February 04, 2017

கரும்போர்வை எப்போது அகலும்?

ஒரு வாரமாகிவிட்டது. சென்னையை ஒட்டிய வங்கக் கடல் பரப்பை எண்ணெய்ப் படலம் மூடத் தொடங்கி. எப்போது தெளியுமோ தெரியாது. கடலோரக் காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படை உள்ளிட்ட அரசுத் துறையினரும், தன்னார்வம் மிக்க பொதுமக்களும் எண்ணெய்ப் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறைந்த அளவில் எந்திரங்களையும் அதிக அளவில் மனிதர்களையும் கொண்டுமே இப்பணி நடைபெறுகிறது. தொடர்ந்து வெளிவரும் செய்திகளும் புகைப்படங்களும் அச்சமூட்டுகின்றன.
இப்பணியில் ஈடுபடும் மனிதர்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமில்லை என்கிற அச்சம் ஒருபுறம். படைவீரர்கள் தவிர மற்ற எல்லோரும் மூக்கை மட்டும் கட்டிக்கொண்டு ஏதோ வீட்டுக்கிணற்றிலிருந்து கசடுகளை வாளியில் இறைத்து வெளிக்கொட்டுவது போலவே செய்யவேண்டியிருக்கிறது. அவர்களது தோலுக்கோ நுரையீரலுக்கோ ஏதும் பாதிப்பு ஏற்படுமோ என்கிற அச்சம். சட்டப்படி தடைசெய்யப்பட்டதாகச் சொல்லிக்கொள்ளும் நம் நாட்டில் கழிவுநீர் அகற்றும் பணிகளில் இன்னும் பல்லாயிரம் பணியாளர்கள் இப்படியே ஈடுபடநேர்ந்து உயிரையே இழந்து கொண்டிருக்கின்றனர்.
எண்ணெய்க் கப்பல்களில் விபத்து நேர்ந்தால் இது போன்ற சீர்கேடு நடக்க வாய்ப்புண்டு என்கிற நிலையில் அதை உடனடியாகப் போக்கும் வகையில் சம்பந்தப்பட்ட துறைமுகங்களில் போதுமான தரமான எந்திரங்கள் ஏன் இல்லை என்கிற வேதனை மறுபுறம். மாநகராட்சியின் கழிவுநீர் அகற்றும் எந்திரம் கொண்டு இதை எப்படிச் செய்யமுடியும் எனத் தெரியவில்லை. பெங்களூரிலிருந்துதான் சில நவீன எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன எனச் சொல்கிறார்கள். இங்கு ஏன் அவை இல்லை.
ஒரு வார காலமாக நீடிக்கிற இச்சூழல் குலைவால் உயிரிழக்கிற மீன்கள் உள்ளிட்ட பல்வேறுகடல்வாழ் உயிரிகள் குறித்த கவலை இன்னொரு புறம். மீன் நமக்குப் பிரதான உணவு என்பதாலும், அதன் செதில் வழி ஊடுருவும் எண்ணெயால் நமக்குப் பாதிப்பு என்பதாலும் மட்டும் சொல்லவில்லை.
கடல்வாழ் உயிரிகள் பற்றிய துறை சார்ந்த அறிவு கொண்டவன் இல்லை என்றாலும், வன உயிரிகள் மற்றும் கடல்வாழ் உயிரிகள் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் உள்ளார்ந்த ஆர்வமுள்ளவன், அதில் கண்ணுறும் சில உயிரிகள் குறித்த மேலதிகத் தகவல்களைத் தேடிப்படிப்பதில் விருப்பமுள்ளவன் என்ற வகையில் இப்போது உண்மையிலேயே எனக்குக் கலக்கமேற்பட்டுள்ளது.
கடலின் மீது விரிக்கப்பட்டுள்ள கரும்போர்வையெனக் காட்சிதருகிற இப்படலத்தால் அப்பகுதியில் சூரியஒளி கடலுக்குள் செல்லப்போவதில்லை. இதனால் அதன் அடியிலுள்ள கடல் தாவரங்கள் அழுகிப் போகும். அவற்றை உணவாகவும் உறைவிடமாகவும் கொண்ட உயிரிகள் பரிதவிக்கும். இப்படலத்தால் பிராணவாயுவும் செல்லாது. ஆழ்கடலிலும் வாழும் தகவமைப்புள்ள ஒரு சில உயிரிகள் மட்டுமே இப்பகுதியிலிருந்து போராடி இடம்பெயரும்.
கடற்கரையை ஒட்டி வாழும் மீன், பாம்பு, நண்டு, நத்தை, சிப்பி, ஆமை என அத்தனை உயிரிகளும் பாதிக்கப்படும். இவ்வுயிரிகள் வெளிவிடும் கரியமில வாயுவைக் கொண்டு வாழும் கடல்வாழ் நுண்ணுயிரிகளும் பாதிப்புக்குள்ளாகும். இந்நுண்ணுயிரிகளை உட்கொண்டு வாழும் நண்டு, நத்தைகளின் வாய்க்குள் கடலுள் இறங்கும் எண்ணெயும் கலந்து சென்று அவற்றைக் கொல்லும். இதனால் நண்டு, நத்தைகளை உண்டு வாழும் உயிரிகளும் உணவுக்குத் தவிக்கும். இச்சூழல் சமன்குலைவால் எப்பேர்ப்பட்ட உணவுச் சங்கிலி அறுபட்டுள்ளது.
வனத்தை அழித்து வன உயிரிகளின் உணவுச் சங்கிலியை ஏற்கனவே அறுத்தாயிற்று. பல உயிரிகள் காணாமல் போய்விட்டன. சில உயிரிகள் வழியற்று அலைகின்றன. அடுத்த இலக்கு கடல். பல சமயம் கவனத்தோடும் சில சமயம் பொறுப்பின்மையாலும் கடல் உயிரிகளின் உணவுச் சங்கிலியையும் அறுக்கத் தொடங்கியாயிற்று.
கடலைப் போர்த்தியுள்ள கரும்போர்வை சில நாட்களில் அகன்றுவிடலாம். அப்புறம் இது பற்றி நினைக்கவும் போவதில்லை. கருத்தைப் போர்த்தியுள்ள கரும்போர்வை எப்போது அகலும் என்பதுதான் தெரியவில்லை.
- யுவபாரதி மணிகண்டன்


No comments: