July 02, 2012

சினிமாவுக்குப் போகும் யாத்திரை

- யுவபாரதி



எண்பதுகளில் எங்கள் பென்னாத்தூரில் ஒரே ஒரு திரையரங்குதான் இருந்தது. (இப்போதும் இன்னொன்று வந்திருக்க வாய்ப்பில்லை.) அதற்கு வாசன் டாக்கீஸ் என்று பெயர்.அது ஒன்றும் டென்ட் கொட்டகை இல்லை. முன்னால் பக்கத்திற்குப் பதினைந்தாக இரு வரிசை பெஞ்ச்சுகளும், பின்னால் சேர்ந்தாற்போல நான்கு வரிசை இருக்கைகளும் கொண்ட சிறிய தியேட்டர். அதில் பெரும்பாலும் பழைய படங்கள்தான் வரும். புதுப்படம் பார்க்கவேண்டும் என்றால் திருவண்ணாமலைக்குதான் போகவேண்டும்.

அப்போது தி.மலையில் மொத்தம் ஆறு திரையரங்குகள் இருந்தன. அவற்றில் கிருஷ்ணா, மீனாட்சி, சக்தி, அன்பு இவையெல்லாம் பழையவையாகத்  தோன்றும். புகழும் பாலசுப்பிரமணியரும் கொஞ்சம் புதியவை. கிருஷ்ணா, மீனாட்சி தவிர பிறவற்றில் எல்லாம் நிறைய புதுப்படங்கள் வரும்.

நாளிதழ் பார்த்து படங்களின் வருகை விவரம் அறிந்து வாரக்கடைசியில் சனியோ ஞாயிறோ தி.மலை செல்வதென்று முடிவாகும். பெரும்பாலும் எங்கள் குடும்பமும் செட்டியார் குடும்பமும் சேர்ந்துதான் போவோம். “டவுனுக்குப் போய் சினிமா பார்க்கப் போறேமே என்று அக்கம்பக்க நண்பர்களிடமெல்லாம் பயணம் குறித்து முன்பே சொல்லி பெருமிதப்பட்டுக் கொள்வோம் நானும் எஸ்ஸும். பயண நாள் விடியலின் ஏக்கத்தோடே முதல் நாள் தூங்கப்போவோம்.

பயண நாளின் காலையில் அம்மாவும் ஆச்சியும் சீக்கிரமே எழுந்து சமைத்து விடுவார்கள். எலுமிச்சை, தக்காளி, புளி, தேங்காய் இவற்றில் ஏதாவது இரு கலவை சாதம். எங்கள் வீட்டில் ஒன்றும், அவர்கள் வீட்டில் ஒன்றும் தயாராகும். தொட்டுக்கொள்ள ஊறுகாய், தொக்கு அல்லது வத்தல். எங்கள் வீட்டில் அம்மா, அப்பா, தம்பி, நான் என்று நால்வர், எஸ்ஸு வீட்டில் செட்டியார், ஆச்சி, எஸ்ஸு, அவனது அக்கா, தங்கை என்று ஐவர். ஆக ஒன்பது பேருக்கான மதிய உணவு மூடிகள் வைத்த இரு பெரிய வாளிகளில் நிரப்பப்படும். இரு வாளிகளையும் வைத்து எடுத்துச் செல்ல ஒரு பெரிய ஒயர் கூடை இருந்தது. துணைப் பதார்த்தங்கள், இதர தின்பண்டங்கள், தண்ணீர்ப் புட்டிகளுக்கு ஒரு உரப்பை.

காலை ஒன்பது மணிக்கு செஞ்சியிலிருந்து வரும் வள்ளி பஸ் ஏறினால் நாற்பது நிமிடத்தில் தி.மலை. அப்பாவும் செட்டியாரும் அரை மணி நேரத்திற்கு முந்தைய பேருந்திலேயே வந்து திரையரங்க டிக்கெட் வரிசையில் இடம் பிடிப்பார்கள். பிள்ளைகள் அம்மாக்களோடு வருவோம். பாலசுப்பிரமணியர் தவிர பிற திரையரங்குகளுக்குப் பேருந்து நிலையத்திலிருந்து பத்து இருபது நிமிட நடைப்பயணத்தில் சென்று விடுவோம்.
பாலசுப்பிரமணியருக்கு மட்டும்இன்னொரு பேருந்திலோ குதிரை வண்டியிலோ செல்வோம்.

பேருந்து நிலையத்திலிருந்து தியேட்டர் செல்கிற வரை சுவரொட்டிகளையும் கடந்து செல்லும் வாகனங்களையும் பார்த்தபடி வந்து, அம்மாக்களிடம் திட்டு வாங்குவோம். நடக்க ஆரம்பித்து கொஞ்ச நேரத்திலேயே என் தம்பியும் எஸ்ஸு தங்கையும் கால் வலிப்பதாகச் சொல்லி அம்மாக்களின் இடுப்பில் ஏறிக் கொள்வார்கள். அம்மாக்களிடம் இருக்கும் கூடை எங்கள் கைக்கு வந்துவிடும்.

எஸ்ஸின் அக்கா - என்னையும் எஸ்ஸையும் விட ஒரு வயது மூத்தது - ரொம்ப உஷாராக தின்பண்டமும் தண்ணீர் பாட்டிலும் உள்ள உரப்பையை வாங்கிக் கொள்ளும். இரு வாளிகள் உள்ள ஒயர் கூடையை நானும் எஸ்ஸும் சுமப்போம். ஆளுக்கொரு கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு 120 டிகிரி சாய்ந்துதான் நடக்கமுடியும். கூடை தரையில் தவறிப் பட்டுவிட்டால் பாட்டுதான். “குழந்தைங்க கையிலே குடுக்கிறதையும் பிடுங்கித் தின்னுட்டு், தெருவே குலுங்குற மாதிரி ஆட்டம் போடத் தெரியுது! சாப்பாட்டுக் கூடையைத் தூக்க மட்டும் தெரியாது!” என்று. அம்மாக்கள் வார்த்தைகளில் குழந்தைகள் என்பது என் தம்பியும் எஸ்ஸு தங்கையும். சின்னப் பிள்ளைகளான நாங்கள் ஏதோ நாலு வாய்தான் சாப்பிடப் போகிறோம். நிறைய சாப்பிடப் போவது பெரியவர்கள்தான். அப்படியானால் நியாயப்படி கூடையை யார் சுமக்கவேண்டும்? கேட்கத் தோன்றும். கேட்டதில்லை.

காலைக் காட்சி பார்த்ததும் அண்ணாமலையார் கோவில் கோபுரத்து இளையனார் சந்நிதி மண்டபத்துக்குப் போவோம். அதை ஒட்டியிருந்த கோபுரத்திலிருந்து அருணகிரிநாதர் விழுந்தபோதுதான், முருகன் தாங்கித் தடுத்தாட்கொண்டதாகச் சொல்வார்கள். அந்த முருகன் பேர்தான் கோபுரத்து இளையனார். அங்குதான் சாப்பாட்டுக் கூடை பிரித்து நிதானமாகச் சாப்பிடுவோம். அருகிலுள்ள சிவகங்கைத் தீர்த்தக் குளத்தில் பாத்திரம் கழுவுவோம். மதிய வெயில். கல்தரை. அந்த மண்டபத்திலிருந்து குளத்துக்குச் செல்வதற்குள் கால்கள் பொத்துப் போகும்.

அந்தக் குளம் மற்றும் உள்ளே யானை கட்டும் மண்டபத்திற்குப் பின்னுள்ள பிரம்ம தீர்த்தக் குளம் இரண்டிலுமே மீன்கள் நிறைய. நானும் எஸ்ஸும் சின்னப் பாத்திரங்களைக் கழுவும் சாக்கில் அதில் மீதம் வைத்த சோற்றைச் சிறுகச் சிறுக இட்டு, அதை வந்து சாப்பிடும் மீன்களை எண்ணுவோம். யார் இட்ட பருக்கைகளுக்கு நிறைய மீன்கள் வந்து சாப்பிட்டன எனப் போட்டி.

அதற்குள் அப்பாக்கள் அவசர அவசரமாக விழுங்கிவிட்டு மதியக் காட்சிக்கு வேறொரு படத்திற்கு டிக்கெட் எடுக்க முன்பே பறந்திருப்பார்கள்.

பெரும்பாலும் நாங்கள் எல்லோரும் செல்வதற்குள் அப்பாவும் செட்டியாரும் டிக்கெட் எடுத்துவிட்டு வாசலிலேயே எங்களுக்காகக் கடுகடுவென்று காத்திருப்பார்கள். ஏன் தாமதம் என்று அவர்கள் கேட்பதற்குள், மெதுவாகச் சாப்பிட்டார்கள் அல்லது சாப்பிட அடம் பிடித்தார்கள் என்று திட்டிக்கொண்டே என் தம்பியையோ எஸ்ஸு தங்கையையோ, முறையே அம்மாவோ ஆச்சியோ வலிக்காத மாதிரி இலேசாகத் தட்டுவார்கள். அந்தத் தட்டலுக்கே சின்னதுகள் இரண்டும் ஓவென்று அழத் துவங்கும். அப்பாக்கள் வாயை மூடிக்கொள்வார்கள். நானும் எஸ்ஸும் கொஞ்சம் சிரித்தாலும் “குழந்தைகளை அடிச்சா என்ன இளிப்பு உங்களுக்கு?” என்று சற்று பலமாகவே முதுகில் விழும். எங்களுக்கு அடி விழுந்ததும் சின்னதுகள் வாய் மூடிக் கொள்ளும். (இவையா குழந்தைகள்?) நாங்கள் பலமாக அடிபட்டாலும் அழமுடியாது. இங்கேயே, வாசலிலேயே, விட்டுவிட்டு பெரியவர்கள் மட்டும் படம் பார்க்க உள்ளே போய்விடுவதாக மிரட்டுவார்கள். அல்லது இன்னும் ஒரு அடி விழும்.

ஒவ்வொரு திரையரங்கிலும் ஒவ்வொரு தின்பண்டம் சிறப்பு. புகழ் என்றால் ஸ்வீட் பூரி. அன்பு என்றால் குட்டி வடை. சின்ன எள்ளுருண்டை அளவுக்கு இருக்கும். ஒரு வடை ஐந்து பைசா அப்போது.

மதியம் படம் போட்ட கொஞ்சம் நேரத்திற்குள் சின்னதுகள் இரண்டும் தூங்கிப் போகும். அம்மாவும் ஆச்சியும் பாதி பேச்சு. பாதி படம். சிவாஜி படம், பிரபு படம்  என்றால்தான் அப்பா நகராமல் பார்ப்பார். செட்டியார் எந்தப் படத்தையும் பொறுமையாகப் பார்க்கமாட்டார். பாதி நேரம் அப்பாவும் செட்டியாரும் கேன்டினில்தான் இருப்பார்கள். ஆனால் உள்ளே திரும்பி வரும்போதெல்லாம் கையில் எங்களுக்கென்று ஏதாவது தின்பண்டம் இருக்கும். ஆக, ஒழுங்காய்ப் படம் பார்ப்பது என்பது நானும் எஸ்ஸும் அவன் அக்காவும்தான்.

மதியக் காட்சியும் முடிந்தபின் மீண்டும் கோவில். திருவண்ணாமலைக்கு வந்து, அவர் கோவிலைக் கேன்டினாகவும் பயன்படுத்திவிட்டு அவரைப் பார்க்காமல் போனால் எப்படி? குளத்தில் கைகால் கழுவிக்கொண்டு அண்ணாமலையாரையும் அம்மனையும் பார்த்துவிட்டு வெளிவருவோம்.

அம்மாவும் ஆச்சியும் எஸ்ஸு அக்காவும் கோவில் வெளிவாசல் மண்டபத்தில் இருக்கும் வளையல் கடைகளை வலம் வருவார்கள். (பின்னாளில் ஒரு தீவிபத்திற்கு இரையாகி உருக்குலைந்து போனது அந்த மண்டபம்.) சின்னதுகள் இரண்டும் பொம்மைகளுக்காக அப்பாக்களைப் பிடித்துக்கொள்ளும். நானும் எஸ்ஸும் நாலணாவுக்கு விற்கும் சினிமாப் பாட்டு புத்தகங்களுக்காக அலைவோம். அன்றைக்குப் பார்த்த படங்களின் பாட்டு புத்தகங்களே கிடைத்துவிட்டால் பெருமகிழ்ச்சிதான். ஒருவாரம் அந்தப் படங்களின் கதையும் பாட்டுகளும்தான் அக்கம்பக்க நண்பர்களின் செவிகளுக்கு விருந்து.

ஒரு ஏழரை, எட்டு மணிக்கு தி.மலையிலிருந்து கிளம்புவோம். பேருந்தில் வரும்போதே பெரும்பாலும் பிள்ளைகள் தூங்கிப் போவோம். பென்னாத்தூர் வந்ததும் பெரியவர்கள் நல்ல மனநிலையில் இருந்தால் எழுப்பாமல் தூக்கிக் கொண்டு போவார்கள். கொஞ்சம் சலிப்பான மனநிலையில் இருந்தால் இலேசாகத் தட்டி எழுப்பி நடத்திக்கொண்டு போவார்கள். கோபமாக இருந்தால், ‘ஒரு கழுதை வயசாச்சு. ஊர் வந்தது கூடத் தெரியாமத் தூங்கறதைப் பாரு என்று ஒரு அறைவிட்டு எழுப்பித் தரதரவென்று இழுத்துச் செல்வார்கள்.

அழமாட்டோம். அடுத்த முறை சினிமாவுக்குக் கூட்டிப்போகமாட்டோம் என்று சொல்லிவிட்டால்?