நன்றி : யாவரும்.காம்
வேலூர்
சாலையில் இன்றைக்கு இராமகிருஷ்ணா ஓட்டல் இருக்கிற இடம் தாண்டி மேற்கே செல்லும் தெருவில்
இருந்தது அவர் வீடு. திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் வரலாற்றுத் துறை விரிவுரையாளராக
இருந்தார் சரவணன். நல்ல உயரம். மாநிறம். மெலிந்த உடல்வாகு. அப்போதே வயது முப்பதை எட்டியிருந்தும்
திருமணம் செய்துகொள்ளவில்லை. தாயும் நான்கு சகோதரிகளும் இருந்தனர். தகப்பனார் இல்லை.
திருவண்ணாமலை
பக்கம் ஒரு கிராமத்தில் நான் வேலை பார்த்தபோது அலுவலக நண்பர் ஒருவர் மூலம் அறிமுகமானார்
சரவணன். வரலாறு கற்பிப்பதைத் தொழிலாக மட்டும் பார்க்காத அவர் தொடர்ந்து கற்பவராகவும்
இருந்தார். தன் சேமிப்பிருந்த பல நூல்களை எனக்குப் படிக்கத் தருவார். ஆங்கில நூல் வாசிப்பு
சார்ந்து எனக்கிருந்த தயக்கத்தை அவரால் சற்றேனும் விலக்க முடிந்தது. படிக்கவேண்டியவை
என்று அவர் பரிந்துரைத்த வரலாற்று நூல்களின் பட்டியல் உள்ளூரிலேயே அஞ்ஞாத வாசம் வாழ்ந்த
காலத்தில் என் மனதின் அடியாழத்தில் மறைந்துவிட்டது. பிறகு சென்னைக்கு வந்து, எனக்கான
தேடலோடு சுறுசுறுப்பாக தனித்தியங்கிய முதல் வருடம், மாலைப் பொழுதுகள் திரைப்பட வர்த்தக
சபையின் பன்மொழித் திரைப்படங்களோடும், வேலை ஓய்ந்த பகல்கள் கன்னிமாரா நூல்களோடுமாக
இருக்கையில், அவர் அளித்த பட்டியலில் நினைவுக்கு மீண்டதைத் தேடிப் படித்தேன்.
நேரத்தை
மிகக் கவனமாகச் செலவழிப்பார் சரவணன். எதிர்காலம் குறித்த திட்டத்தைத் தெளிவோடும் நம்பிக்கையோடும்
சொல்வார். ஒரு பக்கம் வேலை, மற்றொரு பக்கம் அருணை இலக்கிய வட்டம் - எக்ஸ்னோரா, இன்னொரு
பக்கம் தீராத வாசிப்பு - விவாதம் என்று நான் இயங்கிய காலம் அது. என் செயல்பாடுகளைப்
பாராட்டுவதோடு, ‘வெறும் எழுத்தர் பணியோடே போதும் என்று இருந்துவிடாதே. உனக்கிருக்கும்
ஆர்வத்துக்கும் திறமைக்கும் வயதுக்கும், இந்திய குடிமைப் பணிகள் அல்லது தமிழக அரசின்
குரூப்-1 தேர்வுகளை எழுது. பட்டம் முடித்ததும் முதலில் குரூப்-2வாவது எழுது…’ என்று
அடிக்கடி சொல்வார். குடும்பச் சூழலா கல்வியா என்ற மனப்போராட்டத்தில், படித்துக்கொண்டிருந்த
கணிப்பொறி பட்டப்படிப்பைக் கைவிட்டு, பதினெட்டு வயதிலேயே வேலைக்கு வந்துவிட்ட எனக்கு,
அஞ்சல்வழியில் இளங்கலை – முதுகலைப் பட்டங்கள் படிக்கமுடிந்ததற்கு, படிப்பில் இருந்த
ஆர்வம் மட்டும் காரணமில்லை எனத் தெரிகிறது. விரிவுரையாளர் பணியில் இருந்தபோதும், மாவட்ட
ஆட்சியர் அல்லது துணை ஆட்சியர் தேர்வே சரவணனின்
இலக்காக இருந்தது.
பட்டம்
பெற்றதும் குரூப்-2 தேர்வு எழுதித் தேறினேன். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு வந்ததை
அவரிடம் சொன்னபோது பெருமிதப்பட்டார். சென்னையில் எங்கோ மூலையில் வினாத்தாள் கசிவு
நடந்ததாகக் கண்டறியப்பட்டதால் தேர்வே இரத்து என்று நாளிதழ்கள் அறிவித்தன. இழப்பும்
துவளலும் பழகியிருந்த என்னை விடவும், எப்போதும் நம்பிக்கையோடேயிருந்த அவர்தான் மிகவும்
வருத்தப்பட்டார். அடுத்த ஆண்டும் அதே தேர்வுக்கு விண்ணப்பித்து படிக்கத் தொடங்கினேன்.
முந்தைய ஆண்டே என் காலைக் கவ்வத் தொடங்கியிருந்த குடும்பத்தின் கடன் பிரச்சனை, அடுத்த
ஆண்டு கழுத்தை இறுக்கியது. புத்தகம் கீழே விழுந்தது.
என்
உற்சாகமின்மை அவருக்கும் தொற்றிக்கொள்ளுமோ என்ற அப்போதைய அச்சமோ, எதிர்காலம் குறித்த
அவநம்பிக்கையும் தனிமைப்பாடுமாகத் திரிந்த என் மனநிலையோ, ஏதோ ஒன்று அவரைச் சந்திப்பதையும்
தவிர்க்கச் செய்தது. ஒரு நாள் கிரிவலப்பாதையில்
ஏதோ ஒரு மண்டபத்தில் விதானம் பார்த்து உடகார்ந்திருந்தவனை அடையாளம் கண்டு பேசிப் போனார்.
குபேர லிங்கம் கோவிலாய் இருக்கலாம். இடைப்பட்ட ஒரு தங்கைக்குத் திருமணம் முடித்துவிட்டிருக்கிறார்.
அடுத்த தங்கைக்கும் வரன் வந்திருப்பதாகச் சொன்னார்.
இரு
வருடங்கள் கடந்திருக்கும். கும்பகோணம் பக்கத்துக் கோவில்களை எல்லாம் ஒரு வாரம் கால்தேய
அளந்துவிட்டு, வழக்கம்போல தவிர்க்கவியலாமையும் சலிப்பும் தோய்ந்த ஒரு விடியலில் ஊர்
திரும்பினேன். பேருந்து நிலையத்தின் பக்கவாட்டுச் சுவரில் கல்லூரி மாணவர்கள் ஒட்டியிருந்த
கருப்புச் சுவரொட்டி தென்பட்டது. அதே பேருந்து நிலையத்தின் பிரதான வாயிலுக்கு எதிரிலேயே
நான்கு நாட்கள் முன்பு ஏதோ ஒரு வாகனம் மோதி இறந்திருக்கிறார் சரவணன்.
ஒரு
வாரம் கழித்து அவர் வீட்டிற்குப் போனான். அவர் அம்மாவிற்கு என்னை நினைவிருந்தது. அழுதார்.
“குரூப்-1 பரீட்சையிலே பாசாயிட்டான்னு லெட்டர் வந்ததுங்க தம்பி. அதைச் சில பேருக்குச்
சொல்லணும்னு அன்னைக்குக் காலைலே வண்டியை எடுத்துக்கிட்டுப் போனவன்தான். உங்ககிட்ட பேசுனானா?...
அவரு போனப்பக் கூட அவன் இருக்கான்னு நான் கலங்கலையே. இனிமே…”
பல
வருடங்கள் ஓடிவிட்டன. பின்னொருகாலம் அதே கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த வே.நெடுஞ்செழியன்
எனக்குப் பழக்கமானபோது, சரவணன் பற்றிய நினைவுகளையும் பேசுவேன். ஈசானிய லிங்கம் கோவிலுக்கு
எதிரில் சாலையை ஒட்டியே இருக்கிறது சரவணனின் கருப்பு நிறக் கல்லறை. பிறப்பு இறப்பு
விவரங்களோடு கல்லிலேயே வரையப்பட்ட அவரது முகமும் இருக்கிறது. சுடுகாட்டுச் சாலை விரிவாக்கம்
என்ற பெயரில் அவரது கல்லறையும் ஒரு நாள் இல்லாமல் போகக்கூடும்.
-
யுவபாரதி
4 comments:
நெஞ்சை நெகிழச் செய்த பகிர்வு. :(
சரவணன் நெகிழ வைத்தவர்
மனதை மிகவும் பாதித்தது.
Very touched... rajamani
Post a Comment