1) நகராட்சி வாகனங்களில் கதவுகள் பின்பக்கம் உள்ளன. பள்ளி வாகனங்களில் கதவுகள் பக்கவாட்டில் உள்ளன.
2) நகராட்சி வாகனங்களைக் கண்டதும் நாய்கள் ஓடிப் பதுங்குகின்றன. பள்ளி வாகனங்களைக் கண்டதும் பிள்ளைகள் ஓடிப் பதுங்குகின்றன.
3) நாய் பிடிப்பதற்காக நகராட்சி வாகனங்களை தெருவாசிகள் போராடி அழைத்து வரவேண்டியிருக்கிறது. பிள்ளை பிடிப்பதற்காக பள்ளி வாகனங்கள் அவையாகவே தெருத் தெருவாக வருகின்றன.
4) நகராட்சி வாகனங்களில் வரும் நகராட்சி ஊழியர்களே நாய்களைப் பிடிக்கவேண்டியிருக்கிறது. பள்ளி வாகனங்களைப் பொருத்தவரை பெற்றோரே பிள்ளைகளைப் பிடித்துக் கொடுத்துவிடுகின்றனர்.
5) நகராட்சி வாகனங்கள் கழுத்தில் பட்டி அணிந்த நாய்களைப் பிடித்துச் செல்வதில்லை. பள்ளி வாகனங்கள் கழுத்தில் பட்டி அணிந்த பிள்ளைகளையே பிடித்துச் செல்கின்றன.
6) நகராட்சி வாகனங்களில் ஏற்றப்பட்ட நாய்களில் மிரண்டு ஒடுங்கி அமைதி காக்கின்றன சில. ‘வள் வள்’ என்று கத்திக் கொண்டே இருக்கின்றன சில. பள்ளி வாகனங்களில் ஏற்றப்பட்ட பிள்ளைகளிலும் மிரண்டு ஒடுங்கி அமைதி காக்கின்றன சில. ‘வீல் வீல்’ என்று கதறிக் கொண்டே இருக்கின்றன சில.
7) நகராட்சி வாகனங்கள் நாய்களை அவை வாழும் பகுதியிலிருந்து ஒரே நாளில் அன்னியப்படுத்துகின்றன. பள்ளி வாகனங்கள் பிள்ளைகளை அவை வாழும் பகுதியிலிருந்து வருடக்கணக்கில் படிப்படியாக அன்னியப்படுத்துகின்றன.
2 comments:
எப்படிங்க இப்படி...?!!!
ரொம்ப சிந்திக்கிறேன் இல்லே...!
Post a Comment