டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி |
டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி காலமானார் என்ற செய்தியை இன்றைய நாளிதழில் கண்டேன். தொண்ணூறுகளின் துவக்கத்தில் பள்ளியிறுதி - கல்லூரி மாணவர்களில், சற்றே வாசிப்புப் பழக்கம் கொண்ட பலருக்கு அவருடைய 'எண்ணங்கள்', 'உன்னால் முடியும் தம்பி' போன்ற சுயமுன்னேற்ற நூல்களின் தாக்கம் இருந்திருக்கும்.
அப்போது கல்லூரிப் படிப்பை இடைநிறுத்தி, வேலைக்கு வந்திருந்த எனக்கு அவரது நூல்கள் மீது அலாதிப் பிரியம் இருந்தது. அவ்வாசிப்பு தந்த உத்துவேகத்தில் திருவண்ணாமலையிலிருந்து நான், அவரை அவரது சென்னை திருவான்மியூர் இல்லத்திற்குச் சென்று இருமுறை சந்தித்ததாக நினைவு இருக்கிறது.
அமைப்புருவாக்கம் - செயல்பாடு என்ற எண்ணம் என்னிடம் முகிழ்த்திருந்த தருணம் அது. அவரது 'மக்கள் சக்தி இயக்க'த்தின் கிளை ஒன்றை தி.மலையில் உருவாக்க வேண்டும் எனத் தோன்றியது. அப்போது தி.மலை மாவட்டத்தில் போளூரில் மட்டும் அவ்வியக்கத்தைச் சேர்ந்த ஒருவர் செயல்பட்டார் என்பது தெரிந்தது. எனக்கு அப்போது தி.மலையில் இருந்த என் வயது நண்பர்களுடன் சேர்ந்து அவ்வியக்கம் துவக்க முயன்றேன். ஒரு பள்ளிக்கூடச் சிற்றறைக் கூட்டத்தோடு அவ்வமைப்பு முயற்சி முடிந்து போனது.
அதன் பிறகு எனது புத்தகவாசிப்பைத் தீவிர இலக்கியம் பக்கம் திருப்பியவர் எனது சித்தப்பா ஹவி. இன்றும் என்னைப் பிடித்திருக்கும் இலக்கிய வியாதியைத் தந்த மதிப்பிற்குரிய கிருமி அவரே. மறைந்த காஞ்சிபுரம் வெ.நாராயணன் நடத்திவந்த 'இலக்கிய வட்டம்' அறிமுகமானதும் அவராலேயே. அவ்வமைப்பு எனது வாசிப்பை விரிவுபடுத்தியது. பூங்குயில் சிவகுமார் எனும் நண்பனையும் அங்குதான் பெற்றேன். சூறைக்காற்றில் சருகெனச் சுழன்ற என் வாழ்வின் எத்தருணத்திலும் விலகல் உணரா நட்பு அவனுடையது. அமுதகீதன், நா.முத்துக்குமார், புல்வெளி ராதாகிருஷ்ணன், காமராஜ் ஆகியோரும் அறிமுகமாயினர்.
காஞ்சி இலக்கிய வட்டத்தின் தாக்கத்தால் வாசு, பானு, சுமித்ரா, சாந்தி அக்கா, பிரசன்னா முதலான நண்பர்களோடு சேர்ந்து ‘அருணை இலக்கிய வட்டம்’ என்ற அமைப்பைத் துவங்கி, அதன் செயலாளராகச் செயல்பட்டேன். ஜெயராஜும் நாராயணனும் வந்து இணைந்தார்கள். அதன் முதல் கூட்டத்தை எனது (திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி) தமிழாசிரியர் புரிசை நடராசனை அழைத்து வந்து நடத்தியதாக நினைவு. எக்ஸ்னோரா கல்ச்சுரல் அகாடமி என்ற அமைப்பிலும் மாவட்டத் தலைவராகவும் இருந்தேன். பின் விலகிவிட்டேன்.
உள்ளூர்த் தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை அழைத்து, சில கூட்டங்களையும் நடத்தினேன். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்திச் சான்றிதழ்கள் கூட எங்கள் அமைப்பால் வழங்கப்பட்டன. நாளடைவில் அமைப்பிலிருந்த இளைஞர்களில் பலருக்கு நூல்வாசிப்பை விடவும் 'பாப்பையா-லியோனி பாணி' நகைச்சுவைப் பட்டிமன்றங்களின் மீது பெரும்பற்று ஏற்பட்டு, சிறுகச் சிறுக ஒரு பட்டிமன்றக் குழுவாகவே எங்கள் அமைப்பு மாறத் துவங்கியது. இம்மாற்றம் எனக்கு அதிருப்தியளிக்க ஆரம்பித்தது. இதனால் அமைப்பை வழிநடத்துவது சார்ந்த கருத்து முரண்கள் வெளிப்படத் தொடங்கின. அதே காலத்தில் எனது இலக்கிய வாசிப்பு என்னை அதே தி.மலையில் வெகுகாலம் இயங்கிவந்த தமுஎச-வுடன் நெருங்கச் செய்தது. ஒரு கட்டத்தில் என் உணர்வு உந்துதலால் உருப்பெற்ற ‘அருணை இலக்கிய வட்ட’த்திலிருந்து நானாகவே விலகிவிடுவது நல்லது என முடிவெடுத்து, தமிழாசிரியர் சபரியிடம் அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, விலகிவிட்டேன்.
ஒரு ஐந்து ஆண்டுகள் தமுஎச-வில் தீவிரமாகச் செயல்பட்டேன். கருணா, பவா, சாமிநாதன், பல்லவன் முதலான பலரின் நட்பு, தீவிர வாசிப்பு, செயல்பாடு, எழுத்தாளர்களின் அறிமுகம், பரிச்சயம் என என் களம் விரிவு பெற்றது. தமுஎச-வில் நான் பெற்ற அனுபவங்கள் குறித்து 'நான் கண்ட தமுஎச' அல்லது 'எனது தமுஎச அனுபவங்கள்' அல்லது 'தமுஎச-வும் நானும்' என்பதில் ஏதேனுமொரு பெயரில் ஒரு பெரிய நூலே எழுதலாம். நிற்க.
டாக்டர் உதயமூர்த்தியின் நூல்கள் குறித்து இன்றைய தேதியில் எனக்கு பெருமதிப்பு இல்லைதான். எனினும், எனது வாழ்வில், வாழ்வு வழி உருவான ஆளுமையில் அவரது தாக்கமும் இருக்கிறது. மேலும், வெறும் சுயநலத்தையே நெறியாக சுயமோகத்தையே ஆளுமையாக அறிவுறுத்தும் குப்பைகளென, பல சுயமுன்னேற்றவாதிகளின் நூல்கள் வெளிவந்து மிரட்டும் இன்றைய காலத்தில், இவற்றோடு ஒப்பிடுகையில், உதயமூர்த்தியின் நூல்கள் காட்டும் பொதுநல நோக்குள்ள ஆளுமையுடனான சுயமுன்னேற்றம் என்ற கருத்தியல் உயர்ந்ததே என்றும் தெரிகிறது. அவரது தாக்கமே ‘உன்னால் முடியும் தம்பி’ எனும் திரைப்படத்தின் கமலின் கதாபாத்திரம் - அப்பாத்திரத்தின் பெயரும் உதயமூர்த்திதான் - என்பது பலருக்கு நினைவிருக்கும்.
டாக்டர் உதயமூர்த்திக்கு எனது இதயப் பூர்வமான அஞ்சலி.
- யுவபாரதி
2 comments:
நானும் அவருடைய எண்ணங்கள், உன்னால் முடியும் தம்பி இன்னும் சில நுல்களை படித்திருக்கிறேன். அவருடைய அமெரிக்க வாழ்க்கையும் படிதிருக்கிறேன். அவருடைய இறப்பு பேரிழப்பே!
I like Nenjame Anjathe Nee. Must read book for All Youth.
Post a Comment