பாதித்தல் என்று ஒன்றும் தெரியவில்லை.
அதிலிருந்து வெளியேறி தானே முடிவெடுக்கும் பாலியல் தொழிலாளியாகவும், அதில் வெறுப்புற்று வேறு தொழில் தேர்ந்து இயங்கியும், பின் மீண்டும் பாலியல் தொழிலுக்கே திரும்பியும், அதில் தன்னை அடிமைப்படுத்த முயலும் ஒரு தரகனைக் கொன்றுவிடுகிறார் ஃபிர்தௌஸ்.
ஐம்பது வருடங்களுக்கு முன்னான ஒரு எகிப்தியப் பெண்ணின் வரலாறுதான். ஆனால், இச்சமூகத்தின் ஆண்மையம் குறித்தும், ஒவ்வொரு ஆணின் சிந்தனை குறித்தும், அவர் எழுப்பும் கேள்விகளுக்கும், பாலியல் தொழிலல்லாத பிற தொழில்களில் ஈடுபட்டு வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல்கள் குறித்த அவரது எள்ளல் கலந்த கோபமும் ஆற்றாமைக்கும், ஆண் உலகம் மீது அவர் கொண்டுள்ள நியாயமான அவநம்பிக்கைக்கும்...
கால-தேச-வர்த்தமானம் இல்லை.
படித்ததும் எழுதினால் நிறைய நூல்களை நல்ல நூல்கள் என்று சொல்லத் தோன்றும். ஆனால் ஒரு நூல் ஏற்படுத்திய தாக்கம் பல நாட்களுக்குப் பின்னரும் வாழ்வின் வழக்கமான செயல்களுக்குள்ளும் நினைவூட்டவும் வினவவும் உரையாடவும் உணர்த்தவும் செய்யுமாயின் அது உண்மையிலேயே நல்ல நூல் என்பது என் அபிப்பிராயம். அதுவும் பெண் என்பதாலேயே பெண் மீதான சுரண்டல் திட்டமிட்டு மட்டுமல்ல, சமூக ஒப்புதல்/மௌன சம்மதத்துடன் வழக்கமான ஒன்றாகவும் செய்யப்படுகிறது.
"சூன்யப் புள்ளியில் பெண்" நல்ல நூல்.
- யுவபாரதி
No comments:
Post a Comment