May 27, 2010



5.25.2010

நடிகர் கமலஹாசனுக்கு மே 17 இயக்கம் விடுக்கும் வேண்டுகோள்


ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்ச கலந்து கொள்ளும் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா வரும் ஜூன் மாதம் 3 முதல் 5ஆம் தேதிவரை இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ளது.

இந்தத் திரைப்பட விழாவை இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு குழுவுடன் இணைந்து இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கி ஏற்பாடு செய்து நடத்துகிறது. இந்த விழாவை கொழும்புவில் நடத்துவதற்கு தமிழன அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்த விழாவை கொழும்புவில் நடத்தாமல் வேறு எந்த நாட்டில் நடத்தினாலும் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்பதை தமிழன அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஃபிக்கியை வலியுறுத்தின. இக்கருத்தை வலியுறுத்தி சென்னையிலுள்ள ஃபிக்கி அலுவலகத்திற்கே சென்று மே 17 இயக்கத்தின் சார்பாக கடிதம் வழங்கப்பட்டது. அதன் பிறகு உலகின் பல்வேறு இடங்களில் இயங்கிவரும் ஃஃபிக்கி அமைப்பின் பொறுப்பாளர்களுக்கும் மின்னஞ்சல் மூலம் ஐஃபா விழா கொழும்புவில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் எங்களின் கடிதங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை.


இதற்குப் பிறகுதான் தமிழ்த் திரைப்பட நடிகர் அன்புற்குரிய திரு. கமல்ஹாசன் அவர்களை இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் ஊடக பொழுதுபோக்கு வணிக அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு கோரி மே 17 இயக்கம் வேண்டுகோள் விடுக்கும் மனு ஒன்றை ஞாயிற்றுக் கிழமையன்று அவருடைய இல்லத்தின் முன் திரண்டு அவருடைய அலுவலக செயலரிடம் அளித்தது.எங்களுடைய இயக்கத்தின் மனுவிற்கு பதிலளித்து திரு. கமல்ஹாசன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஃபிக்கியின் ஊடக பொழுதுபோக்கு வணிக அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக அவர் பதிலளிக்காதது வருத்தத்தையே அளிக்கிறது.


கமலஹாசன் அவர்கள் தனது அறிக்கையில் கூறியிருப்பது போன்று ஃபிக்கி என்பது ஒரு சாதாரண வணிக அமைப்பு அல்ல. இந்தியாவின் முன்னணி தொழில் மற்றும வர்த்தக அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ள பலம் வாய்ந்த வாணிப அமைப்பாகும். அந்த அமைப்புதான் கொழும்புவில் நடைபெறவுள்ள திரைப்பட விருது வழங்கு விழாவின் பலமான பின்னணியாக செயல்பட்டு வருகிறது. அதனால் தான் மே 17 இயக்கம் ஃபிக்கி அமைப்பை எதிர்த்து இந்த இயக்கத்தை நடத்த வேண்டிய அவசியத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.கொழும்புவில் நடைபெறும் விழாவின் ஏற்பாட்டு அமைப்பாக விஸ்கிராஃப்ட் இண்டர்நேஷணல் செயல்படுகிறதே தவிர, அந்த விழாவின் இரண்டாம் நாள் நடைபெறவுள்ள வணிக ஒப்பந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளது ஃபிக்கி அமைப்பே. இதற்காக ஃபிக்கி அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சிறிலங்காவை ஒரு ‘புதிய சிறிலங்கா என்றும், வணிக மேம்பாட்டிற்கும் முதலீட்டிற்கும் வாய்பளிக்கும் உற்சாகமான நாடாக உள்ளது என்றும் வர்ணித்துள்ளது. வணிக மாநாட்டின் ஒருங்கிணப்பாளராக அமித் குமார் என்பவரை ஃபிக்கி நியமித்துள்ளது. முக்கியமாக சுற்றுலா உள்ளிட்ட பொழுதுபோக்குத் துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் உள்ள இடமாக திகழ்கிறது என்றும் கூறியுள்ளது. இதில் ஃபிக்கியின் பொழுதுபோக்கு வணிகப் பிரிவின் தலைவராக கமல்ஹாசன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதனால்தான் ஃபிக்கி அமைப்பின் ஊடக பொழுதுபோக்கு வணிக அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து கமலஹாசன் விலக வேண்டும் என்றும், அதன் மூலம் இலங்கை இனப்படுகொலையை மூடி மறைக்க நடத்தப்படும் திரைப்பட விருது வழங்கு விழாவிற்கு தமிழர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம்.ஆனால், தனது கோரிக்கையை ஏற்று ஃபிக்கி அமைப்பின் பல்வேறு துறைத் தலைவர்கள் விழாவை புறக்கணிக்கப் போவதாக தனது அறிக்கையில் கமலஹாசன் கூறியுள்ளார். ஃபிக்கியின் தலைவர்கள் புறக்கணிப்பது அல்ல முக்கியம், அந்நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தாமல் ஃபிக்கி தவிர்க்க வேண்டும் என்பதே தமிழின உணர்வாளர்களின் வேண்டுகோளாகும்.


இரண்டாவதாக, தனக்கு இந்திய அரசு வழங்கிய பத்ம ஸ்ரீ விருதை கமலஹாசன் திருப்பக் கொடுத்துவிட வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். மே 17 இயக்கத்தின் சுவரொட்டியில் எழுதப்பட்டிருந்து வாசகம் இதுதான்; பத்ம ஸ்ரீ பட்டத்தை திருப்பி அளித்த இயக்குனர் பாரதிராஜாவைப் போல நேர்மையான மனிதராக நிமிர்ந்து நில்லுங்கள்என்றுதான் கோரியிருந்தோம். தமிழின படுகொலைப் போரை தடுத்து நிறுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டிக்கும் முகமாக இயக்குனர் இமயம் பாரதி ராஜா பத்ம ஸ்ரீ பட்டத்தைத் துறந்ததுபோல, ஃபிக்கியில் நீங்கள் வகிக்கும் பதவியை துறந்து நேர்மையாக நிமர்ந்து நில்லுங்கள் என்பதுதான் நாங்கள் விடுத்த வேண்டுகோளின் பொருள் என்பதை கூறிக்கொள்கிறோம்.


மே 17 இயக்கத்தைப் பற்றி கூறுகையில் ஒரு சிறு குழுவினர் என்று கமலஹாசன் வர்ணித்துள்ளார். நம் கால்களைத் தழுவும் அலைகள் கடலின் பிரதிநிதிகளே. அவைகளே பூகம்பத்தின்போது சுனாமி அலைகளாக உருவெடுக்கின்றன. நாங்கள் தமிழின மக்களின் உணர்வுப் பிரதிநிதிகளே என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.


நன்றி


அன்புடன்,
(திருமுருகன்)
9444146806
ஒருங்கிணைப்பாளர்

நன்றி : www.tamilnathy.blogspot.கம


No comments: