பெரும் பொங்கலுக்கு மறுநாள் - மாட்டுப் பொங்கலன்று - காலை கணுப்பொடி வைப்பது வழக்கம்.
முதல் நாள் பொங்கல் பானையோடு கட்டிப் படையலிட்ட மஞ்சள் இலைகளை எடுத்து சன்னல் திண்டில் வாழையிலை போல விரித்து வைத்து விருந்தினர்க்கிடுவது போல் நீர் தெளிப்போம். ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறோமோ அத்தனை இலை.
ஒவ்வொரு இலையிலும் ஒவ்வொருவர் ஐந்தைந்து சின்ன விள்ளல்களாக மூன்று விதப் பொங்கல். சர்க்கரைப் பொங்கல், மஞ்சள் பொங்கல், தயிர்ப் பொங்கல் என. முதல் நாள் பொங்கிய சர்க்கரைப் பொங்கல், அதனுடன் மஞ்சள் தூள் கலந்து, அதுபோலவே தயிர் கலந்து என இப்படி.
குடும்பத்திலுள்ள அனைவரும் வரிசையாக நின்று இப்படிச் செய்துவிட்டு பின்வருமாறு ஒவ்வொருவரும் சொல்வோம்.
'கணுப்பொடி வெச்சேன்
காக்காப்பொடி வெச்சேன்
காக்காய்க்கும் எனக்கும் கல்யாணம்
உன் கூட்டம் கலைஞ்சாலும்
என் கூட்டம் கலையாமல் காப்பாத்து'
இதைச் சொல்லிவிட்டு மேற்படி பொங்கல் இலைகளை கூரை மீது வைத்து குரலிட்டுக் காகங்களை அழைப்போம்.
இவ்வழைப்பில் வரும் கல்யாணம் எனும் சொல்லில் பொருள் மங்கலம் என்பதாயிருக்கும். வெளியூரிலிருந்து பொங்கலுக்காக ஊருக்கு வந்த குடும்பத்தினர் மறுநாள் இதைச் செய்யாமல் ஊருக்குக் கிளம்பக் கூடாது என்பார்கள்.
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை. நோக்க நோக்கக் களியாட்டம்.
No comments:
Post a Comment